புதன், 23 அக்டோபர், 2013

பிள்ளைக் கனியமுது ஒண்ணு

உலகில் மாந்தர்க்கும் ஏனைய பிற உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வில் மிகவும் இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்கும் செல்வம் பிள்ளைச் செல்வமே என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும். எனினும் மனித குலம் பிற உயிரினங்களனைத்தையும் விட மேம்பட்டதாக விளங்குவதால் அவர்கள் பெறும் மக்கள் பேருக்குப் பிள்ளைகளாக இராமல் அறிவுடையவர்களாகவும் அன்பும் கருணையும் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

எனும் வள்ளுவர் வாய்மொழி இதனை உறுதி செய்கின்றது.

மிருகண்டு எனும் முனிவரும் அவரது பத்தினியும் நீண்ட காலம் புத்திரப் பேறு கிட்டாமையல் இறைவனை மனமுருகி வேண்டினர். இறைவரும் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய அறிவிற் குறைந்த புத்திரன் வேண்டுமா அல்லது 16 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கும் புத்திரன் வேண்டுமா எனக்கேட்க அவர்கள் அறிவிற் சிறந்த பக்திமானாக விளங்கும் புத்திரனே வேண்டுமெனக் கேட்டு அதன் படியே மார்க்கண்டேயனை மகனாகப் பெற்றதாகவும், பின்னர் மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது நிறைந்த நிலையில் அவனது உயிரைக் கொண்டுபோக யமன் வந்ததாகவும், யமன் பாசக்கயிற்றை அவன் மீது வீசுகையில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகத் தழுவி இறைவனை வேண்டவும் இறைவன் யமனைக் காலால் எட்டி உதைத்துப் பின் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதினனாக வாழ வரமருளியதாகவும் புராணம் கூறுகிறது. 

இதன் காரணமாகவே வள்ளலார் 

அருமருந்தொரு தனி மருந்து 
அம்பலத்தில் கண்டேனே

காலனைக் காலால் உதைத்த மருந்து
காமனைக் கண்ணால் எரித்த மருந்து
---------------------
மாணிக்கவாசகர் கண்ட மருந்து 

என்றொரு பாடலிக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலை என் தந்தையார் பல முறை சிவபூஜை செய்கையில் பாடக் கேட்டிருந்தும் மனனம் ஆகவில்லை. தற்போது அவர் இவ்வுலகில் இல்லை. இப்பாடல்இணையத்திலும் கிடைக்கவில்லை. தெரிந்தவர் யாரேனும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

"இல்லறமல்லது நல்லறமன்று" என்று ஔவையார் மொழிந்த நீதி தொன்றுதொட்டு நம் பாரத தேசத்தில் மக்கள் கடைபிடித்து வருவதாகும். முற்றும் துறந்த முனிவர்களும் இல்லறத்திலிருந்து கொண்டே தவத்தில் ஈடுபட்டதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நாத்திகர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் முற்றும் துறந்த முனிவர்கள் திருமணம் செய்துகொள்வது தவறு என்பதான ஒருகோட்பாடு நடைமுறைக்கு வந்து அதன்படிப் பலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவறம் மேற்கொண்டு வாழ்வதும் நிகழ்ந்தது. இத்தகைய துறவிகளில் பலர் தம்மை ஊராரின் கண்களுக்குத் துறவி போல் காண்பித்துக் கொண்டு திரை மறைவில் இல்லறவாசிகளுக்கும் கிட்டாத அளவில் சிற்றின்பங்களில் திளைத்து வாழ்வதும் பல சமயங்களில் அறியப்பட்ட செய்தியாகும்.

இத்தகைய துறவி எனும் போர்வையில் திரியும் ஆஷாடபூதிகளின் பின்னே செல்லாமல் மனிதர்கள் யாவரும் இல்லறத்தை நல்லறமாக்கி, அறிவுசான்ற புத்திரர்களைப் பெற்று அவர்கள் இவ்வுலகைக் காக்கும் கடமையை மேற்கொள்ளும் படி அவர்களை ஆளாக்கி உலகில் யாவரும் இன்பமாய் வாழ வழிகோலுவதே சிறப்பு. நாட்டில் எங்கும் லஞ்சமும் ஊழலும் பெருகி மனித நேயம் சிதைந்து போனதால் துன்புறும் கோடானு கோடி மக்களைக் காப்பாற்ற நாம் இளைய சமுதாயத்தையே நம்ப வேண்டும். அவர்களை அத்தகைய பணிக்குத் தயார் செய்ய வேண்டும்.



படம் : பிள்ளைக்கனியமுது
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
குரல் : சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
இசை : கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி  நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக