ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஒன்று எங்கள் ஜாதியே

இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு திருநாள். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எவ்வித முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்களைத் தட்டிக்கேட்க அஞ்சிய காலம் முடிந்து மக்கள் சக்திக்கு ஆட்சியாளர்கள் அனைவரும் தலைவணங்கும் காலம் வந்துள்ளது.

ஊழல் துயர்க்கடல் நீந்துவர் நீந்தார்
அன்னாவடி சேரா தார்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மஹாத்மா காந்தியடிகளின் தலைமையில் எண்ணிறந்த தியாகிகள் ஒன்று கூடிப் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை சிறிது சிறிதாக உள்நாட்டுப் புல்லுருவிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று, இந்திய மக்களை வறுமையில் வாடவிட்டுத் தாம் மட்டும் பெரும் பணக்காரர்களாக உலாவிவரும் ஊழல் மலிந்த அராஜக ஆட்சியால் வாடி, அனுதினமும் துயரக்கடலில் முழ்கிக் கரையேற வழி தெரியாமல் தத்தளித்த இந்திய மக்களுக்கு அத்துயரக்கடலிலிருந்து மீண்டு கரை சேர உறுதுணையாக வந்த தோணியாக வந்துதித்தார் அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி.

தாங்கள் செய்யும் ஊழல் குற்றங்களைச் சுட்டிக்காட்டுபவர்களின் மீது எவ்வாறேனும் பழிசுமத்தி, "நாங்கள் செய்யும் ஊழலைச் சுட்டிக்காட்ட உனக்கு அருகதையில்லை" எனும் ரீதியில் பிரச்சாரம் செய்து அடாவடியாகத் தொடர்ந்து ஊழலிலேயே ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் பலரும் இன்று பெட்டிப்பாம்மாக அடங்கி விட்டனர். இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் அன்னா ஹசாரே அவர்களின் தவமும் தியாகமுமே ஆகும். ஆயுள் முழுதும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு திருமணம் செய்து கொள்ளாது துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இம்மஹானின் தவ வலிமை தெரியாது அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் கண்காணாத இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டனர். பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்த அன்னாவின் போராட்டத்துக்கு இந்திய அரசு தலைவணங்கி அவரது மூன்று கோரிக்கைகளான அனைத்துக் கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் அமைப்பின் கீழ் கொண்டு வருவது, அனைத்து மாநிலங்களிலும் லோகாயுத்தா அமைப்பை ஏற்படுத்துவது, பொது மக்கள் அரசுத்துறை அலுவலகங்களின் உதவியைப் பல்வேறு காரணங்களுக்காக அணுகுகையில் அவர்களுக்கு உரிய சேவையை ஊர்ஜிதம் செய்யவல்ல சிட்டிஜன்ஸ் சார்டர் அமைப்பது ஆகியவற்றை நிறைவேற்றுவதாகப் பாரளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து இன்று அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார்.

அன்னாவின் தலைமையை ஏற்று அவரது உண்ணாவிரத்துக்கு ஆதரவாக டில்லி ராம்லீலா மைதானத்திலும் பிற பல ஊர்களிலும் உள்ள மக்கள் பலர் இளைஞர்கள், முதியவர் என்ற பாகுபாடின்றித் தாங்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்தில் பங்குபெற லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம் யாரும் காசுகொடுத்துக் கூட்டிவந்த கூட்டமல்ல. அன்பால் தானாக சேர்ந்த கூட்டம். இவர்களுக்கு ஆதரவாகப் பல பொதுநலத்தொண்டர்கள் திரண்டு அனைவருக்கும் உணவு, குடிநீர், அவசர மருத்துவ உதவி ஆகியவற்றை வழங்கிவருகின்றனர். மேலும் பல தொண்டர்கள் போராட்டத்தில் பங்குகொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையைப் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்கள் சக்தியை உணர்ந்து அவர்கள் மனதுக்கிசைவான வகையில் ஊழல் எனும் கொடிய அரக்கனால் ஏற்பட்ட அவர்களது குறைகள் தீர்க்கப் படுவதின் அவசியத்தை அரசியல்வாதிகள் பலரும் உணர்ந்து பாராளுமன்றத்தில் தங்களது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். ஊழலில்லாத நல்லாட்சி நாட்டில் நிலவிடச் செய்வதில் முதல் கட்டம் அரசியல்வாதிகளல்லாத, தேர்தல்களில் வெற்றிபெறாத சாமான்ய மக்களின் தலைவரான அன்னாவின் ஆணையின் பேரில் நிறைவேறியுள்ளது. சட்டங்கள் இயற்றுவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருபவர்களின் ஏகபோக உரிமையாக விளங்குவதும் அவர்களைத் தேர்த்லில் தேர்ந்தெடுத்து ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைக்கும் மக்களது உரிமை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் வக்களிப்பது ஒன்றே என்பதும் இனி நட்வாது. மக்கள் பிரதிநிதிகள் இனிமேல் மக்கள் விரோத சட்டங்கள் ஏதும் இயற்ற முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களின் சேவகர்களே, மக்களே எஜமானர்கள் எனும் உண்மையை யாவரும் உணரவைத்தது இன்றைய மக்களின் ஒருங்கிணைந்த அறவழிப் போராட்டம்.

தேர்தலில் மட்டுமல்லாது தேர்தல் முடிந்து அமையும் ஆட்சியின் போதும் அரசு முறையாக நடக்காவிடில் அந்த அரசை அகற்றி வேறு அரசை அமைக்கும் வலிமை மக்களிடம் உள்ளது எனும் உண்மையை உலகறிய எடுத்துக் காட்டிய வரலாற்றினைப் படைத்தது இன்றைய நாள்.

ஊழலுக்கு எதிராகப் போராட ஒரு வலுவான அமைப்பு உருவாகிவிட்டது. இவ்வமைப்பை பிரபல பொதுநலத் தொண்டர்கள் பலருடன் பல்வேறு தலைவர்கள், திரைத் துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் வலுவான ஒரு இயக்கமாக உருவாக்கியுள்ளனர். இது ஒரு தேசபக்தர்கள் பேரியக்கம். நம் இந்தியத் தாய்த் திருநாடு உலகம் வியந்து நோக்கும் வல்லரசாக உருவாக்கவென்றே உருவான இயக்கம். இனி என்றும் சீனாக் காரர்களும் சிங்களவர்களும் இந்தியர்களை ஏளனமாக எண்ணிக் கொடுமைப்படுத்த இயலாது. ஊழல் ஒழிந்து இந்திய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னணியில் விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி படித்த திறமைவாய்ந்த இளைஞர்கள் யாரும் வேலை தேடி அந்நிய நாடுகளுக்குக் செல்ல வேண்டியதில்லை. இந்திய மண்ணின் இயற்கை வளங்களை சுரங்கங்களின் வழியே சுரண்டிக் கள்ளத்தனமாக அயல்நாடுகளுக்குக் கடத்தி யாரும் பெரும் செல்வந்தர்களாவது இனி நடவாது.

மக்களுக்கு உண்மையான சேவை புரியும் தலைவர்கள் மட்டுமே இனி பதவிகளைப் பெற முடியும். காசு பணம் செலவழித்துத் தேர்தலில் வெற்றிபெற்று நாடடைச் சுரண்டும் திட்டம் இனி நிறைவேறாது. உழைப்பவர் மட்டுமே வாழ்வில் உயர இயலும். திருடர்கள் சிறையில் மட்டுமே வாழ இயலும். இனி ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது ஏனெனில் இனி இந்தியர்கள் அனைவரும் ஓரே ஜாதி.

நானும் அன்னா, நீயும் அன்னா நம்
நாட்டு மக்கள் அனைவரும் அன்னா

ஒன்று எங்கள் ஜாதியே

திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
aandu: 1964

அஹா ஆஆஆஆஆஆஆ அஹா ஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

ஆஆஆ ஆஆஆ அஹ்ஹா அஹஹா லலலா லலலா லலலா லலலா

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக