புதன், 23 அக்டோபர், 2013

கொஞ்சும் மொழி மைந்தர்களே

நெடுநாட்களாக மழையின்றி வரண்ட சூழ்நிலை நிலவுவதாலும் வெயில் மிகவும் கடுமையாக வாட்டியதாலும் தொடர்ந்து கணிணி அருகில் அமர்ந்து பணி செய்ய இயலாத நிலையில் தடைப்பட்டிருந்த தினம் ஒரு பாடல் பதிவு ஒரு நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் தொடர்கிறது. 

மனிதர்களாகிய நாம் எவ்வளவு தான் முயன்றாலும் சில செயல்களை நம் விருப்பத்தின் படியே நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக் கைதிகளாக இவ்வுலகில் திகழ்கிறோம் எனும் அப்பழுக்கற்ற உண்மை இதிலிருந்து தெரிகிறது. வாழ்வது எதுவரை என்பதும் வாழ்நளில் சாதிப்பது யாது என்பதும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமபாவத்துடன் அனுபவித்து என்றும் மகிழ்ச்சியாக இருப்பது நம் கையிலேயே உள்ளது. வாழ்க்கையில் நமக்குத் தானாகக் கிட்டும் இன்பங்களை மனதார அனுபவித்து மகிழ வேண்டும். அம்மகிழ்ச்சியில் கடந்த காலத்தின் துன்ப நினைவுகளையும் எதிர்காலத்தை எதிர்கொள்வது குறித்த அச்சத்தையும் வெல்ல வேண்டும். அப்பொழுது நம்முள் எத்தகைய துயரங்களையும் தாங்கும் வலிமை வளரும்.

இயற்கை நம்மையும் படைத்து நாம் அருந்தி மகிழ அமுதொத்த நீரும், காய், கனி, கிழங்கும் தானியங்களும் தந்து அவற்றை விளைவிக்கும் ஆற்றலையும் அளித்து இன்பமாய் வாழ வழி செய்திருக்க நம்மில் பலர் இயற்கை வளங்களைத் தாமும் அனுபவியாது பிறரும் அனுபவிக்க விடாது வெறும் காகிதத்தாலான பணத்தை சேர்ப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் வீணாக்குகின்றனர். சாயுற பக்கமே சாயுற செம்மரி ஆடுகள் போல் இத்தகைய மாந்தர்களின் பகட்டைக் கண்டு அவர்கள் தம்மை விட அதிகமான இன்பங்களை அனுபவிப்பதாக எண்ணி நம்மில் பலர் தாங்களும் அவர்களைப் பின்பற்றி அழிவுப் பாதையில் செல்வது மடமை.

இவ்வுலகம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இங்கே அனைவருக்கும் அனைத்தும் உள. அவற்றை அறியாமல் எச்சிலைக்கு சண்டையிடும் தெரு நாய்கள் போல் மனிதர்கள் பொன் பொருளுக்காகத் தம்முள் வேற்றுமையை வளர்த்துக் கொண்டு சண்டையிடுவது தகாது.

உலகில் எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடந்தாலும் அனைத்திற்கும் மேலாக அளவிடற்கரிய இன்பம் தருவது உறவுகளே. அவற்றிலும் குறிப்பாகப் பிள்ளைச் செல்வங்களே. பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்க, பேரப் பிள்ளைகளைப் பெற்று, தாத்தா பாட்டியாகும் அதிர்ஷ்டசாலி மக்கள் பிறர் யாவரைக் காட்டிலும் மிகவும் அதிகமான இன்பம் அடைவர் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறு இறையருளால் வந்து வாய்க்கும் பிள்ளைச் செல்வங்களுக்கு இன்பமாய் வாழ வழி காட்டுவது நம் கடமை. 

அவர்கள் ஒருவரோடொருவர் அன்பு செலுத்தவும், என்றும் ஒற்றுமையுடன் இருக்கவும் உலகிலுள்ள ஜீவர்கள் யாவரையும் நேசித்து, பரோபகார சிந்தனையுடன் வாழ நாம் வழி காட்ட வேண்டும்.


திரைப்படம்: என் வீடு
இயற்றியவர்: 
இசை: வி. நாகைய்யா, ஏ. ராமராவ்
பாடியோர். டி.ஏ. மோதி, எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1953

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே
கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னை
ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னைப் பாடுவீரே

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
பூங்காவாம் உன்தன் மனம் உள்ளன்பே தெய்வமனம்
இவ்வுண்மை நீ மறவேல்

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

பூலோகம் தனில் இங்கே சொர்க்கலோகம் அடைவாயே
புண்ணியத்தில் மானிடப் பிறப்படைந்த தென்குவையே
நெறி தவறி நீ வீழ்ந்தால்
நெறி தவறி நீ வீழ்ந்தால் பாழடைந்த துர்வாழ்வாய்
கை தவறிய கண்ணாடி
கை தவறிய கண்ணாடித் தூள் போலாம் பயனிலை வாடேல்
கொடிய பாதை நடவாதே மனதில் மகிழ்ச்சி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு
அன்பிலார்க்கு இன்பம் இல்லை இவ்வுண்மை நீ மறவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக