செவ்வாய், 22 நவம்பர், 2011

நாளை நமதே நாளை நமதே

மனிதரில் நான்கு வகையுண்டு. முதலாவது வகையைச் சேர்ந்தவர் தன்னையே தியாகம் செய்தாகிலும் பிறர் நலம் பேணுபவர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று புகழப்பெற்ற சீதக்காதி முதலிய வள்ளல்கள் இவ்வகையில் அடங்குவர். இரண்டாம் வகை தானும் நன்கு வாழ்ந்து பிறரும் நலமாய் வாழப் பாடுபடுபவர். நம்முடன் அன்றும் இன்றும் என்றும் சமுதாயத்தில் ஒன்று கூடி வாழ்ந்து வரும் பெரும்பான்மையினர் இத்தகைய மனிதர்களாகவே விளங்குகின்றனர். மூன்றாம் வகையினர் பிறரது துன்பம் துடைக்க எவ்வித முயற்சியும் செய்யாது தன்னுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் வாழும் சுயநலவாதிகள். அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதவர். நான்காம் வகையினர் பிறரைக் கெடுத்து அதில் சுயலாபம் தேடுபவர். அடுத்தவர் அழிவிலேயே தன் வாழ்வு இருப்பதாகக் கருதும் பேதைகள். பிறரது துன்பத்திலே இன்பம் காணும் துக்ககரமான மனம் படைத்தவர்கள். ஐந்தாம் வகை தானும் அழிந்து பிறரையும் அழிப்பவர். குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம் என்பது போல் தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் அழிவுப் பாதையில் தள்ளுபவர். அறிவு முற்றிலும் மங்கிப் பைத்தியம் பிடித்த நிலையில் வாழ்வோர். தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் இதில் அடங்குவர். இவர்களால் இவர்களுக்காகிலும் பிறருக்காகிலும் என்றும் எவ்வித நன்மையும் விளைய வாய்ப்பில்லை.

சமுதாயத்தில் பெரும்பான்மையோர் சுயநலமின்றித் தன்னைப் போல் பிறரை எண்ணி தானும் நலமாக வாழ்ந்து பிறரையும் நல்வாழ்வு வாழவைக்க உதவுவோராக இருக்கையில் ஏன் நாட்டில் சமூகநீதி காக்கப்படாமல் ஏழைகள் ஏழைகளாகவே இருந்து பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை நாட்டில் நிலவுகிறது? என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பே. இதன் காரணம் நல்லவர்களான இவர்கள் ஒன்று கூடி ஒத்த கருத்துடன் பணிபுரியாமையால் தீமையைக் கண்டு ஏற்படும் அச்சத்தாலும் பல்வேறு சூழ்நிலைகளால் பிறரிடம் எழும் ஐயத்தாலும் இவர்களுள் ஒரு சாரார் செயலற்றுக் கிடக்கின்றனர். மீதமுள்ளவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க சிலரே அச்சம், ஐயம் ஏதும் இன்றி நன்மை விளையப் பாடுபடுகின்றனர். அத்துடன் முதல் வகையினரது முயற்சிக்கு ஒத்துழைத்து சமுதாய நலம் காக்கத் தொடர்ந்து உழைக்கின்றனர். அதேசமயம் சுயநலம் கொண்ட மூன்றாவது வகையினரும், பிறரைக் கெடுத்துத் தன் லாபத்தைப் பெருக்கும் நான்காம் வகையினரும் பல்வேறு வகைகளில் கூட்டுச் சேர்ந்து ஏனைய மக்களைச் சுரண்டி வாழ்வதில் எளிதில் வெற்றி காண்கின்றனர்.

இத்தகைய நிலைமை கண்டு முதல் இரண்டு வகைகளைச் சேர்ந்த சாமான்ய மக்களில் ஓரு சாரார் மனம் நொந்து சமுதாயத்திற்கு என்றும் கெடுதலே தொடர்ந்து விளையும் போலும். நீதி, நேர்மை, உண்மை, அஹிம்சை எனக் கூறப்படுவன யாவும் பொருளற்ற வெறும் வார்த்தைகள் போலும் என மதி மயங்கிச் சோர்ந்து போய் தீயவர்களின் அடக்குமுறைக்கு என்றும் அடிபணிந்தே வாழத் தலைபடுகின்றனர். இயற்கையின் ரகசியம் ஒன்றை நாம் யாரும் அறிந்துகொள்ள உண்மையில் முயலாது நம் அறிவை சரிவரப் பயன்படுத்தாமல் ஒரு இயந்திரம் போல் வாழ்வதே இத்தகைய மனமயக்கத்தை விளைவிக்கிறது. அந்த ரகசியமாவது, தீய குணம் படைத்த சுயநலவாதிகள் எவ்வளவு ஒற்றுமையுடன் செயல்பட்டுப் பிறரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதில் வெற்றி கண்டபோதிலும் என்றாவது ஒரு நாள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலரும் பல சிறு சிறு குழுமங்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பிணங்கிய நிலையில் பரஸ்பரம் நம்பிக்கையற்ற மனோநிலையில் முழுமனதான ஒத்துழைப்பின்றி செயல்புரியத் தலைபடுகின்றனர். அந்த சமயத்தில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து தங்களது குற்றங்கள் அனைத்தையும் தாங்களாகவே அனைவரும் அறியும் வண்ணம் பறைசாற்றி விடுகின்றனர்.

இதுவே சத்தியத்தின் மஹிமை. தன் ஆயுட்காலம் முழுவதும் உத்தமன் போல் நடித்து மக்களை ஏமாற்றி வந்த ஒரு கபட நாடக சூத்திரதாரியும் வேடம் கலைந்து தடுமாறும் நிலை காண்கிறோம். தன்னைப் பற்றிய உண்மை இவ்வாறு வெளியான பின்னர் அதற்கு மேல் இவர்கள் போன்ற தீயவர்களும் அவனது குற்றங்களில் பங்குபெற்று செயல்பட்ட மற்றவர்களும் வேஷம் கலைந்த பின்னர் மீண்டும் நல்லவர் வேஷம் போட எவ்வளவு முயன்றாலும் ம்டியாது. சாயம் வெளுத்தது வெளுத்தது தான். இவ்வாறு தீயவர்களுக்குள் ஒற்றுமை குன்றி அவர்கள் பலஹீனர்களாக இருக்கும் சமயத்தை முதல் இரண்டு வகையினரான நல்லோர் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி ஒரு பெரும் போராட்டத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்திட வெற்றி நிச்சயம். இது சரித்திரம் கண்ட உண்மை.

பாரதத் தாயின் புதல்வர்கள் நாம் எனும் ஒரே எண்ணத்தைக் கைக்கொண்டு அத்தாயின் செல்வங்களைத் தங்கள் சுயநலம் கருதிச் சூறையிட்டு வரும் சூது வாது நிரம்பிய சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நம் தாய் மண்ணைக் காக்கப் போராடுவோம். எல்லா வளங்களும் நாட்டில் இருந்த போதிலும் அபரிமிதமான தானியங்கள் குவிந்து கிடந்த போதிலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சைக்கும் உரிய வழியின்ற அநாதைகள் போல் தவித்து அல்லலுறும் நம் சகோதர சகோதரிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் யாவும் இன்றும் என்றும் தொடர்ந்து கிடைக்கவும். தீயோரை அழித்து நல்லோர் என்றென்றும் தொடர்ந்து ஆளும் நிலை நாட்டில் ஏற்பட்டு நிலைத்திருக்கவும் ஒன்று பட்டுப் போராடுவோம். வெற்றி பெறுவோம். நாளை என்றும் நமதே!

நாளை நமதே நாளை நமதே

திரைப்படம்: நாளை நமதே
இயற்றியவர்: Muthulingam கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

அன்பு மலர்களே! நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக