புதன், 20 ஜூலை, 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

இப்பரந்த உலகில் மனிதன் தன் ஐம்புலன்களால் உணரக்கூடியவை மிகவும் சொற்பமே. பகுத்தறிவால் அறியக் கூடியவையும் மிகவும் சொற்பமே. இத்தகைய சொற்ப உணர்வு சக்தியையும் சொற்ப அறிவையும் கொண்டு அவன் எல்லையே இல்லாத உலகின் தன்மையையும் அவ்வுலகினைப் படைத்து, தீய சக்திகளை அழித்து நல்லன யாவையும் காத்து ரக்ஷிப்பதாகக் கருதும் கடவுளின் தன்மையையும் வரையறுக்க முயல்வது வேடிக்கையே. இத்தகைய அறிவுக் குறைபாட்டுடன் பல தேசங்களில் உள்ள பலரும் தம் சிற்றறிவுக்கேற்ப இறைவனைப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு தத்துவங்களால்மும் வரையறுத்து இறை குறித்த தமது கோட்பாடே பிறரது கோட்பாடுகளை விடச் சிறந்ததெனவும். தான் இறைவன் என்று கருதும் சக்தியே இறைவன் எனவும் பிறரது கருத்தில் விளங்கும் இறைசக்திகளெல்லாம் தீய சக்திகள் எனவும் பிரச்சாரம் செய்வது அறியாமை.

ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.

இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.

அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.

அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி

என புத்தபகவான் கூறுகிறார்.

இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.

இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக