ஞாயிறு, 15 ஜனவரி, 2012

திருடாதே, பாப்பா திருடாதே

ஞாலம் கருதினுக் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

எனும் வள்ளுவர் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக இன்று நம் நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சி உருவாகி இதுகாலம் நாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பிழைத்து வந்த அரசியல்வாதிகள் பலரும் தலைகுனிந்து அடிபணியும் நிலையை ஏற்படுத்தியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான மக்கள் நலச் சட்டம் வகுக்க வேண்டுமென்று போராடிவரும் அவர் தக்க சமயம் பார்த்துத் தனது பெரும் போராட்டத்தைப் பிரம்மாண்டமான அளவில் தொடர்ந்துள்ளார். சுதந்திர தினத்திற்கு மறுதினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அவர் இந்திய பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெரும் இன்றைய காலத்தில் மிகவும் முன்யோசனையுடன் சட்ட வல்லுனர்களான பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷண், அரவிந்த் கேசரிவால் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் காவல்துறைப் பெண் அதிகாரி கிரண் பேடி ஆகியோருடைய வலுவான துணையுடன் வியூகம் அமைத்து இந்திய மக்கள் பல்லாயிரக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி நடத்தும் இப்பெரும் போராட்டம் நாட்டின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றிப் பல கிராமப் புறங்களிலும் பெருமளவில் அங்குள்ள மக்களால் கடைபிடிக்கப் படுவதோடு உலகெங்கிலுமுள்ள இந்தியர்களும் பங்குபெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதத்தை நள்ளிரவில் டெல்லி போலீசாரைக் கொண்டு தடியடி நடத்தி அப்பாவி மக்களையும் இளம் குழந்தைகளையும் மூதாட்டிகளையும் காயப்படுத்தி அடக்கியதுடன், பாபா ராம்தேவின் உதவியாளரின் மேல் போலிப் பட்டப் படிப்புச் சான்றிதழ் மூலம் நேபாளத்திலிருந்து இந்தியாவில் குடியேறியதாக வழக்குத் தொடுத்து அவரது போராட்டத்தைக் கட்டுப்படுத்தியது போல் அன்னா ஹசாரேயின் போராட்டத்தையும் கட்டுப்படுத்தி விடலாம் என மனப்பால் குடித்த மத்திய அமைச்சர்களின் சதிச் செயல் பலிக்கவில்லை. அன்னா ஹசாரே ஊழல் புரிந்ததாக இவர்கள் குற்றம் சாட்டியதும் எடுபடவில்லை. தாங்கள் செய்யும் ஊழல்களை யாரேனும் சுட்டிக் காட்டி மக்கள் நலனைக் காக்கப் போராடுகையில் அத்தகைய போராட்டத்தின் காரணத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்கும் கடமையைச் செய்வதற்கு பதில் அவ்வாறு தம் மீது குற்றம் சுமத்துபவர்கள் மீது பழி சுமத்தி தம் குற்றங்களைச் சுட்டிக்காட்ட அவர்காளுக்கு அருகதையில்லை எனும் விதத்தில் வாதாடித் தங்களது பகற்கொள்ளையைத் தொடர்ந்து நடத்தப் போட்ட சதித் திட்டங்கள் அம்பலமாகி விட்டன. மக்க்ள் இனிமேல் ஏமாற மாட்டார்கள். அதிலும் நம் நாட்டு இளைஞர்களை என்றும் ஏமாற்ற முடியாது. தகவல் தொழில்நுட்ப்ம் நன்கு வளர்ந்துள்ள நிலையில் நம் நாட்டு அரசியல்வாதிகளின் சாயம் சுத்தமாக வெளுத்துவிட்டது.

இனிமேல் எத்தர்கள் நல்லவர்களாக நடித்து நாட்டு மக்களை மொட்டையடித்து சொத்து சேர்க்கும் சதிச் செயல்கள் நிறைவேறா. குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். உப்புத் தின்றவன் த்ண்ணீர் குடித்தே தீர வேண்டும். இன்று நாட்டில் சட்டமியற்றுவோரே குற்றவாளிகளாக விளங்குவதால் குற்றங்களைக் களைவதற்கு ஏற்ற சட்டங்களையும் அவர்களே இயற்ற வேண்டும் எனும் மிகவும் இக்கட்டான நிலை நாட்டில் இருப்பதாலேயே நாட்டு மக்களுக்கு நலம் புரியும் மக்கள் சட்டம் முறையாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இச்சிக்கல்கள் யாவையும் தீர்த்து மக்கள் நலம் பேணாத அரசு பதவியில் இருக்க இயலாது எனும் நிலைமையை அன்னா ஹசாரேயின் போராட்ட்ம் ஏற்படுத்தியுள்ளது.

மந்திரிகள் என உங்களைக் கூறிக்கொள்ளும் திருடர்களே, நீங்களாகத் திருந்துவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இன்றே திருந்த வேண்டும், இல்லாவிடில் பின்னர் வருந்த நேரிடும்.

திருடாதே, பாப்பா திருடாதே

திரைப்படம்: திருடாதே
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இசை: எஸ்.எம். சுபைய்யா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே, பாப்பா திருடாதே

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது அதை
சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே, பாப்பா திருடாதே

கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
எடுக்குற அவசியம் இருக்காது இனி
எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது மனம்
கீழும் மேலும் புரளாது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா ஆஆஆஆஆஆஆ
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
பாப்பா திருடாதே

1 கருத்து: