திங்கள், 14 நவம்பர், 2011

என்றும் பதினாறு வயது பதினாறு

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று சக்தி உபாசகரான மஹாகவி பாரதி காளி தேவியைக் குறித்துப் பாடினார். இப்பாடலில் உரைத்தது போலவே எல்லோரையும் போல் வயிறு வளர்ப்பதற்கென்றே பணிகள் பல செய்து ஜீவிக்காமல், உபயோகமற்ற கதைகளைப் பேசாமல் தான் உரைத்தன யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மொழிகளாக நிலைநிறுத்தி, பிறர் மனம் நோகும்படியான செயல்கள் எதனையும் செய்யாமல் சாதிக்கொடுமையைக் களையப் பாடுபட்டு

பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான விடுதலையை விரும்பிப் பாடுபட்டு, உண்டுடுத்துறங்கி விழித்து வயோதிகமடைந்து நோய்வாய்ப்பட்டு மடியாமல் இளம் வயதிலேயே தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டுத் தன் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் மஹாகவி.

பாரதியார் பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையில் "கீதை ஒரு மோக்ஷ சாஸ்திரம், அது ஒரு அமரத்துவ சாஸ்திரம். மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் சாத்தியமெனவும் அதற்குரிய மார்க்கத்தை கீதை காட்டுகிறது" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய் இன்பங்களிலே ஆவலற்றவனாய் பகைத்தலும் விழைத்தலும் இன்றி ஒருவன் இருப்பானேயாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்ககத் தகுந்தவன்" என்ற பொருள்பட விளங்கும் கீதா ஸ்லோகம் ஒன்றை மேற்கண்ட தன் கருத்துக்கு மேற்கோளாகக் காட்டுகிறார் மஹாகவி.

மார்க்கண்டேயர் ஒரு மகரிஷி. இன்ப துன்பங்களைத் துறந்து இறைவனைச் சரணாகதியடைந்தவர். மேற்கண்ட கீதா ஸ்லோகத்தின் உபதேசப்படி வாழ்பவர். அன்றும், இன்றும், என்றும் 16 வயது இளைஞராகவே வாழும் நிலை அடைந்ததாகக் கருதப்படும் ஒரே மனிதர்.

மனிதப் பிறவியானது உலகவின்பத்தைத் துய்ப்பதற்கெனவே எடுக்கப்பட்டது என நம்பி மேற்கூறிய தத்துவங்கள் எவற்றையும் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கும் வரை இன்பமாய் வாழ வழி தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டு பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இன்ப வாழ்வு வாழ விரும்பி அதற்காகவே பாடுபடும் சாமான்ய மாந்தர்களும் என்றும் 16 வயதினராக இளமை நிலைக்கப் பெற்று வாழ்வதிலுள்ள சுகத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய இன்ப வாழ்வை அடையக் கனவு காண்பதும் இயற்கையே.

என்றும் பதினாறு வயது பதினாறு

திரைப்படம்: கன்னித் தாய்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்ணம் மின்னுவதெதனாலே? இந்த வள்ளல் தந்த நினைவாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

விழிகள் பொங்குவதெதனாலே? வீரத்திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே? இந்த வீரத்திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக