செவ்வாய், 12 ஜூலை, 2011

மன்னவனே அழலாமா

இள வயதில் மனைவியை இழந்த ஆண்கள் சிலர் தமது குழந்தைகளின் நலனுக்காக மற்றொரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொள்வதுண்டு. வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் தம் மனைவியின் நினைவாகவே வாழ்ந்து தமது குழந்தைகளுக்குத் தாமே தாயும் தந்தையுமாக இருந்து அனைத்து விதங்களிலும் அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதும் உண்டு. தன் மனைவி இறந்த பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத ஆண்கள் தம் குழந்தைகளைக் காக்க அவர்களுக்குத் தாயாய் விளங்க வேறொரு பெண் அவசியமாக இருக்குமாயின் குழந்தைகளின் நலனுக்காக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. இத்தகைய முடிவுக்குக் குடும்பத்தில் இருக்கும் பிற உறவினர்களின் வற்புறுத்தலும் காரணமாக அமைவதுண்டு.

இவ்வாறு தம் விருப்பத்துக்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு வேறொரு பெண்ணை மணந்த ஆண்களுள் சிலர் தம் மனைவியின் நினைவு மனதில் என்றும் இருக்கும் நிலையில் புதிதாய் மணந்த பெண்ணை மனைவியாக ஏற்று அப்பெண்ணுடன் மனமொப்பி வாழத் தயங்குவதுண்டு. இத்தகைய தயக்கத்தினால் அந்தப் பெண் மனம் வருந்துவதும் உண்டு. தன் குழந்தைகளுக்குத் தாயாகவும் தனக்கு இரண்டாம் தாரமாகவும் வந்து வாய்த்த அப்பெண்ணிற்கும் வாழ்வில் ஆசாபாசங்கள் உண்டு என்பதை உணர்ந்து கொண்டு அக்கணவன் அவளை உரிய அன்புடன் நடத்தி அவளிடம் இணங்கி வாழ்வது அப்பெண்ணுக்கும் அக்கணவனுக்கும் மட்டுமன்றி அவர்களது குழந்தைகளுக்கும் நல்வாழ்வை அளிக்கும்.

புதிதாய் மணந்த பெண்ணுடன் சகஜமாய் வாழத் தயங்கித் தன் மனைவியின் நினைவால் தொடர்ந்து வாடும் சில ஆண்களுக்கு குடும்பத்திலுள்ள மூத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தக்க அறிவுரை கூறித் திருத்துவதுண்டு. ஆனால் இத்தகைய ஆண் ஒருவனுக்கு இறந்து போன அவனது மனைவியே அவனது மனதுக்குள் வந்து தன்னையே நினைத்து வருந்துவதை நிறுத்திவிட்டு, தனக்குப் பின் அவனுக்கு மனைவியாய் வாழவந்த பெண்ணை முறையாக மதித்து வாழும்படி அறிவுரை கூறுவதாக அமைந்ததொரு அரிய பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

மன்னவனே அழலாமா

ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா?
கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா?
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
என்னுடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக