வியாழன், 14 ஜூலை, 2011

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

காஞ்சி மாநகர் வரலாறு

ஏகாம்பரநாதர் கோயில் வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன்.
சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.

ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.

முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.

சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இவற்றுடன் இன்னும் பலப்பல சிறப்புகளைப் பெற்றதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரேஷு காஞ்சி என்று புகழப்பெற்ற காஞ்சிபுரத்தைப் பற்றி மேலும் அறிய:

http://www.ekambaranathartemple.org/

இன்றைய பாடல் காஞ்சி நகரைப் பற்றியதாக அமைகிறது.

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

திரைப்படம்: காஞ்சித் தலைவன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
ஆண்டு: 1963

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோகை விரித்தே ஆடிடுவோம்
தோகை விரித்தே ஆடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
தீர நடையாளனோ யானைப்படையாளனோ
தீர நடையாளனோ யானைப்படையாளனோ - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ? - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ?

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே
கனியமுதே உன்னால் என்தன் உயிரிருக்கு

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக