செவ்வாய், 15 நவம்பர், 2011

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வ்ருகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட காலமே இவ்வுலக வாழ்வாக உள்ளது. இந்நியதி அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருவது இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் இயற்கை நியதியே. இன்பங்கள் நேர்கையில் மகிழ்ந்து கொண்டாடுவோர் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகையில் உலகமே துன்பமயமானதெனவும், உலகே மாயம், வாழ்வே மாயம் எனவும் கருதி உலக வாழ்வை வெறுப்பது அறியாமையே. பிறப்பும் இறப்பும் நிகழ்வது சிறிது காலமே. ஆனால் வாழும் காலம் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆகும் காலத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது. எனவே மரணத்தையும் மறுபிறப்பையும் குறித்து எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாது வாழ்நாள் உள்ளளவும் வருவது வரட்டும் என்று இன்பம் துன்பம் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப் பழகிக்கொள்வதே செய்யத் தக்கது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் இவ்வுண்மையை உணராது மதிமயங்கிய மாந்தர்கள் பலர் தமக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தவர்களைத் தேடித் தெளிவு பெற விழைகையில் தங்களைக் காட்டிலும் அறிவிற் குறைந்த வேடதாரிகளை அணுகி அவர்களை ஞானியர் எனவும் மஹா பக்திமான்கள் எனவும் எண்ணி ஏமாறுவது நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கேலிக்கூத்தாகும். இத்தகைய ஞானியர் போல் வேடமிட்டு சாமான்ய மக்களை ஏமாற்றும் மனிதர்களுக்கு இவ்வுலகில் குறைவில்லை. பொது மக்கள் பலர் தாராளமாக வாரி வழங்கும் பொருளைக் கொண்டு இத்தகைய வேடதாரிகள் செல்வந்தர்களாக விளங்குவதுடன் பிறர்க்குபதேசம் தனக்கில்லை எனும் வகையில் உலகிலுள்ள யாவருக்கும் தருமோபதேசம் செய்துவிட்டுத் தாங்கள் அந்தரங்கத்தில் ஆடம்பரமாக சிற்றின்பத்தில் திளைத்து உலகையே ஏமாற்றுகின்றனர்.

வாழ்வில் தோன்றும் இன்ப துன்பங்களால் மனம் குழப்பமடைகியில் அக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற நாம் இவ்வாறு வேடமணிந்த ஞானியர் யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. உண்மை ஞானியர் பலர் நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும் என்றும் உள்ளனர். அத்தகைய ஞானியரை அடையாளம் காண்பதும் மிகவும் எளிது. அதற்கு ஒரே வழி அனைவரிடமும் அன்புடன் பழகுவதே ஆகும். அவ்வாறு பழகுகையில் நம்மிலும் அதிகத் துன்பத்தில் வாழ்வோர் பலர் அத்துன்பங்களைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டு மகிழ்ச்சியுடனும் உள்ள நிறைவுடனும் வாழ்வதை நாம் காணலாம். குறிப்பாக வயதில் முதிர்ந்த உறவினர்களும் நண்பர்களும் வாழ்க்கையை நன்குணர்ந்தவர்களாக விளங்குவது நம் அறிவுக்குப் புலப்படும்.

உலக வாழ்வை வெறுத்து ஒதுக்க உபதேசம் செய்யும் மார்க்கம் உண்மை ஞான மார்க்கமாகாது. வாழ்க்கையை முழுமனதுடன் அனுபவித்து உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என யாவருடனும் கலந்து பழகி இன்ப துன்பங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து வாழ வழிகாட்டும் மார்க்கமே உண்மை ஞான மார்க்கமாகும். ஞானி என்பவன் தவம் செய்பவனாக இருக்க வேண்டியதில்லை. நம்மைப் போல் உலக வாழ்வில் இன்பங்களை எல்லாம் அனுபவித்து வாழ்பவனாகவும் இருக்கக்கூடும்.

மத்த மதகரி முகிற்குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதியகடுதோய்
மாடகூடச் சிகரமொய்த்த சந்திரகாந்த மணிமேடை யுச்சி மீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்துநகையார்களொடு
முத்து முத்தாய்க் குலவி மோகத்திருந்துமென் யோகத்தினிலை நின்று
கைத்தல நகைப்பட விரித்தபுலி சிங்கமொடு கரடிநுழை நூழை கொண்ட
கானமலையுச்சியிற் குகையோடிருந்துமென் கரதலாமலகமென்ன
சத்தமற மோனநிலை பெற்றவர்களுய்வர்காண் சனகாதி துணிபிதன்றோ
சர்வபரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே

என்று தாயுமானவர் காழ்வில் உய்ய வழி சொல்கிறார்.

இதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நமக்கு மகிழ்ச்சியூட்ட வல்லது இசையே. நல்ல இசை எவ்விதத் துன்பங்களில் கிடந்து வாடுபவரையும் தம் துன்பங்களைச் சற்றே மறந்து அவ்விசைக்க்கேற்ப ஆடவைக்கலாகும்.

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திரைப்படம்: கண்ணன் என் காதலன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக