திங்கள், 27 ஜூன், 2011

காத்திருந்த கண்களே

உலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வாழ்வை இன்பமாகவே வாழ விரும்புகிறோம். நம்முள் ஏதேனும் ஒரு சிலர் வாழ்வின் இன்பங்களைத் துறந்து ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்தாலும் அவர்களும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்ததால் ஏற்பட்ட மன மாற்றத்தால் ஆசையழிந்து இவ்வுலக வாழ்வெனும் மாயையிலிருந்து விடுபட வழி தேடியே அலைகின்றனர். அத்தகையதொரு வழியைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது பிரசித்தம். அதாவது, மாயையை வென்று முக்தியடையும் வழியை உண்மையில் கண்டவர் அதனைப் பிறருக்குச் சொன்னதில்லை, அவ்வாறு முக்தியடையும் வழியைப் பிறருக்குச் சொன்னவர்கள் தாம் அவ்வழியைக் கண்டதில்லை என்பதே இக்கூற்றின் பொருள்.

வாழ்விலே ஒரு பிடிப்பு ஏற்பட்டாலொழிய வாழ்வு சுவைக்காது. அத்தகைய பிடிப்பு ஏற்பட ஆசைகள் மிகவும் அவசியம். ஆசைகளிலே முக்கியமானவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவையே. இம்மூன்றிலும் முதல் இரண்டு வித ஆசைகள் நிறைவேறுவதால் விளையும் இன்பத்தை விடவும் அதிக இன்பத்தைத் தருவது பெண்ணாசை நிறைவேறுவதால் விளையும் இன்பமே. இப்பெண்ணாசை முறையாக ஒருவனுக்கு ஒருத்தியெனும் மனித சமுதாய நியதிக்குட்பட்டிருப்பின் அதில் துன்பம் கலவாத இன்பமே விளையும். இந்நியதியை மீறிய முறை தவறிய பெண்ணாசை துன்பத்தையே தருவது நிச்சயம்.

காதலனின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலிக்கும் காதலியின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலனுக்கும் தம் உள்ளத்தில் பொங்கிப் பெருகும் ஆசை வெள்ளம் காத்திருந்த பின்னர் தம் காதலரைக் கண்டதும் அடங்குவதுண்டோ?

காத்திருந்த கண்களே

மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
லாலலாலா லல்லல்லா லாலலல்லா லல்லல்லா
லாலலாலா லாலாலா லாலலாலா லாலல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக