திங்கள், 27 ஜூன், 2011

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே

மனிதனை மற்ற உயிரினங்களை விட மேன்மையான நிலையில் வைத்திருப்பது பகுத்தறிவு. அவ்வறிவை வளர்க்க இன்றியமையாதது கல்வி. கல்வி கற்க ஆசான் இன்றி இயலாது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட கருத்தாகும். ஒவ்வொருவரும் பிறந்து வளர்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தாயும் தந்தையும் ஆசானாக விளங்குகின்றனர். அதன் பின்னர் கல்வி பயில அதற்கென்றே பிரத்யேகமானதொரு குருவின் துணையை நாடுவது மிகவும் அவசியமாகிறது. மனித வாழ்வில் மிகவும இன்றியமையாதது இறையுணர்வு. இறையுணர்வில்லாதவர் துன்பங்களைத் தாங்கும் வலிமையடைவதில்லை. இறைத்தத்துவத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்வுலகையும் நம்மையும் இயக்கும் ஒரு மஹாசக்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய சக்தியைத் துணையாகக் கொண்டு வாழ்வில் முக்தி பெறுவதே வாழ்வின் நோக்கமாக அமைகிறது. இத்தகைய முக்திக்கு வழியமைத்துத் தருவது கல்வியே ஆகும். இதனாலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வின் முதல் ஆசானாக அன்னையையும் அடுத்துத் தந்தையையும் அதன் பின்னர் குருவையும் இறுதியில் தெய்வத்தையும் வைத்தனர் நம் முன்னோர்.

கல்வியினால் அறிவு வளர்கிறது. அவ்வறிவு முதிர்ச்சியடைந்து ஞானமாக மலர்கிறது. அந்த ஞானம் இறுதியில் பக்தியாகப் பரிணமிக்கிறது. அவ்வாறு பக்தி நிலையை அடையாத அறிவு முழுமையான அறிவு ஆகாது. அன்னையும் தந்தையும் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது மெய்யான அன்பையே தவிர சம்பிரதாயமான மரியாதையை அல்ல. இதற்கு மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவரிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது மரியாதையையே. ஏனெனில் மரியாதை கீழ்ப்படிதலுக்கு முதல் படி. கீழ்ப்படிதலில்லாது ஒரு மாணவர் ஆசான் போதிக்கும் கல்வியை முறையாகப் பயிலும் சக்தியை அடைவதில்லை. இறைவனுக்கு செலுத்தும் மரியாதையை விடவும் அதிகமான மரியாதையையும் பக்தியையும் குருவுக்கு அளிக்கும் ஒரு மாணவனுக்குக் கல்வி எளிதில் வசமாகிறது.

கல்வி கற்பதற்கு ஏற்ற காலம் இளமைப் பருவம். குழந்தைகளாக இருக்கையிலேயே கல்வி பயிலத் துவங்கி தொடர்ந்து கல்வி பயில்வதே சிறப்பு. இத்தகைய, வாழ்க்கைக்கு இன்றியமையாத கல்வி வியாபாரமாக்கப் பட்டதால் கல்வி ஞானமாக முதிர்ந்து பக்தியாகப் பரிணமிப்பது இயலாததாகிறது. ஆசிரியர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களாக மதிக்கப் படும் நிலை ஏற்படுவதால் குரு பக்தி என்பதே இல்லாத நிலைமை உலகில் இன்று பெரிதும் நிலவுகிறது.

இனி வரும் காலத்திலாவது கல்வி வியாபாரமாவது தடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் அளித்து கல்வி அதன் உண்மையான தரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரோக்கியமான சூழல் நம் நாட்டிலும் உலகெங்கிலும உருவாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இன்றைய பாடலை வழங்குகிறேன்.

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே

திரைப்படம்: சாந்தி நிலையம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் ஓ ஓ ஓ வெண்ணிலவே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் வா வா வா வெண்ணிலவே

உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே

காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது

கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
செல்வங்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக