திங்கள், 14 நவம்பர், 2011

இறைவா உன் மாளிகையில்

ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/panam-padaiththavan/kan-pona-

pokkile.php

நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.

இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.

உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:

திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில்

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக