செவ்வாய், 15 நவம்பர், 2011

பாதுகையே துணையாகும் எந்நாளும்

பாரத தேசத்தின் பெருமைக்குக் காரணமாய் விளங்கும் மனித நெறிகள முறையாகக் கடைபிடித்து உத்தமனாய், சத்திய சந்தனாய், தந்தை சொல் காத்த தனயனாக, ஏகபத்தினி விரதனாக, தன்னை நம்புவோரைக் காப்பவனாக, உலகிலுள்ள அனைவரையும் சகோதர பாசத்துடன் அரவணைப்பவனாக விளங்கிய உன்னத புருஷன் ராமனின் கதையை விளக்குவது ராமாயணம். இந்தியாவின் பழம்பெரும் இதிகாச காவியமான இராமாயணத்தில் அதனை சமஸ்கிருத மொழியில் ஆதியில் எழுதிய வியாசர் இராமனைக் கடவுளுடைய அவதாரமாக விவரிக்கவில்லை. இக்காவியத்தைத் தமிழில் புனைந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனது அவதாரம் குறித்து மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அயோத்தி நகரை ஆண்டுவந்த இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த தசரத மன்னன் நீண்ட காலம் புத்திரப் பேறின்றி வாட குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக அவனது முன்று மனைவியர் கௌசல்யா, கையேயி, சுமத்திரை ஆகியோர் கருவுற்று ராமன், பரதன் மற்றும் லக்ஷ்மண சத்ருக்கனர்களை முறையே பெற்றெடுத்து வளர்த்து வருகையில் உரிய காலம் வந்ததும் மன்னவன் தசரதன் தன் மூத்த ம்கனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான். இது கேட்ட அரண்மனைப் பணிப்பெண்ணான கூனி எனப்படும் மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்து, ஒரு முறை சம்பராசுரன் எனும் அரக்கனுடன் தசரதன் போர் செய்கையில் தசரதன் மயங்கி விழ, அவனது தேரை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்று அவனது உயிரைக் கைகேயி காத்ததனால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஏதேனும் இரு வரங்கள் தர விரும்புவதாகக் கூற, அவற்றைப் பின்னர் தேவைப்படுகையில் பெற்றுக்கொள்வதாக அவள் கூறிய சம்பவத்தை நினைவுபடுத்தினாள்.

இரு வரங்களுள் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்ற வரத்தால் ராமன் 14 ஆண்டுகள் வ்னவாசம் செய்யவும் மந்தரையின் துர்ப்போதனையின் படி கைகேயி மன்னனிடம் வரம் கேட்டாள். மன்னன் எவ்வலவோ மன்றாடிக் கெஞ்சி ராமனைக் காட்டுக்கனுப்பச் சொல்லாதே எனக்கெஞ்சியும் அவள் பிடிவாதமாக இருக்கவே மன்னன் என்னவோ செய்த்கொள், இனி என் முகத்தில் முழிக்காதே என் பிணத்தையும் நீயும உன் மகன் பரதனும் தீண்டக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு மூர்ச்சையாகிவிட்டான். இந்நிலையில் ராமனை வரவழைத்த கைகேயி மன்னனிடம் தான் பெற்ற வரங்கள் பற்றிக் கூறி அவற்றின் படி பரதன் நாடாள ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென அரசர் சொன்னார் என்றாள்.

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய்த்
தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவ மேற்கொண்டு
பூழிவெங்கான நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டின் வாவென்றியம்பினன் அரசன் என்றாள்"

இதனைக் கேட்ட ராமன் மன்னன் சொல்லவில்லையானால் என்ன நீங்கள் சொன்னால் நான் கேட்க மறுப்பேனா? பரதன் என் தம்பியல்லவா? அத்துடன் என்னை விடவும் நாடாள அவனே சிறந்தவன் அவன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமேயல்லவா? என்று பெருந்தன்மையுடன் கூறினான்.

"மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?"

என்று சொல்லிப் பின் சீதாவுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் சென்றுவிட, இதைக் கேள்விப்பட்ட மன்னன் மனமுடைந்து மரணமடைந்த நிலையில் சத்ருக்கனனுடன் தன் தாயின் தந்தையான தாத்தா கேகய மன்னனின் நாட்டுக்குச் சென்றிருந்த பரதன் திரும்பி வந்து தந்தை இறந்ததைக் கேட்டு சொல்லொணாத் துயருற்றுப் பின்னர் நடந்தவற்றைக் கேட்டுத் தன் தாயின் மேல் கோபம் கொண்டு அவளைத் தூற்றிய பின்னர் மந்திரி பிரதானிகளுடன் வனம் சென்று ராமனைத் திரும்ப வருமாறு அழைத்தான். ராமன் தந்தையின் சொல்லைக் காத்தல் தனயனின் க்டமையாதலால் பரதன் நாடாள்வதும் ராமன் வனவாசம் செய்வதுமான தந்தையின் கட்டளைகளை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தவே, பரதன் நாடாண்டான் எனும் அவப்பெயர் தனக்கு உண்டாகாமல் இருக்க வேண்டுமெனில் தான் அயோத்தி நகருக்குள்ளே செல்லாமல் இராமனின் பாதுகையே நாட்டை ஆள வேண்டுமெனவும் 14 ஆண்டுகளில் இராமன் திரும்பாவிடில் தானும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சூளுரைக்கிறான்.

இந்தக் காட்சிகள் சிவாஜி கணேசன் பரதனாகவும், என்.டி. ராமராவ் ராமனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினியாகவும் நடித்து 1958ஆம் ஆண்டு வெளிவந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் மிகவும் அழகுறப் படமாக்கப் பட்டுள்ளன. இராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றைக் கொண்டு நாடாளும் பரதன் குறித்த ஒரு அருமையான பாடல் இன்றைய பாடலாக வருகிறது:

Video:

http://www.thamizhisai.com/video/tamil-cinema/sampoorna-ramayanam/paathugaiye-thunaiyaagum.php

Audio:

பாதுகையே துணையாகும் எந்நாளும்

திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
இயற்றியவர்: தேவொலபள்ளி க்ரிஷ்ன சாஸ்திரி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1958

பாதுகையே பாதுகையே
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே

பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

உனது தாமரைப் பதமே உயிர்த்துணையாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா
பதினான்கு ஆண்டும் உன்தன் பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய அருள்வாயே ராமா

தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
சர்க்குணாதிபா ராமா ஸ்ர்வரக்ஷகா ராமா
தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
தந்தை சொல்லைக் காக்கும் தனயனான ராமா
தவசி போலக் கானிலே வாசம் செய்யும் ராமா
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா

நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக