செவ்வாய், 26 ஜூலை, 2011

நீங்க நல்லாயிருக்கோணும்

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு "மக்கள் திலகம்" எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் "பொன்மனச் செம்மல்" என்பதாகும்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1967ஆம் ஆண்டுவரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிரப் பிற கட்சிகள் 1967 வரையிலும் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வந்தன. வெற்றி எளிதில் கிடைத்து வந்த மமதையால் காங்கிரசார் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தத் தவறியதால் விலைவாசி உயர்வு மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுப் பணிகள் நடைபெறாமை முதலிய குறைபாடுகள் மலிந்து வந்தன.

அந்த நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் சுதந்திரா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையில் இந்திய அரசியலில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஃபார்வார்டு பிளாக், சுதந்திரா கட்சி ஆகிய எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணியமைத்து 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தனர். அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக மிகக்குறுகிய காலமே பதவிவகித்த பின்னர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி கட்சியிலும் ஆட்சியிலும் முறையான கணக்கு வழக்கு வைக்கத் தவறியதால் அவரிடம் கணக்குக் கேட்டார் எம்.ஜி.ஆர். இதனால் எம்ஜியார் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் இருந்தவரையிலும் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை.

அறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று அனைவராலும் புகழப்பெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.முதலிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பொருளாதார நிலையில் நலிந்த மக்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிற அமைச்சர்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்றும் நடக்கும்படியான ஒரு கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிடத்தக்க பெரும் ஊழல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

இன்று தமிழகம் உள்ள நிலைமை நான் சொல்லாமலே அனைவரும் அறிவர். வேலியே பயிரை மேய்வது போல் மக்களைக் காப்பதாக மார்தட்டிப் பேசியே மக்களைச் சுரண்டி வாழும் மந்திரிகளும். காமராஜர் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளும் இலவசமாக இருந்த கல்வித்துறையைத் தனியாருக்கு விற்று அதன் பின்னர் கல்விக் கட்டணம் லட்சக்கணக்கில் உயர்ந்த நிலையில் தங்கள் பெயரிலும் தங்கள் பினாமி பெயரிலும் பொறியியற் கல்லூரிகளும் மருத்துவக்கல்லூரிகளும் ஏற்படுத்தி மக்களை மொட்டையடித்துப் பெரும் பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளும் தமிழகத்தையும் நம் பாரத நாட்டையும் ஆளும் இழிநிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் அன்று நடத்திய நல்லாட்சியை மீண்டும் தருவதாக அவரது வழித் தோன்றல்கள் வாக்குறிதி தருகின்றனர். எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் இதன் முன்னர் பலமுறை இந்த வழித் தோன்றல்கள் ஆட்சியில் இருந்தபோதிலும் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும் இவர்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகள் இன்று ஆட்சியிலுள்ளோர் அடிக்கும் பகல் கொள்ளைக்கு முன்னர் ஒரு தூசளவேயாகும். நம் துரதிருஷ்டவசமாக இந்தியத் திருநாட்டின் சட்டதிட்டங்கள் முறையாக வகுக்கப்படாமல் நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வந்து தேர்தல்களில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து நிலவுவதால் தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளில் யாரும் மிகவும் நேர்மையாளர் என்று சொல்ல இயலாது.

இருப்பினும் இருப்பவர்களில் குறைவான தீமையைத் தருபவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. எம்ஜிஆர் அவர்களை மனதில் நிறுத்தி அவரது வழித்தோன்றல்கள் இனியாகிலும் எம்ஜிஆர் அவர்களது வழியில் உண்மையாக நின்று மக்களுக்காக உழைக்க வேண்டுமென வேண்டி நம் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலில் தவறாது வாக்களிப்போம். தீயவர்களை அகற்றி நல்லவர்களை நாற்காலிகலில் அமர்த்துவோம். அவ்வாறு நல்லவர்கள் எனக் கருதி நாம் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துபவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை தருவோம்.

நீங்க நல்லாயிருக்கோணும்

திரைப்படம்: இதயக்கனி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
ஆண்டு: 1975

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

1 கருத்து:

  1. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பான கருத்துக்கு முதலில் நன்றி. இதயக்கனி படத்தில் வரும் "தென்னகமாம் இன்ப திருநாட்டின் மேவியதோர்" என்ற பாடல் புலவர் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டது. வாலிப கவிஞர் வாலி அல்ல என்று தெரிவிக்க விரும்புகிறேன். அன்புடன் சந்துரு பாரிஸ் பிரான்ஸ்.

    பதிலளிநீக்கு