திங்கள், 14 நவம்பர், 2011

யாரும் விளையாடும் தோட்டம்

"கோபம் பாபம் சண்டாளம்" என்று கோபத்தின் கெடுதியைக் குறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சண்டாளம் என்றால் மாபாதகம் எனப் பொருள். சினத்தினால் தீமையைக் குறித்துத் திருவள்ளுவர் சினம் எனும் கொடிய குணமானது சினங்கொள்வோரைக் கொல்வது மட்டுமன்றி அவரது இனத்தையே அதாவது பரம்பரையையே அழிக்க வல்லது என்று குறிப்பிடுகிறார்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப்புணையைச் சுடும்

எனும் குறள் வாயிலாக.

இவ்வுலக வாழ்வில் நாம் பிறருடன் இணைந்து பணியாற்றுகையிலும் பிறருடன் பல வகைகளில் தொடர்பு கொள்கையிலும், பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதங்கள் புரிகையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில சமயங்களில் பகைமை ஏற்படக் காரணமாவதுண்டு. அப்படி ஒரு நிலைமை உருவாவதைத் தடுக்க ஓரே வழி கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் சினத்தைக் கட்டுப் படுத்துவதே ஆகும். இதற்குப் பொறுமை அவசியம். பொறுமைக்கு உதாரணமாய் பூமியைக் குறிப்பிடுவதுண்டு, உயிர்கள் அனைத்தையும் தாங்குதலால்.

"பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்"

என்று பாரதமாதாவின் பொறுமை குறித்து மஹாகவி எடுத்துரைக்கிறார்.

நாமனைவரும் இவ்வுலகில் வாழ்வது சொற்ப காலமே என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அந்தச் சொற்ப காலத்திலும் ப்ல்வேறு சூழ்நிலைகளால் கட்டுண்டு நாம் நம்மையறியாமலேயே பல்வேறு வழிகளில் இட்டுச் செல்லப்படுவதை உணர்கிறோம். நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தும் நாம் விரும்பிய வண்ணம் செயல்கள் நடைபெறாதது குறித்து வருந்துதலும் பிறருடன் முரண்படுதலும் துன்பத்தையே தரும்.

எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், எத்துணைத் துயர் வந்துற்ற போதிலும், எவ்விதமான தர்ம சங்கடங்கள் ஏற்பட்ட போதிலும், எத்தகைய அவமானங்களைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அவற்றல் மனம் உடைந்து வருந்துதலும் பிறருடன் பிணங்குதலும் அறியாமை.

ஒருவர் நம்மை விடப் பொருளாதரத்திலோ, ஆரோக்யத்திலோ, அறிவிலோ, வேறு விதங்களிலோ தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரைத் தாழ்வாக மதிப்பிடுவதும் நம்மை விட மேம்பட்ட நிலையில் இருந்தால் அவரைக் கண்டு அசூயை கொள்வதும் நம் மன நிம்மதியைக் குலைத்து விடுவதுடன் சமுதாயத்தில் அவப் பெயரையும் உண்டாக்கிவிடும்.

மக்களில் ஒரு சாரார் நாடோடிகளாய்த் திரிவது நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவிடும் வழக்கமாகும். இத்தகைய மக்கள் தங்களுக்கென்று சொந்தமாய் எவ்வித சொத்துக்களையும் சேர்ப்பதில்லை. சில காலம் ஒரு ஊரில் இருந்த பின்னர் தங்கள் கூட்டத்தாருடன் வேறோர் ஊருக்குச் சென்று அங்கே சில காலம் வசிப்பது என இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய மக்கள் ஏழைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெரும்பாலும்
மகிழ்ச்சுயுடனேயே வாழ்வதைக் காண்கிறோம்.

இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் நாடோடிகளே. நாமும் பிழைப்பைத் தேடிப் பல ஊர்களுக்குச் சென்று வாழ்கிறோம். நம் விதிப்பயன் முடிந்ததும் உடலை நீத்து எங்கோ செல்கிறோம். நம் கையில் இருக்கும் ஓரே அதிகாரம் இருக்கும் சூழ்நிலையில், அது இன்பமாகிலும் துன்பமாகிலும் நாம் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோமா இல்லையா என்பதே ஆகும். மகிழ்வுடன் வாழ ஒரே வழி பொறுமை. தம்மை மீறி வந்துற்ற துன்பங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வோர்க்கே இன்ப வாழ்வு நிலைப்பதுண்டு.

யாரும் விளையாடும் தோட்டம்

திரைப்படம்: நாடோடித் தென்றல்
இயற்றியவர்: இளையராஜா
இசை: இளையராஜா
பாடியோர்:சித்ரா, மனோ
ஆண்டு: 1992

வ்வ்லலலலலல
டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
தேடவும் பள்ளுப் பாடவும் பள்ளிக் கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லே
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்லே

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டேராவப் பாத்துப் போடு ஓலத்தோடு
வேறூரு போயிச் சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

ஆவியாகிப் போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழே வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரும் ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமரைப் பூ தண்ணி போல
மாறாது எங்க வாழ்வு வானம் போல

யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக