வியாழன், 14 ஜூலை, 2011

அன்பென்ற மழையிலே

நான் யார்? இவ்வுலகில் நான் ஏன் வந்து பிறந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாதிருந்தும் மாயையினால் பொய்யான இவ்வுடலை மெய்யென்றும் இவ்வுடலைச் சுமந்து அலையும் இந்த ஜடமே நான் என்றும் இவ்வுலகமே எனக்கு நிலையான இருப்பிடமென்றும் எண்ணி, எந்நாளும் தேவைக்கு மேல் பணத்தையும், பொன்னையும், பொருளையும் சேர்ப்பதிலேயே காலத்தைக் கழித்து, தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து பிறர்க்கன்பு செய்யாது, தாம் தேடிய செல்வத்தைத் தானும் அனுபவியாது பிறரையும் அனுபவிக்க விடாது வீணடித்து, என்றோ ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாக, இவ்வுடலைச் சுமந்த உயிர் சென்ற இடம் தெரியாது காற்றோடு காற்றாய்க் கரைந்து போக மறைந்திடும் மானுடனே!

நீ இவ்வாறான பொருள் தேடியலையும் வாழ்வு வாழ்ந்து மடிந்தாயெனில் நீ மறைந்த பின்னர் நீ இருந்த சுவடே தெரியாது அழிந்து போகும். அவ்வாறன்றி நீ இவ்வுலகில் வாழும் காலத்தில் உனது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான செல்வத்தை மட்டும் உண்மையான உழைப்பினால் சம்பாதித்து, அதிகப்படியான காலத்தைப் பிறர் துயர் துடைக்கும் பணியிலும் தேச சேவையிலும் செலவழித்தாயெனில் உன் பூத உடல் மறைந்து போன பின்னரும் நீ புகழுடம்பெய்தி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மக்கள் மனங்களில் இவ்வுலகம் உள்ளளவும் இறையெனக் கருதிப் போற்றப் படுவாய்.

இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் உணர்த்தவென்றே இவ்வுலகில் மனிதனாய் அவதரித்து அன்பெனும் மழை பொழிந்து மனிதகுலம் பண்பட வாழ்ந்து காட்டி உலகம் உய்யச் செய்த கருணைக் கடல் இயேசுபிரான். அவர் காட்டிய அன்பு நெறியைக் கடைபிடித்து எவரோடும் பேதமின்றி எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் என்ற கொள்கையுடன் வாழ்வோமாக! அமர வாழ்வு பெறுவோமாக!

அன்பென்ற மழையிலே

படம்: மின்சாரக் கனவு
இயற்றியவர்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே

1 கருத்து: