செவ்வாய், 26 ஜூலை, 2011

நகாவலி நாட்டிலே

வசதி படைத்தவர்களெல்லோரும் வரி ஏய்ப்பு செய்து வளமாக வாழ்ந்து வருகையில் அல்லும் பகலும் அயராது உழைத்து அரை வயிற்றுக் கஞ்சிக்கென சிறிதளவு வருவாய் ஈட்டும் அப்பாவி மக்களின் மேல் வரிச்சுமை மேலும் மேலும் அதிகமாகி அல்லலுறும் நிலை இன்று நம் நாட்டில் நிலவுகிறது. பல ஆண்டுகளாக சட்டரீதியான எந்த ஒரு தொழிலையும் செய்யாது, சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடனும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தீவிரவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து கோடானு கோடிக் கணக்கில் நம் நாட்டில் பணத்தைச் சேர்த்து அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் சமூக விரோதி ஒருவன் நேற்றுவரை சுதந்திரமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் வராமல் திரிந்து வந்தான். இன்று நம் நாட்டில் சொற்ப அளவில் நீதியும் அவ்வப்போது செயல்படும் எனும் சிறு அடையாளமாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் அந்த சமூகவிரோதி மத்திய புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்படுகிறான்.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்காக நாட்டு மக்களது வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளில் முக்காலே மூணு வீசம் பெரும் பணக்காரர்களுக்குக் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட நிலையில் இருக்கும் சொற்ப இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற வேண்டி கால் கடுக்க வரிசையில் நின்றிருக்கும் பொதுமக்களுக்குப் போலீசாரைக் கொண்டு தடியடிகளே வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்குரிய நுழைவுச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப் படுகின்றன. இவ்வாறு கள்ளச் சந்தையில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்று விளையாட்டை வேடிக்கை பார்க்க வரும் பெரிய மனிதர்களுடன் ஒன்று சேர்ந்து இந்திய பாகிஸ்தானியப் பிரதமர்களும் விளையாட்டை வேடிக்கை பார்க்கப் போகின்றனர். என்னே ஜனநாயகம்?

இத்தகைய அநீதி கண்முன்னர் தங்களுக்கு இழைக்கப்பட்டும் நம் நாட்டு மக்களுக்கு அதீதமான தேசப்பற்று. அதன் அடையாளமாக நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. மஹாத்மாவும் காணாத ஒரு உயர்ந்த தேசபக்தி அல்லவா இது! தாங்கள் அன்றாடம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தைப் பல விதங்களில் வரிகளை விதித்தும் விலைவாசிகளை உயர்த்தியும் கள்ளப் பண கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிப்பதைப் பற்றி அக்கரை கொள்ளாமல் கிரிக்கெட் மோகத்தில் உழல்கின்றனர் இந்தியத் திருநாட்டின் உத்தம புத்திரர்கள்,

இந்தியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டு அதனை முறைகேடாக சீனாவுக்கு விற்றதுடன் தொடர்ந்து இந்தியாவுக்கெதிராகப் பல வழிகளிலும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதை விட இவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது பெரிதாகப் போய் விட்டது.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாமல் மக்கள் மேல் மின்வெட்டு தொட்ரந்து திணிக்கப்படுகையில், நோய்வாய்ப்பட்ட சமயம் தங்கள் வாழ்நாளில் சேமித்த தொகையனைத்தையும் செலவிட்டுப் பற்றாமையால் அக்கம் பக்கத்திலும் பல்வேறு நண்பர்கள் மூலமாகவும் கடனாகவும் பிச்சையாகவும் சேர்த்த பணத்தைக் கொண்டு சிகிச்சை பெற அரசு மருத்துவ மனைகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவ மனைகளை நாடி, பெரும் பொருட் செலவில் நோய் தீர வழிதேடிச் செல்லும் மக்களின் மேல் புதிதாக ஒரு வரியை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடத்தும் மத்திய அரசு நூதனமான முறையில் கண்டறிந்து விதித்தது.

அதாவது காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் (ஏர் கண்டிஷனர்கள்) உபயோகப் படும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர், சிகிச்சைக்காக செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டுமென்று சொல்லும் இந்தச் சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் வாயிலாக விதிக்கப் பட்டது. காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் இன்றி எந்த ஒரு மருத்துவ மனையிலும் அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்ய இயலாது எனும் அனைவரும் அறிந்த உண்மையைப் பல அனுபவம் மிக்க மருத்துவர்களும் பொது நல அமைப்புகளும் செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து எடுத்துச் சொன்ன பின்னரே நம் நாட்டின் நிதியமைச்சருக்கு இந்த சிறு உண்மை விளங்கி அந்த அக்கிரம வரி பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. இவரெல்லாம் நிதியமைச்சராக இருப்பதை விட எங்காவது வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் ஒரு சேட்டு கடையில் கணக்கெழுதப் போகலாம்.

தற்சமயம் மத்தியிலும் நம் மாநிலத்திலும் நடைபெறுவது ஆட்சி என்று சொல்வதை விட கருப்புப் பணத்தின் பலத்தாலும் சமுதாய விரோதிகளின் செயல்பாடுகளாலும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவி அரியணையை அபகரித்துக் கொண்ட கொள்ளைக் கும்பலின் கோரத் தாண்டவம் என்று சொல்வது சாலப் பொருந்தும். இந்த நாடு அடையும் சீர்கேடுகளைக் காண்கையில் ஒரு வரலாற்றுக் கதையில் சொல்லப்பட்ட அரசாங்கத்தில் பெண்கள் அதிகாரம் செலுத்தும் நகாவலி நாட்டை விடவும் மோசமாக இருப்பது போல் தோன்றுகிறது.

நகாவலி நாட்டிலே

திரைப்படம்: குலேபகாவலி
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நகாவலி நாட்டிலே ஏ..ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.ஏ
பகாவலி ஆட்சியிலே ஏ...ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.
நியாயமாய் வாழவும் வழியுமில்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கனிவாகப் பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி இங்கு
தடுக்கி விழுந்த வரி குனிந்து நிமிர்ந்தவரி
இட்டிவரி சட்னி வரி பட்னி வரி இதுபோல்
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத இல்லாத ஏழை மக்களும்
அடிமையாகினார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புதுப்புது வரிகளை
போடுவதெல்லாம் ஏதும் நியாயமில்லே
எதுத்துக் கேட்கவும் நாதியில்லே அவங்க
என்ன செய்தாலும் கேள்வியில்லே இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கு
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழப் பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
இந்த நாட்டு வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக