செவ்வாய், 19 ஜூலை, 2011

இயேசுநாதர் பேசினால்

அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய கிரித்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/20101225vs_christmas.php

இந்தப் பாழும் உலகில் உண்மைக்கு உண்மையிலேயே ஏதேனும் மரியாதை உள்ளதா என்பதே மிகப் பெரியதொரு கேள்விக்குறியாகி விட்டது. இதற்குக் காரணம் மாயையில் உழன்று சிற்றின்ப நினைப்பிலே ஊறி, பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் பெரும்பான்மையினரே. இந்தக் கேடுகெட்ட இந்திய சமுதாயத்திலே சாமான்யனுக்கொரு நீதி, அதிகார வர்க்கத்தினரான சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வத்திலே மிதக்கும் பல வர்த்தகர்களுக்கும் வேறொரு நீதி எனும் நடைமுறை இருந்து வருகிறது.

சாமான்யன் ஒருவன் குற்றமிழைத்தாலோ அல்லது குற்றமிழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாலோ முதற்கண் அவன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவான். அதன் பின்னர் மிகவும் கொடுமையான முறையில் அடி உதைகளுடன் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தாலும் செய்யாவிடினும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவான், அல்லது விசாரணையின் போதே கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு வீதியில் விட்டெறியப் படுவான்.

ஆனால் அதிகார வர்க்கத்திலுள்ள ஒருவன் குற்றமிழைத்தாலும் அவன் மேல் யார் எத்துணை முறை குற்றம் கூறி வந்தாலும் அவன் சாதாரணமாக விசாரிக்கப் படுவதில்லை. மக்களுக்கு நாட்டு நடப்பை செய்திகளாகத் தரும் பல ஊடகங்களின் வழியே அவன் செய்த குற்றம் ஆதாரத்துடன் வெளியிடப்படுகையில் அரை மனதுடன் விசாரணை என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேறும். மிகவும் பரபரப்புடன் சில காலம் அவ்விசாரணை குறித்து, விரைவில் குற்றவாளி தண்டனை பெறுவான் என அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகும். பின்னர் சில காலம் இது குறித்து யாரும் எதுவும் கூற மாட்டார்கள். அதன் பின்னர் ஒரு நாள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி நிரபராதியாக அறிவிக்கப்பட்டு முன்னர் வகித்ததைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருத்தப் படுவான். இது தான் இன்றைய இந்திய அரசியல்.

இங்கே காவல் துறைகளும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைகளும் அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் கீழேயே செயல் படமுடியும் தனித்து இயங்க இயலாது. இந்த அரசியல்வாதிகள் இன்றும் என்றும் மக்களுக்கு மனமுவந்து நீதி வழங்குவர் என எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கொப்பாகும். என்றும் அநீதி புரியும் அரசியல்வாதிகள் தாங்கள் மிகவும் நேர்மையாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு ஆட்சி செய்வதாகவும், பல நல்ல திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்துவதாகவும் பறைசாற்றிக்கொண்டு அத்தகைய திட்டங்கள் யாவிலும் பெரும் தொகையைத் திருடி அதையும் தங்கள் சொந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்வது ஒன்றே இன்றைய உண்மை அரசியல் நிலை.

இன்று நாட்டையே உலுக்கிய உலகிலேயே மிகப்பெரிய தொலைத் தொடர்புத் துறை ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையினரால் விசரணை செய்யப்படும் நிலையில் தமிழக அரசின் பிரதான பிரதிநிதிகள் பல ஊர்களிலும் பெரும் தொகை செலவிட்டு கூட்டங்கள் நடத்தி ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்றதொரு வாதத்தை மக்கள் முன் வைத்து அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய அட்டூழியங்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு அறிவிப்பை இயேசு கிரிஸ்துவின் பிறந்த தினத்தின் முதல் தினத்தன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது இயேசுநாதர் எவ்வாறு ஏழை மக்களின் மேல் கருணை கொண்டு அவர்களது துயர் துடைக்கவென்றே செயல்புரிந்தாரோ அவ்வாறே தாம் ஏழை மக்களுக்காகவே தொடர்ந்து தொண்டாட்டுவதாகக் கூறியுள்ளார்.

இயேசுநாதருக்கு இதைவிடவும் பெரியதொரு அவமதிப்பை யாராலும் செய்ய முடியாது.

இயேசுநாதரே! தாம் செய்த பாபத்தை மூடி மறைத்துக்கொண்டு இத்தகைய அவமறியாதையை உங்களுக்கு இழைக்கும் இப்பாவிகளையும் மன்னிப்பீரா?

இயேசுநாதர் பேசினால்

திரைப்படம்: தாயே உனக்காக
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: B வசந்தா

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக