வெள்ளி, 22 ஜூலை, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்

பிற அனைத்து உயிரினங்களினும் மேலான அறிவுள்ளவனாகக் கருதப்படும் மனிதன் உண்மையில் அத்தகைய கருத்துக்கு அருகதையுள்ளவனா என்பது சிந்திக்கத் தக்கதே. இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்தறிந்த மனிதன் அதனால் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் துணையுடன் செயற்கைக் கோள்கள் முதல் பல அற்புதமான சாதனங்களையும் படைத்ததனால் செருக்கடைந்து தன்னை இறைவனுக்கு நிகராக எண்ணிக்கொண்டு மனிதத் தன்மையை மறந்தான். பிறரிடம் அன்பு செலுத்துவதன் அவசியத்தை உணரத் தவறிவிட்டான். தன் வாழ்நாள் வெகு சில காலமே எனும் உண்மையை அறிந்தும் அறியாத மயக்க நிலையிலேயே ஆயுள் முழுமையும் கழித்து தான் சேர்த்த செல்வங்களைத் தானும் முழுமையாக அனுபவியாமல் பிறரது துயர் துடைக்கவும் உதவாமல் மடிந்த பின்னரும் பிறர் துன்பப்படக் காரணமாகிறான்.

இததகைய சிற்றறிவாளரான மனிதர்களுள் பிறரை விட ஏதேனும் ஓர் வகையில் அனுகூலமான நிலைமையில் உள்ளவன் அவ்வனுகூலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தான் மட்டும் வாழ்வில் உயர முயல்கிறான். அத்தகைய அனுகூலத்தைப் பெறாதவன் பலவீன்மடைந்து வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வகையின்றி வருந்துகிறான். அவ்வருத்தத்தில் தன்னை விட மேலான நிலைமையிலுள்ளவனைக் கண்டு பொறாமை கொண்டு மன நிம்மதியையும் இழக்கிறான்.

இத்தகைய ஏற்றத் தாழ்வு கருதும் மனப்பான்மையுள்ள மாந்தர்கள் துன்பங்களிலிருந்து என்றும் விடுதலை பெற மாட்டார்கள். உலக வாழ்வில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவே பிறப்பும் இறப்பும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவையே. இந்த ரகசியத்தை உணர்ந்தவனே அறிவாளி. அத்தகைய அறிவாளிகளும் இதே சமுதாயத்தில் நம் கண்முன்னரே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிந்து நாமும் அவர்கள் போல அறிவாளிகளாகி வாழ்வில் விதிவசமாக நேரும் துன்பங்களைத் தாங்கப் பழகிக் கொள்வோமெனில் வாழ்வில் என்றும் இன்பம் நிலவ வழி ஏற்படும்.

நமக்கொரு துன்பம் நேருகையில் அதிலிருந்து விடுபட நாம் சாதாரணமாக சக மனிதர்களின் உதவியை நாடுகிறோம். சக மனிதர்கள் உதவாவிடில் மனமொடிந்து நம்மை நாமே கடிந்து கொண்டு துன்பத்திலேயே உழல்கிறோம். வாழ்வில் நேரக்கூடிய அனைத்துத் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தி நமக்குள்ளேயும் உண்டு என்பதும் மேலும் இயற்கையின் துணையும் நமக்கு என்றும் உள்ளதென்பதும் சற்றே சிந்தித்தோமெனில் நமக்கு விளங்கும். அத்தகைய அறிவுத் தெளிவு பெற மிகவும் இன்றியமையாதது இறையுணர்வாகும். இறையுணர்வு கொண்டவர் ஆணவமகன்று என்றும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்வால் உணர்ந்து அறிவால் அறிந்து அவனருளை நாளும் வேண்டிப் பெற்று இன்ப வாழ்வு வாழ்வது திண்ணம்.

வையகத்துக்கில்லை மனமேயுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லா லழியுந் துய்ர்

இறைவனிடம் கையேந்துங்கள்

இயற்றியவர்: ஆர். அப்துல் சலாம்
பாடியவர்: நாகூர் ஈ.எம். ஹனீபா

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

4 கருத்துகள்:

  1. தொழுகை


    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு வாஞ்சூர்,

    தங்கள் விளக்கத்துக்கு நன்றி. முஸ்லிம்கள் தொழுகை செய்யக் கடைபிடிக்கும் ஆசனம் வஜ்ஜிராசனம். இந்த ஆசனம் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி போதித்த யோகப் பயிற்சியில் முக்கிய இடம் பெறுகிறது.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஆகிரா,

    தங்களின் தகவலுக்கு என‌து நன்றிகள்.


    தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவ‌ர்க‌ளின் தோற்ற‌த்துக்கு முன்ப‌தாக‌வே வரைய‌றுக்கப்பட்ட முஸ்லீம்க‌ளின்
    தொழுகை முறைக‌ளே எவ்வித‌ மாற்ற‌ங்க‌ளும் இடைசெருக‌ல்க‌ளும் இல்லாது இன்று வ‌ரை க‌டைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து.
    -----------

    29.3.06
    தத்துவ ஞானி அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி காலமானார்


    இன்றைய தினமணியில் வந்த இந்தச் செய்தி என்னைக் கலங்கச் செய்தது

    கோவை, மார்ச் 29: ஆழியாறு அறிவுத் திருக்கோயில் நிறுவனர், வேதாத்ரி மகரிஷி (95) செவ்வாய்க்கிழமை காலமானார்.

    3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.

    மலச்சிக்கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு 10 நாள்களுக்கு முன்பு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடல் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பின்னர் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

    3 நாள்களுக்கு முன்பு சிறுநீரகம் செயலிழந்து, டயாலிஸிஸ் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இறந்தார். அவரது உடல் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    "திங்கள்கிழமை இரவுவரை சுயநினைவுடன் இருந்தார். செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பகல் 12.30-க்கு இறந்தார்' என்று கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் கூறினார்.


    SOURCE: http://achimakan.blogspot.com/2006/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஆகிரா,

    என்னுடைய கருத்துகளுக்கு தாங்க‌ளாக‌வே அக்கறையுடன் சிரமம் பாராது

    விளக்கப்படங்களையும் இணைத்து

    அடியிற்கண்ட தளத்தில் எந்த பிரதியுபகாரமும் எதிர்நோக்காமல்

    ப‌ல்லோர் பார்வைக்கு கிட்டிட‌ செய்யும் தங்களின் பதிவுக்கு என‌து நன்றிகள் பல்லாயிர‌ம்.

    த‌ங்க‌ளின் ப‌திவு

    >>>> தொழுகை – வாஞ்சூர் <<<<<


    மீண்டும் ந‌ன்றிக‌ள் ப‌ல்லாயிர‌ம்.

    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

    பதிலளிநீக்கு