வெள்ளி, 22 ஜூலை, 2011

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலாகக் கருதப்படுபவன் மனிதன். இதற்குக் காரணம் மனிதனின் பகுத்தறிவும் பிற உயிர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் பண்புமேயாகும். இதனாலேயே இறைவனை எல்லோரும் மனித வடிவில் மனதில் வடித்துப் பல்வேறு பெயர்களாலும் வணங்குகிறோம். இயற்கையின் அரிய சக்திகளை ஆராய்ந்தறிந்து அவற்றைக் கொண்டு பல வியக்கத்தக்க சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளதை நாம் நன்கறிவோம். முற்காலத்தில் புராண இதிகாசக் கதைகளில் விண்ணில் பறக்கும் புஷ்பக விமானங்களையும் மாயக் கண்ணாடியையும் பிரம்மாஸ்திரம் போன்ற அதீத சக்தியுள்ள ஆயுதங்களையும் பற்றி குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம். அத்தகைய சாதனங்கள் கற்பனையாகவே இருந்திருக்கக்க்கூடும் எனினும் அக்கற்பனைகளுக்கு உண்மை வடிவமளித்து இன்று விஞ்ஞான ரீதியில் அவற்றுக்கொப்பான சாதனங்கள் பலவற்றை மனிதன் தொடர்ந்து படைத்து வருவதைக் காண்கிறோம்.

மனிதனின் அறிவு வளர வளர அவனது மனிதத் தன்மை பெருமளவில் குறைந்து வருவதையும் காண்கையில் மனம் பெரிதும் வேதனை கொள்கிறது. தனது பகுத்தறிவைப் பொருளீட்டுவதற்கும் பிறரை விடத் தான் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கும் உதவும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப் பழகிய மனிதன் தனது பேராசையால் பிறர் பெரும் அல்லலுறுவதைக் கண்டும் காணாதவன் போல் உண்மையில் ஒரு கொடிய வனவிலங்கினும் கேவலமான மனப்பான்மையுடன் வாழ்வதைக் காண்கையில் மனிதர்கள் யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு நாம் சென்றால் என்ன எனுமளவுக்கு நல்லோர் பலர் இதயம் துன்புற்று வருந்துகின்றனர்.

நல்லவர்களெல்லோரும் சமுதாயத்தை விட்டகன்று விட்டால் துன்பங்கள் மேலும் பெருகி ஜீவன்கள் வருந்தி மடிவரன்றோ? எனவே அறியாமையால் தீமைகள் செய்வோரைத் திருத்த உரிய முயற்சிகள் மேற்கொண்டு நல்ல எண்ணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றி சமுதாயத்தை மேம்படுத்த அறிவுள்ளவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டாலே உலகில் துன்பப்படுவோரது எண்ணிக்கை குறைந்து அமைதி நிலவும். எல்லா மனிதர்களும் நம் உறவு என்று உணர்ந்து வேற்றுமை நீங்கி ஒற்றுமையுணர்வுடன் இருப்பவர் இல்லாதோருக்குக் கொடுத்துதவி இன்னல் தீர்த்து எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணததை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளைத் தவறாது செய்தல் வேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று ஏட்டில் எழுதிவைத்து விட்டு ஏழ்மை அகலப் பாடுபடாமல் ஏழை மேலும் ஏழையாக, செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாக இடையே நல்லவர் போல் நாடகமாடி சமுதாயத்தை சுரண்டுவோருடன் சேராது உண்மையாய் ஊருக்குழைப்பவர் யாரென்று இனங்கண்டு அத்தகைய நல்லோரைத் துணைக்கொண்டு நன்மையே அனைவருக்கும் விளையப் பாடுபடுவோம். கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, பகுத்தறிவாளர்கள் என்று தம்மைப் பறைசாற்றிக்கொண்டு ஆலயங்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, சாதி வெறியைத் தூண்டிவிட்டு ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் நம்முள் சண்டையை மூட்டிவிட்டு நம் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவித் தான் மட்டும் லாபமடைபவன் யார் என்றறிந்து அவனை விலக்கி மெய்யன்பர்கள் காட்டிய பாதையில் பயணம் மேற்கொள்வோம் இறையருளை வேண்டிப் பெறுவோம். இப்பிறவிப் பயன் துன்புறும் பிற ஜீவன்களுக்கு உதவுவதே எனும் உண்மையை உணர்ந்து அதன்படி உத்தமர்களாக வாழ்ந்து உன்னத நிலையை எய்துவோம்.

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இயற்றியவர்: குருவிக்கரம்பை ஷண்முகம்
இசை: இளையராஜா
பாடியோர்: லதா ரஜினிகாந்த்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும்
தலைவா எம் தலைவா
ஊனம் உள்ள பேரைக் காத்திடும்
இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக