புதன், 13 ஜூலை, 2011

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

செல்வந்தர்களின் வீடுகளின் நுழைவாயிலில் பொதுவாக வாயில் காப்பவர் ஒருவரோ ஒருவருக்கு மேற்பட்டவரோ இருப்பர். இவர்களது கடமை அவர்கள் காவலுக்கு நியமிக்கப் பட்ட வீடுகளிலிருந்து எவரும் எப்பொருளையும் களவாடிச் செல்லாமலும் சமூக விரோதிகள் யாரும் வீட்டுக்குள் நுழைந்து விடாமலும் காப்பதாகும். இத்தகைய காவல் பணியைச் செய்வதற்காகவே இவர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

இதே ரீதியில் நாட்டையும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் நாட்டையும், மாநிலத்தையும் இத்தகைய களவாணிகளிடமிருந்து காப்பதும் சமூக விரோதிகளின் செயல்பாட்டைத் தடுப்பதும் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்படுவதற்காகவே அவர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிகள் தரப்பட்டு அவற்றுக்குரிய ஊதியமும் வழங்கப் படுகிறது.

பல சமயங்களில் வீட்டைக் காவல் காக்கும் காவலாளியே வேறு கள்வர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தாம் காவல் காக்கும் வீட்டையே கொள்ளையடிப்பது, அவ்வீட்டிலுள்ளோரது குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.

இன்று நமது நாட்டை ஆள்வோரே நாட்டின் செல்வங்களைக் கொள்ளையிட்டு, மக்களைப் பட்டினி போட்டுத் தாம் மட்டும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து சுகவாழ்வு வாழ்ந்துவரும் இழிநிலை பரவலாக உருவாகியுள்ளது. இதன் காரணம் நாட்டு மக்கள் நாட்டை ஆள்வோரைத் தேர்ந்தெடுப்பதில் போதிய அக்கரை காட்டாது கண்மூடித்தனமாக இருப்பதுவே ஆகும்.

இத்தகைய இழிநிலையைத் தவிர்க்க முதற்கண் மக்கள் யாவரும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். தினசரி கடமைகளுள் ஒன்றாக செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இடம் பெறும் செய்திகளை அறிந்து கொள்வதை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டை ஆள்வோரின் உண்மையான நிலை தெரியவரும்.நல்லவர் போல் தெரிபவரெல்லாம் நல்லவரல்ல என்பதுவும் புரியும். நாட்டை ஆளும் அமைச்சர்கள் தம் வரையிலும் நல்லவராக இருப்பது மட்டும் போதாது. தம்முடனும் தமது அதிகாரத்தின் கீழும் பணிபுரியும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் தவறுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டு முறைகேடுகளைத் தவிர்ப்பது ஒவ்வொரு அமைச்சரின் முக்கியக் கடமையாகும்.

இக்கடமையைச் செய்யத் திறமில்லாத, மனமில்லாத ஒருவர் அமைச்சராக இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்றே. காவல் காப்பவன் தான் திருடாதிருப்பதை விட, வேறு யாரும் திருடாது பார்த்துக் கொள்வதே காவல் பணியில் அவன் ஈடுபடுத்தப்படுவதன் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறாவிடில் காவலாளி எதற்கு? அவனுக்கு சம்பளம் எதற்கு? தன் கடமையைச் செய்யாதவனுக்கு வெட்டி அதிகாரம் எதற்கு? ஆர்ப்பாட்டம் எதற்கு?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா

திரைப்படம்: குமரிப்பெண்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா
ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

ஆஹாஹஹா ஓஹோஹோஹோ
லாலாலாலா பம்பம்பம்பம்

காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ?
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாக்குக்கு ஆயிரம் மொழி சொந்தமோ?
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

வருகிற உறவுக்கு மனை சொந்தமோ?
மயக்குற முகத்துக்கு எழில் சொந்தமோ?
கொடுக்கிற பணத்துக்கு இடம் சொந்தமோ?
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான் ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக