திங்கள், 27 ஜூன், 2011

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

தம் இரு பையன்களுக்கும் ஒரே சமயம் திருமணம் செய்ய முடிவு செய்யும் பெற்றோர்கள் ஒரு கல்யாணத் தரகர் தரும் விவரங்களின் அடிப்படையில் இரு பெண்களைத் தேர்வு செய்கின்றனர். பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. சம்பிராதயமான முறையிலிருந்து மாறுபட்டு அண்ணனுக்கென்று கருதப்படும் பெண்ணைத் தம்பியும் தம்பிக்கெனக் கருதப்படும் பெண்ணை அண்ணனும் சென்று பெண் பார்க்கின்றனர். இவர்களுள் அண்ணன் பட்டப்படிப்பு பயின்றவன். தம்பி படிக்காதவன் முரடன். இக்காரணத்தால் இரு பெண்களுக்குள் பட்டப் படிப்பு படித்தவளை அண்ணனுக்கும் படிக்காத குடும்பப் பாங்கான பெண்ணைத் தம்பிக்கும் மணம் முடிப்பதெனும் பெற்றோர் முடிவின் படியே பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. தம்பிக்கெனப் பார்க்கும் பெண்ணின் அழகாலும், அடக்கதாலும் அறிவாலும் கவரப்பட்ட அண்ணன் தம்பிக்கு பதிலாக அவளைத் தானே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அண்ணனுக்காகப் பெண்பார்க்கச் சென்ற தம்பி அதன் முன்பாக அண்ணனிடமிருந்து சில ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு அண்ணனுக்காகப் பெண் பார்க்கையில் தன்னை அவர்கள் தரக்குறைவாக எண்ணிவிடக் கூடாது எனும் சுயகௌரவம் கருதித் தன்னைப் படித்தவன் போலக் காட்டிக் கொள்கிறான். இதனால் அவனை அவர்கள் படித்தவனென்றே கருத நேர்கிறது.

இதனிடையில் தம்பிக்காகப் பார்த்த பெண்ணைத் தானே மணம் முடிக்கும் தனது சுயநல எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எண்ணும் அண்ணன், தம்பி தனக்காகப் பார்த்த பெண்ணின் வீட்டுக்கு அனாமதேயக் கடிதம் அதாவது மொட்டைக் கடிதம் ஒன்றை அனுப்புகிறான். அக்கடிதத்தில் இருவரில் அண்ணன் கல்வி அறிவில்லாதவனென்று குறிப்பிடுவதால் அப்பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணைத் தம்பிக்கே மண முடித்துத் தர விரும்பிகின்றனர். இதனால் திருமணம் முடிந்த பின்னர் படித்தவன் என்று தான் கருதிய தன் கணவன் படிக்காதவன் என்னும் உண்மை வெளிப்படுவதால் கணவன் மனைவியரிடையே பல குழப்பங்களும் மனஸ்தாபத்தால் பல துன்பங்களும் விளைகின்றன. இவ்வாறு அமைந்தது படித்தால் மட்டும் போதுமா திரைக்கதை. இப்படத்தில் தம்பியாக சிவாஜி கணேசனும் அண்ணனாக பாலாஜியும், அண்ணன் மனைவியாக சாவித்திரியும், தம்பியின் மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்துள்ளனர்.

அண்ணன் தம்பி இருவரும் பெண்பார்த்து விட்டுத் திரும்பியதும் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளிக்கையில் தாங்கள் பார்த்த பெண்களைப் பற்றிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதாக அமைந்த இன்றைய பாடலில் கவிஞர் கண்ணதாசனின் ஆழ்ந்த புலமையும் கதையின் சூழ்நிலையைக் கதையின் தன்மையை ஒட்டியே மிகவும் அழகாக வர்ணிக்கும் சமயோசிதமும் விளங்குகின்றன. கேட்டவர் அனைவராலும் மிகவும் வியந்து பாராட்டப் பட்டது இப்பாடல்.

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா?
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண்ணந்தப் பெண்ணல்லவோ?

சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நானிருந்தேன்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

1 கருத்து: