புதன், 13 ஜூலை, 2011

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

தெய்வம் மானுஷ ரூபேண: அதாவது தெய்வம் மனித வடிவில் விளங்குவது. தெய்வம் எனும் பகுத்தறிவுக்கு எட்டாத எல்லையில்லாத சக்தியை அனைவரும் வ்ழிபடுவது துன்பங்களிலிருந்து விடுபடவும் அத்தகைய துன்பங்களைத் தாங்கும் மனோவலிமையைப் பெறவுமேயாகும். மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்மை நம்பியவர்களைக் குறைவின்றிக் காத்து அனைவரிடமும் கருணையுடனும் அன்புடனும் பழகினால் நம்மை எல்லோரும் என்றும் தெய்வமாகப் போற்றி வணங்குவதுறுதி.

ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி, மக்கள் மற்றும் தன்னை நம்பி வாழும் வயது முதிர்ந்த பெற்றோர், உற்றார் உறவினர் அனைவரது தேவைகளுக்கேற்ற பொருளை உழைத்து ஈட்டி அவர்களுக்குத் தன் வாழ்நாள் உள்ளவரை தக்க உதவிகளைச் செய்து வாழ்தல் எவ்வாறு இன்றியமையாத கடமையாகக் கருதப்படுகிறதோ அதே போல ஒரு நாட்டின் மக்கள் அனைவரையும் அவர்களது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்து காப்பது நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கடமை.

இத்தகைய கடமைகளை முறையாகவும் உண்மையாகவும் செய்ய ஒருவர் முதற்கண் உண்மை ஒன்றையே பேசி நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்வது மிவகும் அவசியம். அவ்வாறு உண்மையையே வாழ்வில் அனைத்திலும் பெரிதெனக் கொண்டு வாழ்ந்து காட்டிய நம் தேசப்பிதா மஹாத்மா காந்தியை இன்று அமெரிக்காவின் ஜானாதிபதி முதல் உலகிலுள்ளோர் அனைவரும் போற்றி வணங்குவதைக் காண்கிறோம். நாம் வாழ்வில் பெரும்பொருள் ஈட்டி பெரிய செல்வந்தனாக விளங்குவதில் ஏற்படும் பெருமையை விடவும் வாழ்நாள் முழுதும் வறுமையில் வாடினாலும் பொய் சொல்லாது உண்மையே பேசி உத்தமனாக வாழ்வதால் ஏற்படும் பெருமை மிகவும் பெரியது.

உண்மையின் பாதையில் தொட்ர்ந்து செல்பவன் ஒரு நாளும் தோல்வியடைவதில்லை, ஏனெனில் உண்மை ஒருவனிடம் இருக்குமேயானால் அவனுக்கு இவ்வுலகமே துணையாக நிற்கும். சந்தர்ப்பவசத்தால் அவனை விரோதிகள் யாரும் சதி செய்ய முயன்றால் அத்தகைய சதியிலிருந்து அவனை அவனது உண்மையே மீட்க வல்லதாகும். எத்துணை பணமிருந்தாலும் எவ்வளவு அறிவிருந்தாலும் எத்துணை பேர் புகழ வாழ்ந்தாலும் ஒருவரிடம் உண்மையில்லாவிடில் அவர் இருக்கையிலும் இறக்கையிலும் அதன் பின்னரும் என்றென்றும் இகழப்படுவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும் உண்மையாகும்.

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" எனும் கவிஞனின் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

திரைப்படம்: நீலமலைத் திருடன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா

குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா ஆ ஆஆஆ
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
செல்லடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக