வெள்ளி, 8 ஜூலை, 2011

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி

பாரத சமுதாயத்தில் பெண்களின் பங்கு மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுவது நாமனைவரும் அறிந்ததே. ஒரு பெண் பருவமடைந்து திருமணத்திற்கு ஏற்ற வயதை அடையும் வரையில் அவள் தனது தாய் தந்தையர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் தன் பெரும்பாலான காலத்தைக் கழித்த பின்னர் மணமானதும் மணமகனின் வீட்டுக்கு மருமகளாகச் செல்கிறாள். தான் பிறந்த வீட்டில் அவளுக்குக் கிடைத்த பாசப்பிணைப்பும் ஆதரவும் அவள் புகுந்த வீட்டிலும் கிடைக்கப்பெற்றாலே அவளது வாழ்வும் அத்துடன் பிறந்த புகுந்த வீடுகளிலுள்ள பிறரது வாழ்வும் வளம் பெறும்.

அத்தகைய நிலையை அடைய உரிய முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வை லட்சியப் பாதையில் அமைத்துக் கொள்வது முதற்கண் அப்பெண்ணின் கடமையாகும். அவ்வாறு வாழ்ந்து அவள் புகுந்த வீட்டிலுள்ள அனைவரின் அன்பையும் பெறுவாளாயின் வாழ்வில் அவள் ஸ்வர்கத்தைக் காண்பது உறுதி. திருமண நாளன்று கூடியிருக்கும் மூத்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது ஆசியை அப்பெண் பெறுவதுடன் தன் உடன் பிறந்தோரின் ஆசியும் தனக்குக் கிடைக்க வேண்டுமென மிகவும் விரும்புவது இயல்பு.

இங்கே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் அண்ணன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்டத்தின் முன்னர் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் முயற்சியில் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஒரு சாமியார் போன்று மாறுவேடத்தில் உலாவும் நிலையில் அம்மாறு வேடம் பூண்ட கோலத்துடனேயே தன் தங்கையின் திருமண மண்டபத்துக்கு வந்து மண்டபத்தின் வாயிலில் நின்று, திருமணம் முடிந்த சமயம் தன் சகோதரியை வாழ்த்திப் பாடுகிறான். தன் தங்கைக்காகத் தன் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் பாசத்தையும் பரிவையும் மடை திறந்த வெள்ளமாய்ப் பொழிகிறான்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/idhaya-veenai/thirunirai-chelvi.php
திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி

திரைப்படம்: இதயவீணை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இன்றுபோல என்றும் வாழ்க!
எங்கள் வீட்டுப் பொன்மகளே வாழைக்
கன்றுபோலத் தலைவன் பக்கம்
நின்றிருக்கும் குலமகளே!

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழிபோலே இருவரும் இங்கு
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள் ஏந்தி
நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட
வாழ்ந்திடு மகளே வளமாக
ஆனந்தததாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

எங்கள் வானத்து வெண்ணிலவாம் - இவள்
இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் குலம்வளர் கண்மணியாம் - இவள்
இன்னொரு குடும்பத்தின் கண்ணானாள்
தாய்வழி வந்த நாணமும் மானமும்
தன்வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்

ஒருவரை ஒருவர் அன்புகொண்டு - வரும்
சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதியென்று - இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குறள்வழி காணும் அறம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக!
தென்னவர் போற்றும் பண்புகள் யாவும்
கண்ணெனப் போற்றி வாழ்ந்திடுக!

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழிபோலே இருவரும் இங்கு
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக