செவ்வாய், 26 ஜூலை, 2011

சீர்மேவு குருபதம்

ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒருவர் தலைமை வகித்து அக்கூட்டத்தினர் அனைவரையும் வழிநடத்திச் செல்வது மரபாக இருந்தது. நாகரீகமடையாத நிலையில் தலைவனாயிருக்க ஒருவரது வலிமை ஒன்றே அடிப்படையாக இருந்த நிலை நாகரீகம் வளர வளர மாறி ஒரு தலைவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதியில் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த மனிதர்கள் அதன் பின்னர் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் காடுகளில் ஒரு பகுதியை அழித்து நாடுகளை உருவாக்கி சமுதாயங்களாக மிருகங்களிடமிருந்து விலகி வாழத் தலைப்பட்டனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக அமைக்கப்பெற்று அவனுக்குப் பின்னர் அவனது தலைமுறையினர் பாரம்பரிய முறையில் அரசர்களாக விளங்கும் வகையில் மனித சமுதாயம் வளர்ந்த நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் வீரத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுப் போட்டிகளும் அறிவாளிகளைத் தேர்வு செய்யத் தர்க்கம் முதலிய பல்வித அறிவுப் போட்டிகளும் நடைபெறுவது நடைமுறை ஆனது.

அறிவுப் போட்டிகளில் பங்குபெறுவோரது சமுதாய நோக்கும் தனிமனிதக் கடமைகளும் குறித்த விழிப்புணர்வும் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய அறிவுப் போட்டிகளில் அரச குடும்பத்தினர் மட்டுமின்றி மத, சமூகநல அமைப்புகளில் முனைந்து ஈடுபட்டவர்களும், புலவர்களும் பங்கு பெற்றனர் என்பது பல புராண, இதிகாச சரித்திரக் கதைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதும், உண்மையே பேசி, மூத்தோரை மதித்து, சக மனிதர் அனைவரிடமும் விலங்குகள் உட்பட ஏனைய பிற உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமான வாழ்வை மேற்கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் தலையாய கடமையாக அன்று முதல் இன்று வரையிலும் கருதப்பட்டு வருகிறது.

வரலாற்றில் சொல்லப்பட்ட இத்தகைய அறிவுப்போட்டிகளும் அவற்றின் மூலம் விளங்கும் பலவித செய்திகளும் மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இத்தகைய அறிவுப் போட்டிகள் பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அமைக்கப்பெற்று அதன் மூலம் அவற்றைக் காணும் ரசிகர்களது அறிவையும் பண்பையும் வளர்க்கப் பயன்பட்டு வருகின்றன.

அத்தகைய அறிவுப் போட்டி ஒன்று புரட்சித் தலைகர் எம்ஜிஆர் அவர்களும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பங்குபெற்று நடித்த காட்சி ஒன்றில் அவ்விருவரும் தம் கேள்விகளையும் பதில்களையும் இனிய இசையுடன் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியாக சக்கரவர்த்தித் திருமகள் எனும் திரைப்படத்தில் படமாக்கப் பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் தன் சொந்தக் குரலில் பாட, எம்ஜிஆர் அவர்களுக்கு சீர்காழி கோவிந்த ராஜன் குரல் கொடுக்க மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எத்துணை முறைகள் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

சீர்மேவு குருபதம்

திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
இயற்றியவர்: கிளௌன் சுந்தரம்
இடை: ஜி. ராமநாதன்
பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்

ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உம
தாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்
பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
புறப்பட்ட கதை போலே அல்லவா தற்
புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா

ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

பதில்.. சொல்றேன்

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான்! இரு

கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே

ஹஹங் ஹங் சர்தான் ம்

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே பல
திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்

பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்கே கவனி

காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே

சொல்லிப் புட்டியே!

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சர்தான் சர்தான் சர்தான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கத்தி இல்லே கோடாலி இல்லே
ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக