புதன், 13 ஜூலை, 2011

குற்றம் புரிந்தவன்

நமது நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தொன்று தொட்டு ஆண்களின் ஆதிக்கத்திலேயே சமுதாயம் நடந்து வந்துள்ளது சரித்திரத்தின் வாயிலாகத் தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெண்கள் தமது குடும்பத்திலுள்ளோரைப் பேணி, அவர்களுக்குத் தேவையான சமையல், துப்புறவு மற்றும் பிற பணிகளைச் செய்ய, ஆண்கள் மட்டுமே வெளியுலகில் சென்று பொருளீட்டுவதும் சமுதாயப் பணிகளைச் செய்வதும் இயல்பாக நடைபெற்று வந்துளதேயாகும். இத்தகைய மனித நேயம் குறைந்து பெண்களுக்கெதிரான அடக்கு முறைகள் மலிந்து விளங்கிய காலத்தில் மனிதகுலத்தில் பெண்ணுரிமையை வலியுறுத்தியவர்களுள் மஹாகவி பாரதியார் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

அதுவரை கதைகளிலும் காவியங்களிலும் வரும் சில பெண்கள் தம் கணவனையன்றி வேறு எவரையும் மனதில் கணமும் நினையாது கணவனே கண்க்ண்ட தெய்வம் எனப் போற்றி வாழ்ந்த கற்புக்கரசிகளாகவும் அப்பெண்களின் கணவன்மார்கள் தம் மனைவியரைத் துச்சமாக எண்ணி வேறு பெண்களையும் விலைமாதர்களையும் தேடிச் சென்று தமது சுகமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த சுயநலவாதிகளாகவும் சித்தரிக்கப் பட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அது மட்டுமன்றி ஒரு பெண்ணை ஒருவருக்கு மணம் முடிக்கையில் அந்தப் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டறியாமலே சந்தையில் மாடுகளை விற்பதைப் போன்ற முறையில் யாருக்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொடுக்கும் இழிசெயலையும் மனித சமூகத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையை மாற்றிடவென்றே மஹாகவி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்று முழங்கினார்.

பழங்காலக் கதைகளாயினும் பெண்ணடிமை ஒழிந்து, தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்ந்துவரும் தற்காலத்தில் எழுதப் பட்ட சில கதைகளாயினும் பொதுவாக, முறையாக இல்லறத்தில் ஈடுபடாமல் மனைவியைப் புறந்தள்ளிவிட்டு விலைமாதர்களைத் தேடியலையும் ஆண்கள் தம் வாழ்வை இழந்த துயரச் சம்பவங்களே காட்டப்பட்டு வருவதும் நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய கதைகள் சமுதாயத்தில் உள்ள பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்து பெரும்பாலானோர் தவறு செய்யத் துணியாது கட்டுப்பாட்டுடன் வாழ வழிகோலுகின்றன. இத்தகைய கதைகளுள் பல திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படம் ரத்தக்கண்ணீர். இப்படத்தில் நடிகவேள் அதாவது நடிகர்களுள் ஒரு மன்னர் எனப் புகழ்பெற்ற எம்.ஆர். ராதா முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். தற்போது இடம்பெறும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் மிகவும் முன்னணியில் விளங்கும் திருமதி ராதிகா அவர்கள் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது தவப்புதல்வி என்பதை அனேகமாக நாம் அனைவரும் அறிவோம். அறியாதவர்கள் அறிந்து கொள்வார்களாக.

குற்றம் புரிந்தவன்

திரைப்படம்: ரத்தக்கண்ணீர்
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை. ஜி. ராமநாதன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன், எம். ஆர். ராதா
ஆண்டு: 1954
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

ஆம், ஆம், வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?

அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது?

முடியாது, உண்மை, உண்மை என் ஆணந்தம், என் மகிழ்ச்சி, என் இன்பம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

ஒழிந்தது, ஒழிந்தது, என் ஆணவன், என் கர்வம், என் அகம்பாவம் அத்தனையும் அற்றுப் போய்விட்டது.

குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது - நல்ல
குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
சுகம் அடைவதேது?

வாஸ்தவம் குணத்தை இழந்தேன் கொண்டவளைத் துறந்தேன், கண்டவள் பின் சென்றேன், கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன். வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏது?

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக