புதன், 20 ஜூலை, 2011

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

இன்றைய உலக வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் முதலான பகட்டுகளை அடைவதற்கெனவே மனிதரில் பெரும்பாலோர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்துகின்றனர். அதற்கேற்றாற் போலவே ஆரம்பப் பாடசாலை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமுலிலிருக்கும் பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மாணவர்களை வெறும் பொருளீட்டும் இயந்திரங்களாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் விதமாகவே அமைந்து பொது அறிவிலும் வாழ்வுக்கு இன்றியமையாத பிற கலைகள், சமூக நலன், தனிமனித ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வலியுறுத்தாத நிலையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.

பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.

பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;

காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து

வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்

எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக