வெள்ளி, 13 நவம்பர், 2009

கண் போன போக்கிலே கால் போகலாமா?

அன்பு நண்பர்களே,
இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும் ஆசையை மனிதனுக்குள் வளர்ப்பது அடிப்படையில் அவன் கண்ணால் காணும் காட்சிகள். அவ்வாறு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" எனும் விதத்தில் வாழ்வதைத் தவிர்த்து தன் பகுத்தறிவை உபயோகித்து விபரீத ஆசைகளை அடக்கி நல்வழியில் நடக்காதவன் வாழ்வில் மாபெரும் துன்பங்களை அனுபவிப்பது உறுதி. இவ்வுண்மையை விளக்கப் போதுமான ஆதாரங்கள் சரித்திரங்கள் வாயிலாகவும் கதைகள், காவியங்கள் வாயிலாகவும் கிடைக்கின்றன. மனத்தின் ஆசைகளை அடக்கி ஒழுக்க சீலர்களாய் வாழ்ந்தோர் உன்னத நிலையை அடைவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

"வாழ்க்கை வாழ்வதற்கே", "இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்?" என்பன போன்ற சந்தர்ப்பவாதத் தத்துவங்களைப் பேசிக்கொண்டு இளமையில் சிற்றின்பத்தை நாடிச் செல்வோர் பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட கேட்டினால் மனம் வருந்தி உருக்குலைந்து போனதற்கும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.

வாழ்க்கை நாம் வாழ்ந்தே தீர வேண்டும், வேறு வழி கிடையாது, ஏனெனில் உலகம் நம்மைக் கேட்டு இயங்கவில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. நம் செயல்கள், சொற்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் சூழ்நிலைகளைக் கொண்டே அமைகின்றன. அத்தகைய சூழ்நிலைகள் நல்லவையாகவும் நிரந்தர இன்பம் தருவனவாகவும் இருப்பதற்கு மனிதன் தனது எண்ணத்தையும் நோக்கத்தையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறு நல்வாழ்வு வாழும் மனிதன் அனைவராலும் போற்றப்படும் உன்னத நிலையடைவது உறுதி.

இக்கருத்தை வலியுறுத்தும் இனிய பாடல்:

கேட்டு மகிழ: கண் போன போக்கிலே கால் போகலாமா?

திரைப்படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு

அன்பு நண்பர்களே,
மனிதனின் செயல்களுக்கும் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கும் இயற்கையை உவமானமாகச் சொல்வது பொதுவாகக் கவிஞர்கள் வழக்கம்.

உதாரணமாக

"உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளி போலே
பயிருக்கு மழை போலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே"

"மலை போலே வரும் சோதனையாவும் பனி போல் நீங்கிவிடும்"

என்பன போன்ற வரிகள் தமிழ்க் கவிதைகளில் மிகுந்திருத்தல் இயல்பு. இதற்கு மாறாக கவிஞர் மருதகாசி இயற்கையில் பெய்யும் மழைக்கு மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை உவமையாகச் சொல்கிறார்.

சொட்டு சொட்டாகத் தூரல் போடும் பழை உணவுக்காக ஏங்கும் ஏழையின் வியர்வையைப் போலவும் கண்ணீரைப் போலவுல் உள்ளதாம். பலமாகக் கொட்டும் மழை செல்வந்தர்கள் ஏழைகளைச் சாடுதல் போல் உள்ளதாம். மறைந்த இசை மேதை டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல்:

கேட்டு மகிழ: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
பாடியோர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: கே.வி. மஹாதேவன்

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முட்டாப் பயலே மூளை இருக்கா ஆஹஹ்ஹாங்
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு?
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்

கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

அன்பு நண்பர்களே,
உள்ளத்தில் நேர்மையும் உழைத்து வாழத் தெம்பும் இல்லாத சில முதுகெலும்பற்ற ஆண்கள் தங்களைக் காதலிக்கும் பெண் மற்றும் மணந்து கொள்ளும் மனைவி உட்படப் பெண்களை ஒரு கருவியாகக் கொண்டு பொருளும் சுகமும் தேடும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து வருகிறது. அத்தகைய ஆண்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகையில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏற்படும் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்:

கேட்டு மகிழ: காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா
இசை: ஏ.எம். ராஜா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை சேர்க்கவா
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

உள்ளம் என்பது ஆமை

அன்பு நண்பர்களே,
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றார் பாரதியார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.

உண்மையையே என்றும் பேசி தனது வாழ்வை சத்திய சோதனையாக வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் மஹாத்மா என்று அகில உலகிலுள்ளோரும் போற்றப் பட்டார்.

அரிச்சந்திரன் சத்திய நெறியைக் கடைபிடித்ததால் பிறவியில்லாப் பெருநிலை பெற்றான் என்று சொன்னார் திருமுருக கிருபானந்த வாரியார்.

உண்மையில் தெய்வம் உறைவதால் உண்மையையே என்றும் பேசும் ஒருவருக்கு வாக்குப் பலிதம் ஏற்படும், அதாவது அவர் நடக்கும் என்று சொல்வது அனைத்தும் உண்மையாக நடக்கும்.

ஆனால் உண்மையைப் பேச பாமர மக்கள் அஞ்சுகிறார்கள். இதனாலேயே உலகில் நீதி நிலைபெறாமல் மக்கள் பலரும் அல்லலுறுகின்றனர்.

இந்நிலையை விளக்கும் பாடல்:

கேட்டு மகிழ: உள்ளம் என்பது ஆமை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

"சும்மா இருப்பவன் மனது பேயின் பட்டரை" என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. நாம உண்ணும் உணவு, உடுக்கும் உடை மற்ற்ம் இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் சுகங்கள் யாவும் நமது உழைப்பால் ஈட்டிய பொருளைக் கொண்டு அடைதலே நமக்கு சமுதாயத்தில் உரிய மரியாதையைத் தரும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை எனும் பழமொழி பிரசித்தம்.

கல்லானேயானாலும் கைப்பொருளொன்றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாதவன் வாயிற்சொல்

எனும் ஔவையின் பாடலும் நாம் அறிந்ததே.

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்

என்று பாரதியார் கூறியபடி எத்தொழிலும் எவ்விதத்திலும் குறைவன்று.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடியுள்ளார்.

எல்லார்க்கும் எளிது தனது தந்தையார் செய்துவரும் தொழில். இதனை "குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" என்றனர் நம் முன்னோர்.

இத்தகைய தொழிலின் மேன்மையைப் பாமரரும் எளிதில் அறியும் வண்ணம் விளக்கும் ஒரு இனிய பாடல்:


சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்


திரைப்படம்: மதுரை வீரன், பாடியவர்: ஜிக்கி, இசை: ஜி. ராமநாதன்

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹே..

படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்

உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹேஹே..

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
இப்படி செய்வதினாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் சேர்க்கவுமில்லை

தெரிந்த தொழிலை செய்தாலே தானே தன்னன்னா - மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஹெஹேஹே..

வேலை வேலை என்று ஓலமிட்டழுதா
ஆளைத் தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சி இருந்தா
வேலை செய்து பல விவரம் புரியுதா?

பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா - மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா
ஹேஹேஹே.. ஹேஹேஹே..

ரோஜா மலரே ராஜகுமாரி

தத்துவ மழையில் நனைந்து சலித்த வேளையில் சற்றே ஓதுங்கி நின்று வாழ்வை மலரவைக்கும் சுகங்களில் தலையாயதான காதல் கடல் கரையோரம் இளைப்பாரலாமே.

காதல் காதல் காதல் காதற்போயின் காதற்போயின் சாதல் சாதல் சாதல் என்றார் பாரதியார். காதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை என்றார் அவருக்குப் பின்னர் வந்த வேறொரு புலவர். ஆனால் நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும் என்றார் கவிஞர் கண்ணதாசன். காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே என்றும் அவர் சொன்னார்.

அரசகுமாரி ஒருத்தி தன் காதலை அரசாங்கத்தில் தளபதியாகப் பணியாற்றும் கதாநாயகனிடம் தெரிவிக்கிறாள். அவன் தங்கள் காதல் நிறைவேறாது, ராஜாவின் மகள் தன்னை நெருங்கலாகாது என்று ஒதுங்குகையில் அவளோ காதலுக்கு முன்னர் நாடும் மணிமுடியும் மற்றெல்லாமும் தூசுக்குச் சமம் என்றுரைத்து அவன் மனதில் இடம் கேட்கிறாள்.

இதோ அந்த இனிய பாடல் பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா குரலில்:


ரோஜா மலரே ராஜகுமாரி


ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா? வருவதும் சரிதானா?
உறவும் முறை தானா?
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ?
காதல் நிலையன்றோ?
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ?

மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ?

பாடும் பறவைக் கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே.

ஓர் வழி கண்டோம் ஒருமனமானோம்

வாழிய பாடல் பாடுங்களே

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?

சனி, 31 அக்டோபர், 2009

ஆத்து வெள்ளம் காத்திருக்கு

அன்பு நண்பர்களே,

மனிதர்களாகிய நம் மனதில் குடிகொண்டுள்ள பாவ எண்ணங்கள் 6. அவை காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம் என்பன. இவை உலக சுகதுக்கங்களில் உள்ள பற்றுதலால் ஏற்படுபவை. இவை நம்மைப் படுகுழியில் தள்ளி நமது மகிழ்ச்சியை வேரோடு அறுக்கும் தன்மையுடையவை. 63 நாயன்மார்களுள் ஒருவர் திருக்குறிப்புத் தொண்டர். இவர் ஒரு சலவைத் தொழிலாளி. தினமும் சிவனடியார் ஒருவரது ஆடையைத் துவைத்து உலர்த்திக் கொடுத்த பின்னரே பிறரது ஆடைகளைத் துவைப்பது என ஒரு கொள்கையுடன் வாழ்ந்த இவரை சிவபெருமான் சோதனைக்குள்ளாக்கி ஆட்கொள்வது பற்றிய வரலாற்றை திருவருட் செல்வர் திரைப்படத்தில் காண்பித்துள்ளனர். சலவைத் தொழிலாளிகள் துணிகளைத் துவைக்கையில் அனைவரும் சேர்ந்து பாடுவது போல் அமைந்த இப்பாடல் நம்மை அழுக்குத் துணியுடன் ஒப்பிட்டு துணிகளில் இருக்கும் அழுக்கை நீரால் நீக்குதல் போல நம் மனதில் இருக்கும் பாப சிந்தனைகளை இறையருளால் நீக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றது: கவியரசு கண்ணதாசன் இயற்றி திரை இசைத்திலகம் கே.வி. மஹாதேவன் அவர்களின் இசையில் எஸ்.ஜி. கிருஷ்ணன் குழுவினருடன் டி.எம். சௌந்தரராஜன் இணைந்து பாடிய பொருள் பொதிந்த இப்பாடல் கேட்போரை மெய்ம்மறக்க வைக்கும் சிறப்புடையதாகும்:

ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பாடியவர்: எஸ்.ஜி. கிருஷ்ணன், டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: திருவருட் செல்வர்

ஓ... ஓ..
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா ஆஹா ஹா, ஓஹோ ஹா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா நாம
வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா
மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா - அப்பப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா ஹாஹாஹஹா

கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ
கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா
கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா

ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ...
ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா - நம்ம
பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - ஆமம்மா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா - அப்பா
கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா
வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா ஆஹா, ஓஹோ
வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா - ஆனா
வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா
வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா

பட்டுச் சேலை நூலுச் சேலை பளபளக்கும் ஜரிகைச்சேலை
கட்டம் போட்ட சாயச் சேலை கொட்டடிச்சேலை - நல்ல
கல்யாணக் கூரைச் சேலை சுங்கடிச்சேலை - துவச்சு
மூட்டை கட்டி எடுத்து வச்சாத் தீந்தது வேல

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து வச்சா வெள்ளையப்பா

வானவில்லைப் போலே ஆ.. ஆஆ.. ஓ.. ஓ..
வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா
வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா - உங்க
புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா - எங்க
புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா
உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
அருள் எனனும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

பஞ்சிலே நூலை வைத்தான் நூலிலே ஆடை வைத்தான்
ஆடையிலே மானம் வைத்தான் - அந்த
மானத்திலே உயிரை வைத்தான் வெள்ளையப்பா
பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா