திங்கள், 11 ஜூலை, 2011

இறைவன் படைத்த உலகை எல்லாம்

மனிதன் உலக வாழ்வில் தொடர்ந்து இன்பம் பெறுகையில் தன்னை மறந்து சக மனிதர்களையும் மறந்து, தன்னை வந்தெய்திய இன்பத்தைத் துய்ப்பதிலேயே ஈடுபடுகிறான். இடையில் ஒரு சிறு துன்பம் வரினும் அதைத் தாங்கும் வலுவின்றி அத்துனபத்தை நீக்கப் பிறர் உதவியையும் இறையருளையும் நாடுகிறான். இது சாமான்யர்களின் நிலை. இதற்கு மாறாக ஞானிகள் இன்பம் வரினும் துன்பம் வரினும் எக்காலத்தும் இறையருளையே வேண்டி இன்பத்தில் மூழ்கித் தன்னை இழக்காமல், துன்பத்தில் வருத்தமுறாமல் திட சித்தத்துடன் எல்லாம் அவன் செயல் எனும் ஏகாக்ர
சித்தத்துடன் தியான நிலையிலேயே வாழ்கின்றனர்.

உடம்பு அழியும் தன்மை வாய்ந்தது. ஆன்மா அழிவில்லாதது. நீயோ நானோ இதற்கு முன்னர் இல்லாதிருந்ததும் இல்லை இவ்வுடம்பு மண்ணோடு மண்ணாகி மறைந்த பின்னர் இல்லாது போவதும் இல்லை. இவ்வுடம்புக்குரிய அடையாளமாக வைக்கப்பட்ட பெயரால் நாம் அறியப்படுவது மாயை. இவ்வுடம்புக்குரியவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு இவ்வுடம்புக்கொரு துன்பம் வருகையிலோ இவ்வுடம்பைச் சேர்ந்து அதன் வடிவாகவே இயங்கும் மனதுக்கொரு துக்கம் வருகையிலோ வருந்தி வாடுவது அறியாமையே. பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்று நிச்சயம உண்டு என்பது இயற்கை நியதி. அதிலிருந்து யாரும் மீள இயலாது.

மனிதன் பிற அனைத்து உயிர்களை விடவும் மேலான அறிவு படைத்தவன். மனிதராகப் பிறந்த நாம் செய்யத் தக்கது இறைவனைச் சரணடைந்து இன்பதுன்பங்களில் உழலாமல் பிறவியில்லாத நிலையடைய முயல்வதே ஆகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

"குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான்." என்று கீதை உரைப்பதை மஹாகவி பாரதியார் விளக்குகிறார்..

இத்தகைய மனப்பக்குவத்தை அடைய இறையருள் அவசியம். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்கள் அரூபமான நிலையில் இறைவனை அடைவது கடினம். இதன் காரணம் வாழ்வில் நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் நம் கவனத்தை திசைதிருப்பி விடுவதேயாகும். இதற்கொரு உபாயமாகவே நம் முன்னோர்கள் ஆலயங்களை ஏற்படுத்தி, அங்கு வருவோர் இறையுணர்வுடன் இயங்கும் சூழ்நிலையை உருவாக்கி உலகுக்கு வழி காட்டியுள்ளனர்.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று ஔவைப் பிராட்டி மொழிந்ததும் இதன் காரணமாகவே ஆகும்.

இறைவன் படைத்த உலகை எல்லாம்

திரைப்படம்: வா ராஜா வா
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக