திங்கள், 27 ஜூன், 2011

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய், இன்பங்களிலே ஆவலற்றவனாய், பகைத்தலும் விழைத்தலுமின்றி ஒருவன் இருப்பானாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்கக் கடவான்"

"இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் பட ல்வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூரிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்."

பகவத் கீதை உரை - மஹாகவி பாரதியார்.

ஒருவருக்குத் துன்பங்கள் ஏற்படப் பெரும்பாலும் காரணம் அவரது மனப்பான்மையே ஆகும். பிறர் தனக்குத் துன்பமிழைத்த போதும் தன் மேல் அவதூறு சொன்னாலும் அவற்றால் மனம் கெடாமல் தைரியத்தைக் கைக்கொண்டு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உலகில் வாழ முடியும். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று அறிஞர் அண்ணாதுரை அறிவுறுத்தியதும் இக்கொள்கையையே ஆகும்.

அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளைக் கையாண்டு கவிஞர் கண்ணதாசன், "எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும்" என்று மொழிந்த பாடல் மிகவும் பிரசித்தமானது. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தேனினும் இனிய தன் குரலால் சுமைதாங்கி எனும் தமிழ்த் திரைப்படத்துக்காகப் பாடிய இப்பாடலைத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் சென்ற நிலையில் தற்செயலாகக் கேட்ட ஒருவர் தன் தற்கொலை எண்ணத்தை விடுத்து வாழ்ந்து பார்த்து விடுவது எனும் திடமான முடிவுக்கு வந்தது உண்மைச் செய்தி.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

திரைப்படம்: அருணோதயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி உன்
குணத்துக்குத் தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவன் வந்து விட்டான்
கடலின் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தையில்லை அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக