திங்கள், 27 ஜூன், 2011

காதல் என்னும் ஆற்றினிலே

காதல் என்பது மனித இனத்துக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. உலகில் உயிர் வாழ்க்கை தொடர்ந்து நிலவுவதற்கு ஓரே காரணம் காதல். ஏனைய உயிர்களிடத்தில் தோன்றும் காதல் உணர்வு பெரும்பாலும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்றதாக நிலவுகிறது ஆனால் மனித இனத்தில் தோன்றும் காதல் சமுதாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் பால் மற்றவர் ஈர்க்கப்பட்டு ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் நிலவுகிறது. கட்டுப்பாடற்ற காதல் மனித இனத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லக்கூடும். கல்வி பயிலும் பருவத்தினர் சிலர் மறுபாலரில் அழகால் ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்படுவதுண்டு. இவ்வாறு காதல் வயப்படுவோர் மனதில் சஞ்சலங்கள் உண்டாகிக் கல்வியில் முழு மனதையும் செலுத்தத் தவறி வாழ்க்கையில் முன்னேற்றமடையாமல் பின்தங்குவதும் உண்டு. இதற்குக் காரணம் காதல் குறித்த முறையான அறிவு பெறாமல் மனத்தில் தோன்றும் ஆசைகளுக்கு அடிமையாகும் உந்துதலே ஆகும்.

இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதில் திரைப்படங்களுக்குப் பெரும் பங்குள்ளது. திரையில் தோன்றும் காதலனும் காதலியும் உண்மைக் காதலர்கள் அல்ல என்பதையே பெரும்பாலான ரசிகர்கள் மனதில் கொள்ளத் தவறுகின்றனர். ரசிகர்களின் மனதைக் கவர்ந்து அவர்கள் பணம் செலவழித்துத் திரைப்படத்தைப் பார்க்க வைத்து அதன் மூலம் பொருளீட்டும் எண்ணத்துடனேயே திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன.

கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றமடையாமல் காதல் வெற்றி பெறாது எனும் உண்மையைத் திரைப்பட ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் பழைய தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டதால் அவை காலத்தால் அழியாத திரைக் காவியங்களாக எத்துணை முறை பார்த்தாலும் சலிப்புத் தோன்றாத உன்னத நிலையை எட்டியுள்ளன. வெறும் ஸ்பரிச உணர்வால் ஏற்படும் காதலை விட சகோதர பாசமே உயர்ந்தது என்பதை உணர்த்தும் வகையிலும் இத்தகைய திரைப்படங்களுள் சில விளங்குகின்றன.

காதல் குறித்து இணையதளத்தில் எத்தகைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன என்றறியும் நோக்கில் காதல் எனும் வார்த்தைக்கான இணையப் பக்கங்களை கூகிளாரின் உதவியுடன் தேடப் புகுந்தேன். கூகிளார் தந்த தேடுதல் பதிலாக முதல் நிலையில் படத்துடன் தோன்றியது நிலாரசிகனின் மயிலிறகாய் ஒரு காதல். இந்த நூல் பற்றி மழலைகள்.காம் தளத்தில் விளம்பரம் இடம்பெற்றிருப்பதை நினைவில் கொண்டு கவனித்ததில் இந்தப் படத்தின் சுட்டி மழலைகள்.காம் புத்தகப் பகுதிக்கு இட்டுச் செல்வதைக் கண்டேன்.

http://www.google.co.in/search?sourceid=chrome&ie=UTF-8&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

பிற இணையத் தமிழ் அன்பர்களும் தாங்கள் படைத்த நூற்கள் குறித்த செய்திகளை எனக்கு அளித்தால் அவற்றைப் பற்றிய விளம்பரங்களையும் மழலைகள்.காம் தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.

இன்றைய பாடல் காதல் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிகாட்டுதலை சற்றே வேடிக்கை கலந்த ஆண் பெண் உரையாடலை இசை வடிவில் தருகிறது.

காதல் என்னும் ஆற்றினிலே

திரைப்படம்: கைராசி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். கோவர்த்தனம்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?

காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும் அந்தப்
பாடத்தை நீங்கள் பள்ளியிலே தான் படிப்பது நன்றாகும்

தாவணியோடு பாவாடை தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை பள்ளிக்குச் செல்ல மனமில்லை
பட்டம் விட்டால் கைக் கட்டு வரும் வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை எண்ணும் காலம் வரும்

காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்

பறக்குது பறக்குது முன்னாலே பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே ஏறி வரட்டுமா ஓடத்திலே
ஓடத்தில் ஏறும் நேரத்திலே உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று காலையிலே வரும் பேப்பரிலே

காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக