செவ்வாய், 19 ஜூலை, 2011

நாளை உலகை ஆள வேண்டும்

1947ஆம் ஆண்டு நம் பாரத நாடு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்ததிலிருந்து 1967ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் மிகவும் அமைதியாகவே நடந்து தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி செய்து வந்தது. இத்தகைய வெற்றி மிதப்பில் மாநிலங்களிலும் மத்தியிலும் ஆளும் காங்கிரசார் சற்றே அலட்சியமாக இருந்த தருணத்தில் 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளான, சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு, ஃபார்வார்டு ப்ளாக், தி.மு.க. முதலிய கட்சிகள் முதன்முதலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நம் நாட்டில் அரசியல் வியாபாரமான தருணம் அதுவே. அதுவரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக குறிப்பிடத்தக்க செலவுகள் ஏதுமின்றி வெறும் சுவற்றில் எழுதிய வாசகங்களைக் கொண்டே தேர்தல் பிரச்சாரம் எவ்வித ஆரவாரமுமின்றி நடந்து வந்தது. 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கென பிரத்யேகமாகப் பெரும் செலவில் பல ஆட்கள் அமர்த்தப்பட்டு சைக்கிள்களில் பலரும் கூட்டம் கூட்டமாகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசியை எதிர்த்தும், சாலையமைத்தல் போன்ற பொதுப் பணிகள் ஏதும் நடைபெறாததையும் கண்டித்துப் பெரும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவோர்க்கு அரசியல் கட்சிகள் ஊதியம் வழங்கின. பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பெரும்பாலும் வேறு பணிகள் ஏதுமின்றி இருந்தவர்களாக அமையவே இத்தகைய அரசியல் பணியே வேலையில்லாத பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊதியம் ஈட்டும் வேலையாக நாளடைவில் அமைந்தது. இவர்களுக்கு ஊதியம் தரவும் கட்சி தொடர்பான விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவும் நாளடைவில் பெரும் தொகை தேவைப்பட்டது. அரசியல் கட்சிகள் இத்தகைய செலவினங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமலும் செலவு செய்யும் தொகைக்கு எவ்விதமான கணக்கும் வைத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படாத நிலையே தொடர்வதாலும் இத்தகைய செலவுகளை எல்லா அரசியல் கட்சிகளும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை கருப்புப் பணத்தைக் கொண்டே செய்கின்றன.

இத்தகைய கருப்புப் பணப்புழக்கத்தினால் ஊழல் அதிகரித்து மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தே பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து பதவிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு மக்களும் தொடர்ந்து இத்தகைய பொய்யர்களின் வாக்குறுதிகளை மெய்யென நம்பி தொடர்ந்து ஆட்சியை அவர்கள் கையில் ஒப்படைத்து வருகின்றனர். சில காலம் முன்னர் வரை அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு வரை இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து புரிந்து வந்த ஊழலகள் அவ்வப்போது வெளிவந்த போதிலும் அவற்றைக் குறித்து செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வழி செய்திகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறாத நிலை இருக்கவே அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஒவ்வொரு கட்சியும் தாம் உத்தமர்கள் எனவும் எதிர்க் கட்சிகள் ஊழல் கட்சிகள் எனவும் பிரச்சாரம் செய்து வேறு வழியின்றி ,மக்கள் அவர்களை மாறி மாறித் தேர்ந்தெடுக்கும் நிலையில் ஊழல்களைத் தொடர்கின்றனர்.

தற்போது நிலைமை மாறி விட்டது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து மக்களுக்கு எதிராக சதி செய்யும் வ்அர்த்தக நிறுவனங்களும் செய்யும் ஊழல்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து அம்பலமாவதுடன் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு வருவதால் தற்போது இந்த ஊழல் அரசியல்வாதிகள் பயந்து நடுங்குகின்றனர். என்னென்னவோ நாடகங்களெல்லாம் அரங்கேற்றுகின்றனர். ஆனால் அத்தனை வேஷங்களும் தொடர்ந்து கலைந்து கொண்டே வருகின்றன.

1986ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஊழல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழல். இந்திய ராணுவத்திற்காக ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து அப்போது ராஜீவ் காந்தியின் தலைமையில் மத்தியில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு பீரங்கிகள் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாட்ரோச்சி மற்றும் இந்தியாவின் ஒரு பெரும் செல்வந்தரும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவருமான இந்துஜா ஆகியோர் பல கோடிகள் கமிஷனாகப் பெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குவட்ரோச்சியின் மேல் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அவர் மேல் இருக்கும் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கோரி ஒரு விண்ணப்பத்தை சென்ற ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் அவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட்டு குற்றவாளி குற்றமற்றவர் எனும் நற்சான்றிதழ் பெற்று அனைவருக்கும் டாடா காட்டிச் செல்லலாம் என இருந்த நிலை மாறி இன்று வருமான வரி ட்ரிபூனல் ஒரு புதிய ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் குவாட்ரோச்சியும் இந்துஜாவும் 40 கோடி ரூபாய்களுக்கு மேல் போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து கமிஷனாகப் பெற்ற விவரத்தை விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதால் குற்றவாளிகள் குற்றத்துக்கு பதில் சொல்லும் நிலைமை உருவாகியுள்ளது.

இத்தகைய மாற்றங்களெல்லாம் இது நாள் வரை உற்சாகமிழந்து நடைபிணங்கள் போல் வாழ்ந்து வரும் நமது நாட்டு மக்களுக்கொரு புத்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் நல்லாட்சி மலருமெனும் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இனி வருங்காலம் இத்தகைய வீணர்கள் கையில் போகாமல் உண்மையாய் உழைப்பவரே நாட்டை ஆளும் சூழ்நிலை வருமெனும் ஆவலில் இன்றைய பாடல் ஒலிக்கிறது.

நாளை உலகை ஆள வேண்டும்

திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக