செவ்வாய், 22 நவம்பர், 2011

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் வாழ்வில் என்றும் இன்பத்தையே நாடுகின்றன. துன்பத்தை எதிர்கொள்ளத் தயங்குகின்றன. ஆனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி இயல்பாக வருவதால் மனமுடைந்து இயற்கையில் கிடைக்கும் இன்பத்தையும் எதிர் வரும் துன்பத்தை எண்ணி அஞ்சுவதாலும், நிகழ்ந்த துன்பத்தை எண்ணி வருந்துவதாலும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் போகின்றது. வாழ்வில் நமக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு நாம் நம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வதே இவ்வாறான குழப்பத்தைத் தவிர்க்கும் வழி ஆகும்.

தினமும் உழைத்தால் மட்டுமே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற இயலும் எனும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் வாழும் நம் நாட்டில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயிலும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி காண்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து பிறர் துன்பத்தைத் தனதாகக் கருதி ஒற்றுமையுணர்வுடன் வாழ்வதே ஆகும். அதே சமயம் அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் மக்கள் தங்களது தேவைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலானோர் கடனாளிகளாகவே வாழ்கின்றனர்.

இத்தகைய போக்கினால் இன்று அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் இத்தகைய நெருக்கடி இல்லை. இதற்குக் காரணம் தங்களது திறமையான ஆட்சியே என்று இந்தியாவின் நிதியமைச்சர் பெருமை பீற்றிக் கொள்கிறார். இதை விடப் பெரிய மோசடி இருக்க முடியாது. நம் நாட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சுரண்டி மக்களுக்கு இலவசமாகக் கிடைத்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வியாபாரமாக்கியும் பல விதமான புதிய வரிகளை விதித்தும் மக்கள் ஈட்டும் வருவாயில் கணிசமான தொகையை வரியாக வசூலித்து வருவதாலேயே நம் நாட்டின் பொருளாதாரம் ஏனைய நாடுகளை விடவும் மேம்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வெறும் தோற்றமே. உண்மை நிலையை தினமும் ஆராய்ந்து பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை கவனத்தில் கொண்டால் அறியலாகும்.

இத்தகைய மோசடிகளிலிருந்து அவதிப்படும் மக்களைக் காத்து வருபவர்கள் பெரும்பாலும் மக்களிடையே உள்ள பல நல்லவர்கள் ஆவர். இத்தகைய நல்லோர் தாம் ஈட்டும் பொருளில் தமது தேவைக்கு அதிகமாக உள்ளதைப் பொதுநலத்துக்கு செலவு செய்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்து வருவதாலேயே நம் நாடு எத்தகைய இக்கட்டிலும் சிக்காமல் தப்பித்துப் பிழைத்திருக்கிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கொப்ப, பல ஆண்டுகளாக நல்லவர்கள் போல் நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்திருந்த பலரது முகமூடிகள் கழன்று அவர்கள் செய்த குற்றங்கள் யாவும் வெளிவந்த வண்ணம் இருக்கும் இன்றைய சூழ்நிலையால் விரைவில் நமது நாட்டில் மோசடிப்பேர்வழிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு என்றும் உண்மையாய் உழைக்கும் நல்ல மனம் படைத்த திறமைசாலிகள் ஆட்சிப் பொறுப்பேற்கும் காலம் விரைவில் வரும் எனும் நம்பிக்கை மனதில் எழுகிறது.

இனி என்றும் துன்பமில்லை, சோகமில்லை.நாம் பெரும் இன்ப நிலையெய்தும் காலம் வெகு தூரமில்லை.

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை எங்கள்
வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக் குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக் குரல்

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக