ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஜகம் புகழும் புண்ய கதை

நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தது ராமராஜ்யம் என்ற கருத்து தொன்றுதொட்டு நிலவுகிறது. ராமாயண காவிய நாயகன் ஸ்ரீ ராமனை அக்காவியத்தை இயற்றிய வால்மீகி ஒரு உன்னத குணம் நிரம்பிய, தந்தை தாய் சொற்படி நடந்த, தன்னை நம்பியவர்களைக் காத்த, அனைவரையும் சகோதரர்களாக பாவித்த, தன் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் நினையாத உத்தம புருஷனாக மட்டுமே விவரித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த மனிதர்கள் ராமாயணத்தைத் தொடர்ந்து படித்துப் பிறருக்குச் சொல்கையில் ஸ்ரீ ராமனின் குணங்களையும் பெருமையையும் போற்றி அவனை ஒரு அவதாரமாக உருவாக்கிவிட்டனர்.

ராமாயணத்தில் ஸ்ரீ ராமனின் நற்குணங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிறு வயது முதலே ராமன் தனது மூன்று சகோதரர்களிடத்திலும் அளவிடற்கரிய அன்பு கொண்டவனாகவும் அவர்கள் யாவரும் போற்றி வணங்கத் தக்க அறிவும் பொறுமையும் வீரமும் கொண்ட பெருந்தகையாகவும் விளங்கினான். தன்னைப் பெற்ற தாயான கௌசல்யா மட்டுமின்றி தன் சிற்றன்னையரான கைகேயி, சுமத்திரை ஆகியோரையும் சமமான பிரியத்துடனும் மரியாதையுடனும் நடத்தினான் ஸ்ரீராமன்.

கைகேயி தசரதனிடம் வரம் பெற்று அவற்றின் படி பரதன் நாட்டை ஆளவும் ராமன் பதினான்காண்டுகள் வனவாசம் செய்யவும் பணிக்கையில் அவளது ஆணையைத் தன் தந்தையின் ஆணையாகவே ஏற்றதுடன் தனது தம்பியான பரதன் நாடாள அமைந்தது குறித்து எவ்விதப் போறாமையும் கொள்ளாது தனக்கு அரசபதவி கிடைத்தால் அடையும் மகிழ்ச்சியை விடவும் அதிகமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

மன்னவன் பணியன்றாகின் நும் பணி மறப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ!

என உரைத்து மகிழ்ச்சியுடன் வனவாசம் மேற்கொள்கிறான். கோபாவேசம் கொண்டு கொதித்தெழுந்த இலக்குவனை அமைதிப் படுத்தி அவனையும் உடன் அழைத்துச் சென்றான். வன வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் அவர்களது குலம் இனம் முதலியவற்றைப பற்றி சற்றும் பொருட்படுத்தாது தன் சகோதரர்களாக ஏற்றான். சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் அவனுடன் போராடி உயிர் துறக்கும் நிலையில் இருந்த கழுகான ஜடாயுவைப் போற்றி வணங்கி ஜடாயு இறந்ததும் அப்பறவையைத் தன் தந்தையாகவே பாவித்து ஈமச் சடங்குகளைச் செய்தான். சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்தவுடன் தனது வாக்குறுதியைக் காக்கத் தனக்கு அவப்பெயர் நேர்வதைப் பற்றியும் கவலை கொள்ளாது அக்கிரமமாய் நடந்த வாலியை மறைந்திருந்து கொன்றான்.

இராவணனின் சகோதரர்கள், புதல்வர்கள், படைத்தலைவர்கள் யாவரையும் வென்று அழித்த பின்னர் இராவணன் தன்னந்தனியாகத் தன்னுடன் போர் செய்து தோற்ற பொழுது அவனுக்கு மேலும் போராட ஒரு சந்தர்ப்பததைத் தர விழைந்து, "இன்று போய் நாளை வா" என்று யுத்தத்திலும் உயர்ந்த தரும நெறியைக் கடைபிடித்தான்.

இன்று நம் நாட்டில் நடக்கும் ஆட்சியை எண்ணிப் பார்க்கையில் மனம் மிக நோகிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கம் மக்களைச் சுரண்டுகிறது. காவல் துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்து அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்படுகையில் தீவிரவாதிகளால் மக்கள் தாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். காவல் துறையினரை முறையாக மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்குத் தகுந்த சாதனைகளையும் தக்க அதிகாரங்களையும் வழங்காமல் அவர்களை மந்திரிமார்கள் வீட்டைக் காவல் காக்கவும் அவர்கள் வெளிக்குப் போகையில் விளக்குப் பிடிக்கவும் உபயோகப்படுத்தி காவல் துறையினருக்குரிய மரியாதையைக் கெடுத்து நாட்டைக் கெடுக்கும் அமைச்சர்கள் அடங்கிய அரசாங்கம் மக்களைக் காக்க எவ்வித முயற்சியும் செய்யாது தவிக்க விடுகிறது.

இந்த இழிநிலை மாறி மீண்டும் ராமராஜ்யம் வரவேண்டுமெனும் பேரவாவில் ஸ்ரீராமனின் புண்யகதையை எடுத்துரைக்கும் பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

ஜகம் புகழும் புண்ய கதை

திரைப்படம்: லவகுசா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா
ஆண்டு: 1963

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக