புதன், 20 ஜூலை, 2011

நடந்து வந்த பாதையிலே

ஆதியில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சமூகங்களாக வாழத் துவங்கிய காலம்தொட்டு நாடுகளும் அரசுகளும் உருவாயின. அரசாட்சியில் மனித உரிமை குறித்த பல சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப் பட்டன. இத்தகைய சட்டத்தை இயற்றுவோரின் மனப்பான்மையைப் பொறுத்து அவை சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் மனிதர்களைப் பாதித்து வருகின்றன. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் தமக்கு ஒரு குறிப்பிட்ட சட்டத்தினால் நன்மை விளையுமெனக் கருதுகையில் அதே சட்டத்தினால் தமக்கு ஏதும் நன்மை விளையாது தீமையே விளையுமென வேறொரு பகுதியினர் கருதுவது இயற்கையே. இவ்வேறுபாட்டைக் களைந்து அனைத்து சட்டதிட்டங்களும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஒரு மனதாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.

மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.

நடந்து வந்த பாதையிலே

திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக