செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஏச்சுப் பிழைக்கும்

இவ்வுலக வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு முறை மட்டுமே. அதுவும் சொற்ப காலமே. இள வயதில் தமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் எனவும் அது மிகவும் நீண்ட காலம் எனவும் எண்ணி அந்த வயதில் தாம் செய்யத்தக்க கடமைகளை முறையாகச் செய்யாமல் பொழுது போக்கிவிட்டுப் பிற்காலத்தில் வருந்துவோர் பலருளர். அது மட்டுமன்றி நம்மிற் பலர் நம்மைக் காட்டிலும் பொருளாதாரத்தில் சிறந்து நாம் அடையாத வசதிகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்கள் மேல் பொறாமை கொள்வதுடன் நாமும் அவர்களைப் போல அல்லாது அவர்களைக் காட்டிலும் வசதி படைத்தவராக வேண்டுமெனும் பேராசையால் நேர்மையைக் கைவிட்டுக் குறுக்கு வழியில் செல்கின்றனர். இவ்வாறு குறுக்கு வழியில் செல்வந்தராகும் மனிதர்கள் என்றும் ஒரு குற்ற உணர்வுடனும், எங்கே மாட்டிக்கொள்வோமோ எனும் அச்ச உணர்வுடனும் வாழ நேரிடுவதால் வாழ்வை அவர்களால் முழு மகிழ்ச்சியோடு வாழ முடிவதில்லை. 

அதிகமாக உண்டவன் அஜீரணத்தால் அவதியுறுவது போல அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்தவன் மன அமைதியின்றி அல்லலுற நேரிடுகிறது.அத்தகைய செல்வத்தை அவன் நேர் வழியில் உழைத்துச் சேர்த்த போதிலும், எங்கே தன் பொருளை எவரேனும் களவாடுவரோ எனும் அச்சம் அவன் மனதில் நிலைபெறலாகும். அளவோடு பொருள் சேர்த்து அனைவரோடும் பகிர்ந்து உண்ணும் மனப் பக்குவம் உள்ளவன் வாழ்வில் பிறர் அனைவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியோடும் ஈடுபாட்டோடும் வாழ முடிகிறது. இதன் காரணம் அவனது மனதில் கவலை என்றும் வருவதில்லை. எந்த ஒரு இழப்பையும் அவன் மனம் ஏற்றுக்கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் தன்மை அவனிடம் இயல்பாக நிலைபெறுவதால அவன் மகிழ்சியாக வாழ்கிறான்.. 

இந்த உலக வாழ்வு அநித்தியம் எனும் உண்மையை உணர்ந்தோர் அழியும் பொருட்கள் மீது பற்றை அகற்றி அழியாப் பொருளான எங்கும் நிறைந்த பரம்பொருளை எண்ணி லேசான மனதுடன் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்கின்றனர். இத்தகைய ஞானிகள் இவ்வுலகிலேயே ஸ்வர்க்கத்தைக் கண்டு நித்திய சுகத்தை என்றும் அனுபவிக்கின்றனர். இதற்கு மாறாக சுயநல நோக்குடன் திருட்டும் புரட்டும் செய்து பலரது வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொண்டு வெறும் பகட்டான போலி வாழ்வை மேற்கொள்பவன் என்றும் எதிலும் திருப்த்தியடையா மன நிலையுடனே வாழ்ந்து மனக்குறையுடனே மடிகிறான். இத்தகையவர்க்கு இவ்வுலகமே நரகமாகிறது.

ஏச்சுப் பிழைக்கும்

திரைப்படம்: மதுரை வீரன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி
ஆண்டு: 1956

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
நல்லா நெனச்சுப் பாருங்க நல்லா நெனச்சுப் பாருங்க

தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் 
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க 

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் ஆஆஆஆஆ ஏஏஏஏஏ
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக