செவ்வாய், 22 நவம்பர், 2011

சிந்தித்தால் சிரிப்பு வரும்

நீதியும் குறித்து நாம் ஒவ்வொருவரும் பேசாத நாளில்லை. நாட்டிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் மோசடிகள் குறித்தும் பிற குற்றங்கள் குறித்தும் வாய் கிழியப் பேசும் நாம் நம்மளவில் உண்மையில் நேர்மையாக வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டோமேயானால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. பிறரிடம் தாராள மனப்பான்மையையும் உண்மையையும் நேர்மையையும் எதிர்பாக்கையில் நாம் அதே போன்ற நற்குணங்களுடன் விளங்க எவ்வித முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய கணிணியை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதுகுறித்துப் பெருமிதத்துடன் நமது நண்பர்களிடத்திலும் பிறரிடத்திலும் பேசும் நாம் மேலும் ஒர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அக்கணிணி இயங்கத் தேவையான மென்பொருளை வாங்கத் தயங்குகிறோம். அந்த ஐந்தாயிரம் ரூபாயை மிச்சப்படுத்த நமக்கு அந்தக் கணிணியை விற்பவர் தரும் திருட்டுத் தனமான மென்பொருளை நிறுவுகிறோம். இதன் காரணமாக கணிணியில் பல செயல்பாடுகள் முறையாக இயங்காமல் நாளடைவில் கணிணியில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு அந்தக் கோளாறுகளை சீர்படுத்த கணிணியை நமக்கு விற்றவரது சேவையையே பெரும்பாலும் அணுகுகிறோம். அவர் நமது நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மிடம் மேலும் அதிகத் தொகையைத் திரும்பத் திரும்பப் பெறுகிறார்.ஆரம்பத்திலேயே தரமான ஒரிஜினல் மென்பொருளை கணிணியில் நிறுவினால் கணிணி முறையாக என்றும் இயங்குவதோடு இது போன்ற கோளாறுகளால் வீண் செலவும் தவிர்க்கப் படுகிறது.

உழைப்பின் உயர்வு குறித்து மிகவும் சிறப்பாகப் பேசும் நாம் உழைத்து வாழ்கிறோமா? உழைக்காமல் வரும் இலவசங்களை நாடி ஓடுகிறோமா? இலவசங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கிறோமா? எனும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டோமானால் நம்மில் பலர் நம்மைக் குறித்தே வெட்கத்துடன் எண்ணி தலைகுனிய வேண்டிவரும். உண்மையும் நேர்மையும் உள்ளன்பும் கனிவும் நிரம்பிய உத்தம மனிதர் ஒருவர் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பின் அவரை யாரும் போற்றிப் புகழ்வதில்லை. பாவம், அவன் ஒரு பரதேசி, பிச்சைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் அவரைப்பற்றி இழிவாகப் பேச நம்மில் பலர் என்றும் தயங்குவதில்லை.

நேர்மையாக உழைத்து பொதுமக்களுக்கு உண்மையான சேவைபுரியும் எண்ணத்துடன் ஒருவர் தேர்தலில் பெரும் பொருட்செலவு செய்யாமல் எளிமையாகப் போட்டியிட்டால் அவரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக யார் அதிகக் கூட்டம் சேர்த்துத் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்களோ அவர்களையே தேர்ந்தெடுக்கிறோம். அவரது தகுதிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நமக்கு ஏதேனும் துன்பம் வருகையில் பிறரது உதவியைத் தவறாமல் நாடும் நாம் நம் கண் முன்னே பிறர் துன்பப்படுகையில் முன்வந்து உதவிபுரியத் தயங்குகிறோம். அவ்வாறு வேறு ஒருவருக்கு உதவுவதால் நம் பணிகள் தடைப்பட்டு நம் வாழ்வு பாதிக்கப்படுவதையே பெரிதும் எண்ணிக் கவலை கொள்கிறோம்.

உண்மையில் நாம் பிறரது நன்மையை எண்ணிப் பிறருக்காக ஏதேனும் ஒருவகையில் உழைத்தும் உதவியும் வாழ்வோமாகில் நமக்கு ஏதேனும் துன்பம் நேர்கையில் நாம் யாரையும் அணுகாமலேயே நமக்கு ஓடிவந்து உதவி புரியப் பலர் வருவர். இது இயற்கை நியதி. பிறருக்கு நாம் நன்மை செய்கையில் நமக்குப் பிறரும் நன்மையே செய்வர். பிறர்க்குத் தீங்கிழைப்பின் நமக்குப் பிறரிடமிருந்து பெரும்பாலும் தீமையே விளையும். மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இத்தகைய நல்லறிவே ஆகும்.

நம்மையும் சேர்த்து சமுதாயத்தில் பெரும்பாலோர் இந்த எளிய உண்மையை உணராது போலியாக வாழ்வதைப் பற்றி சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும்

திரைப்படம்: செங்கமலத் தீவு
இயற்றியவர்: திருச்சி தியாகராஜன் Trichy Thyagarajan
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக