ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அறிவுக்கு வேலை கொடு

ஊழலுக்கு எதிரான போராட்டதுக்குத் தங்களது ஆதரவை இங்கே தெரிவிக்கவும்

மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடக்கும் ஆட்சியே ஜனநாயக ஆட்சி என்று வரையறுத்து விட்டு, ஐந்தாண்டுகளுக்கொரு முறை அவதூறு பிரச்சாரங்களாலும், ஓட்டுக்குப் பணம் கொடுத்தும், இலவசங்களை வாரி வழங்கியும், கள்ள ஓட்டுப் போட்டும், கூலிக்கு ஆள் பிடித்துக் கருப்புப் பணத்தைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் பல ஊர்களிலிருந்து ஆட்களை வரவழைத்துக் கூட்டத்தைச் சேர்த்துத் தம் வலிமையைக் காட்டியும் மோசடியான வழிகளில் தேர்தலில் வெற்றிபெற்றுப் பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமையப் பெறும் ஆட்சி உண்மையில் மக்களின் பிரதிநிதிகளால், மக்களின் பிரதிநிதிகளுக்காக மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறும் ஆட்சியாகவே விளங்குவது நம் நாட்டில் தற்போது நடைபெறும் போலி ஜனநாயகம். இதில் பதவிக்கு வந்தவுடன் மக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசு பிரதிநிதிகள் மக்களின் தேவைகளைப் புறந்தள்ளி விட்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளாலும் ஊழலாலும் தாம் மட்டும் செல்வந்தர்களாக விளங்கும் முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும், நீதி தவறிய நீதிபதிகளையும் தண்டிக்க எவ்வித வழியும் இல்லாத வகையிலான வலுவற்ற சட்டங்களை இயற்றிக் குற்றவாளிகள் தப்பிக்கவும் நேர்மையான அப்பாவி மக்கள் அவதிக்குள்ளாகவும் வழிவகுத்து மக்களை ஏமாற்றி வருகிறது இந்தியாவின் மத்திய அரசு. பல வருடங்களாக இந்திய மக்களிடம் கொள்ளையடித்த பெரும்பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் முடக்கி விட்டு சுதந்திரமாகத் திரியும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அவர்கள் சுருட்டிய பெரும்பணத்தைத் திரும்பப் பெற்று நாட்டு நலனுக்காகச் செலவிட வழிவகுக்கவும் வேண்டிய மத்திய அரசு அதற்கு நேர்மாறாகச் செயல் பட்டு எவ்வாறாகிலும் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது குறித்து மட்டுமே சிந்தனை செய்து அதனை செயல்படுத்த முறைகேடான வழிகளில் மத்திய புலனாய்வுத் துறையைப் பயன்படுத்துகிறது. தினந்தோறும் பொது மக்களிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப் படும் லஞ்சப்பணம், நிலம் மற்றும் பிற சொத்துக்கள் விற்பனையின் தொடர்பான பத்திரப் பதிவுகளில் மோசடி செய்து சொத்துக்களின் மதிப்புத் தொகையைக் குறைத்து எழுதி பத்திரப் பதிவு மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயைக் குறைப்பதுடன் கருப்புப் பணம் நாட்டில் பெருகவும் மட்டுமே தற்போதைய ஆட்சியும் சட்டதிட்டங்களும் உதவுகின்றன.

அரசாங்கத்தின் இத்தகைய மோசடிகளைச் சுட்டிக்காட்டி முறையான மக்கள் பாதுகாப்புச் சட்ட்டத்தை இயற்ற வலியுறுத்தி வரும் அன்னா ஹசாரே தலைமையில் செயல்படும் சமூக சேவகர்கள் அமைப்பை எவ்வாறேனும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களது அராஜக ஆட்சியைத் தொடரலாம் என மனப்பால் குடித்த மத்திய அரசின் பிரதிநிதிகள் இன்று செய்வதறியாது திகைக்கின்றனர். காரணம், அன்னா ஹசாரேயின் தலமையில் நடக்கும் அறப் போருக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் நாடெங்கிலும் ஒன்று கூடித் தங்கள் மனத்தாங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆறாவது நாளாகத் தன் உண்ணாவிரதத்தைத் தொடரும் அன்னா ஹசாரே மக்கள் நலச் சட்டம் முறையாக இயற்றப்படும் வரையில் தொடர்ந்து போராடும் முடிவை அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு அனைத்து மக்களும் ஆதரவாகவே உள்ளனர்.

அரசு பிரதிநிதிகள் இதுவரை தங்களது பகுத்தறிவை உபயோகிக்காது ஆணவத்தால் அறிவிழந்து கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளைக் கைவிட்டு ஜனநாயகத்தைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது நலம். அவ்வாறன்றித் தங்களது வழக்கமான வழியில் சதிகள் செய்து மக்களை மீண்டும் ஏமாற்ற முயல்வதும் அன்னா ஹசாரே போன்ற தன்னலமற்ற மக்கள் தலைவர்களுக்குக் குழி பறிப்பதும் தங்களுக்குத் தாங்களே குழி பறிக்கும் செயலாகவே முடியும். இந்த உண்மையை உணர்ந்து தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்பட்டால் அவர்கள் மன்னிக்கப் படலாம். இல்லாவிடில் அவர்கள் யாரும் பெரும் பழியிலிருந்தும் பேரழிவிலிருந்தும் பெரும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க இயலாத நிலை விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது.

அரசு பிரதிநிதிகளே! இது உங்களுக்கு இறுதி வாய்ப்பு. திருந்துங்கள், முறைகேடான சட்டத்தைத் திருத்துங்கள். மக்களைக் காக்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் ஊழல் மூலம் மக்களிடம் கொள்ளையடிக்கப் பட்ட பணம் முழுவதையும் மீட்கவும் உரிய நடவடிக்கை எடுங்கள். இல்லாவிடில் உங்களைக் காக்க அந்த ஆண்டவனாலும் இயலாமற் போய்விடும்.

அறிவுக்கு வேலை கொடு

திரைப்படம்: தலைவன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆஹாஹஹ ஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக