திங்கள், 7 ஜூன், 2010

நானொரு முட்டாளுங்க

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

என்று வள்ளுவர் வகுத்த கல்வியின் சிறப்பைத் தற்காலத்தில் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கல்வி என்பது முதற்கண் மாணவ மாணவிகளுக்குத் தாய் மொழியையும் தாய் மொழி வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களையும் புகட்ட வேண்டும். அதன் பின்னரே ஆங்கிலமும் பிற மொழிகளும், அவற்றின் வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களும் அமைதல் வேண்டும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு

என பாரதி புகழ்ந்த தமிழ்நாட்டிலே இன்று பள்ளி இறுதிப் படிப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்களும், பல்வேறு துறைகளிலே பட்டங்கள் வாங்கிக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களும் பெரும்பாலும் தமிழறிவு பெறாதவர்களாகவே இருத்தல் கண்டு மிகவும் வருத்தம் உண்டாகின்றது.

அது மட்டுமின்றி நமது நாடு உலகமெங்கும் போற்றி வணங்கத்தக்கதாக விளங்குவதற்குக் காரணமான தொன்மையான கலாச்சாரமும், திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் இறக்குமதியாகி வருகின்ற மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களால் சீரழிவது நமது நாட்டுக்கே பெரும் கேடாக விளையக்கூடும்.

நானொரு முட்டாளுங்க

திரைப்படம்: சகோதரி:
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1959


நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க

ஏற்கெனவே சொன்னவங்க ஏமாளியானாங்க
எல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நானொரு முட்டாளுங்க

கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
ஏ...ஏஏஏ ஏ ஏ ஏ கைதே டேய்
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நானொரு முட்டாளுங்க

கால் பார்த்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்கா எட்டி எட்டி ஒதைக்குது

நானொரு முட்டாளுங்க

நாணமுன்னும் வெக்கமுன்னும் நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டமொண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்கத் தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் இன்னாங்க

நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க

வியாழன், 27 மே, 2010

அன்றொரு நாள் இதே நிலவில்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தேறுவதெப்போ நம்ம கவலே

என்று பட்டுக் கோட்டையார் பாடிய பாடலுக்கொப்ப நம் நாட்டின் பல இடங்களில் பாமர மக்களை ஏமாற்றி அவர்களது செல்வங்களைக் கொள்ளையிடுவதும் மேலும் பல வகைகளில் அவர்களை அடக்கியாண்டு தங்களது சுயநல நோக்கத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொள்வதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டம் மலிந்திருக்கிறது. தீர ஆராய்ந்து பார்க்கையில் நாடே அத்தகைய கொள்ளையர் வசம் இருப்பது புலப்படும்.

அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், நாங்கள் சத்திய சந்தர்கள் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் இவர்களும் அதே கொள்ளையை அவர்கள் செய்ததிலும் பன்மடங்கு அதிகமாகவே நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் நாமெல்லோரும் தொடர்ந்து ஏமாறப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யும் தருணம் வந்து விட்டது. நாமும் உயிர் பிழைத்து நமது சந்ததியினரையும் இத்தகைய எத்தர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற நமக்கு எள்ளளவேனும் சிந்தனை உள்ளதா என்பதே கேள்கிக்குறியாக உள்ளது.

விதிவசத்தால் தன் காதலியை விட்டுப் பிரிந்த கதாநாயகன், அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி அவர்களது கண்களைக் குருடாக்கி, பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சமூக விரோதிகளின் செயலால் கண் பார்வையை இழந்த வேறொரு பெண்ணைக் காப்பாற்ற முனைகையில் அவனும் அந்த சமூகவிரோதிகளின் வலையில் விழுந்து விடுகிறான். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு நாள் அவ்விருவரும் தனியாக ஓய்வெடுக்கும் சமயம் அவள் தன் மனதில் அழமாய்ப் பதிந்திருந்த ஒரு இனிய பாடலைப் பாடுகிறாள்.

அப்பாடலைக் கேட்கும் கதாநாயகன் அது தனது காதலி தனக்காகப் பாடிய பாடலாக இருக்கக் கண்டு மிகவும் அதிசயித்து அப்பாடலுக்கு தனது ஆர்மோனியப் பெட்டியில் பின்னணி இசைக்கிறான். பின்னர் தன் காதலி இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியையும், தன்னுடன் பிச்சையெடுக்கும் பெண் தன் காதலியின் சகோதரி எனவும் அறிந்து கொள்கிறா. அதன் பின்னர் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கும் சமூக விரோதிகளை தந்திரமாக ஏமாற்றி தப்பிப்பதுடன் அவர்களை சட்ட்த்தின் பிடியிலும் சிக்க வைக்கின்றனர்.

நாம் எப்பொழுது நம்மையெல்லாம் ஏய்த்துப்பிழைப்பவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறோம்?

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

மனிதர்கள் இளமைக் காலத்தில் எப்பொழுதும் இவ்வுலகில் தாம் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றியே பெரும்பாலும் எண்ணி ஒரு மயக்க நிலையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பருவமெய்திய பின்னர் ஆண்கள் பெண்களிடம் தாம் அடையக் கூடிய இன்பங்களையும் பெண்கள் ஆண்களிடம் பெறக்கூடிய இன்பங்களையுமே அதிகம் எண்ணுகின்றனர். தம் தாய் தந்தையரைப் பற்றியும் வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் உலகில் சந்திக்கின்ற துன்பங்களைப் பற்றியும் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் பொதுவில் பெற்றோர்கள் அடையும் துன்பங்கள் மேலும் பெருகி அவர்கள் அல்லலுறும் நிலை ஏற்படுவதை நாம் பல சமயங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.

குறிப்பாக இளைஞர்களுள் சிலர் தம் மனைவியரிடம் கொண்ட மயக்கத்தாலும் வேறு சிலர் பிற பெண்களிடம் கொண்ட மோகத்தினாலும் மதிகெட்டுப் பெற்றோரை அலட்சியம் செய்து தமது இன்பம் ஒன்றையே பெரிதென எண்ணி வாழ்வதும் உலகில் நடைமுறையாக உள்ளது. இவ்வாறு பெண்ணாசையால் மனம் தடுமாறிய நிலையிலுள்ளோரில் ஒரு சாரார் தம் அறிவை முற்றிலும் இழக்குமுன்னரே தம் சுயநினைவைப் பெற்று தமது பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய க்டமையை உணர்ந்து செயல்படுகின்றனர். வேறு சிலர் அவ்வாறன்றி தொடர்ந்து அலட்சிய மனோபாவத்துடனேயே வாழ்ந்து அதன் காரணமாகப் பெற்றோரை இழக்கும் நிலையை அடைந்து வருந்துவதும் உண்டு.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்குப் பலவிதமான கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் இன்னும் பிற வகையிலும் பெற்றோரைக் காக்கும் கடமையை அவர்கள் உணரும் விதமாகக் கல்வி போதிக்கப் படுகிறது. அத்தகைய கல்வியைப் பயின்ற போதும் சிலர் அதனை உள்ளத்தில் கொள்ளாமல் கடமை மறந்து காலனிடம் பெற்றோரைப் பறிகொடுத்த பின் வருந்துவதும் உண்டு.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

செவ்வாய், 25 மே, 2010

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று தாயின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடலைத் தினம் ஒரு பாடலில் தருமாறு வேண்டினார். எனது தற்போதைய பணிச் சுமையாலும் தினமும் வெயில் படுத்தும் பாடு மிகவும் அதிகமானதாலும் தினம் ஒரு பாடல் தினமும் தர இயலுவதில்லை. கூடிய விரைவில் தினமும் வழங்குவேன். தாயின் பெருமையை எண்ணிப்பார்க்க அன்னையர் தினம் ஒன்று போதாது. தாயின் நினைவு சதா சர்வ காலமும் தொடர்ந்து நம் உயிரில் ஒன்றி விளங்குவது அவசியம். இல்லாவிடில் உலகில் நாம் அடையும் துன்பங்களிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

உலகில் அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட முதல் தெய்வம் தாய். தாயின் அணைப்பில் வளர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் என்றும் நாம் படும் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆறுதல் பெறவும் நாடுவது பெரும்பாலும் தாயையே ஆகும். ஏதோ காரணத்தால் வலி உண்டாகையில் நம்மையறியாமல் நம் வாய் உதிர்க்கும் சொல் பெரும்பாலும் "அம்மா" என்பதேயாகும். சிலர் "அப்பா" என்றோ "ஆ, ஐயய்யோ" என்றோ சொல்வது சாத்தியமானாலும் அம்மா எனும் சொல்லே அனேகமாக அருமருந்தாக விளங்குகின்றது. நம் ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலும் பிற யாரைக் காட்டிலும் அதிகம் பெருமையடைபவள் தாயாவாள்.

இதனாலேயே திருவள்ளுவர்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தாய் இவ்வுலகை விட்டு மறைந்து பூத உடலை விட்டுப் புகழுடம்பு எய்துகையில் ஒவ்வொருவரும் படும் துயரத்துக்கு அளவே இல்லை. அநாதை எனும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் அத்தாய் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் நாளன்று தான் புரியும். அதன் பின்னர் அம்மா எனும் சொல் வாயில் தன்னையறியாமல் பல தருணங்களில் வெளிவருகையில் அந்த அம்மா என்பவள் இவ்வுலகில் தற்போது இல்லையெனும் உண்மையும் மனதில் தைத்து அவள் நினைவில் வாடும் மனம்.

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

திரைப்படம்: தாயின் மடியில்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

மண்ணில் இந்தக் காதலின்றி

நமஸ்தே வாயோ: த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி;
த்வமேவ பிரத்யக்ஷம் வதிஷ்யாமி

என்று காற்றுத்தேவனைத் துதி செய்கிறார் மஹாகவி பாரதியார். நாம் புலன்களால் உணரக்கூடிய கடவுள் காற்றேயாகும். காற்றிலுள்ள ஆக்சிஜன் என அறியப்படும் பிராணவாயு இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பிராணவாயு நாம் உண்ணும் உணவை உடலெங்கிலுமுள்ள பல கோடி செல்களில் எரியவைத்து சக்தியை உண்டாக்கி நம்மை இயங்க வைக்கிறது. காற்று இன்றி மழையில்லை, நீரில்லை, நெருப்பில்லை. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் ஒன்றாய் இணைவதாலேயே நீர் உண்டாகின்றது. நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது பிராணவாயுவாகவும், ஹைட்ரஜனாகவும் பிரிகிறது. இரண்டையும் சேர்த்து எரித்தால் மீண்டும் நீர் உண்டாகின்றது.

உலகைச் சுற்றி ஒரு போர்வையாக விளங்கும் ஓசோன் எனும் அடர் பிராணவாயு சூரியனின் புற ஊதாக் கதிர்களினின்றும் அளவிடற்கரிய வெப்பத் தாக்குதலினின்றும் பூமியைக் காக்கிறது. வீடுகள், உணவு விடுதிகள், ஆலைகள் முதலிய இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்து அவற்றால் விளையும் சேதத்தைத் தடுக்க பிராணவாயு உதவுகிறது. இதனாலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீருடன் காற்றைக் கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.

தவ முனிவர்கள் அளவிடற்கரிய ஆற்றலைப் பெற்று விளங்கியதன் காரணம் அவர்கள் தவத்துடன் பிராணாயாமம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் கட்டுப்படுத்தி அதிகப்படியான பிராணவாயுவை சுவாசித்து வாழ்ந்ததே ஆகும். பிராணாயாமம் செய்யத் தெரியாதவர்களும் பெரும்பாலும் சுவாசிக்கையில் ஆழ்ந்து சுவாசித்துப் பழகினால் உடலிலும் உள்ளத்திலும் சக்தி பெருகி நோயற்ற வாழ்வு வாழ ஏதுவாகும்.

பாடகர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அவர்கள் பாடுகையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளைப் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய பாடகர்களுள் மூச்சினை அதிக நேரம் அடக்கிப் பாடி அதில் சாதனை புரிந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். அவர் பாடிய இப்பாடலை வேறு யாராலும் அதே லயத்துடன் பாட இயலாதென்பது பிரசித்தம்.

மண்ணில் இந்தக் காதலின்றி

திரைப்படம்: கேளடி கண்மணி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1990

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி?
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

திங்கள், 24 மே, 2010

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

ஆண்டவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த செல்வங்களையும் வாழ்வின் பிற இன்பங்களையும் முறையாக அனுபவிக்க ஏற்றவாறு நம் நமது மனப்பான்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி நம்மிடம் இருப்பதை விட மற்றவரிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, பொறாமையினால் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் இன்பங்களை விட்டு, செயற்கையானதொரு துன்பப் பாதையிலே நம்மை நாமே இட்டுச் சென்று துயருறுவதைப் போல் மடமை வேறில்லை. இருப்பினும் மனிதர்களுள் பலர் இத்தகைய குணக்கேடர்களாக இருப்பது கண்கூடு. பிறரது
துன்பத்திலே இன்பம் காணும் இத்தகையோரை ஆங்கில மொழியில் sadists என்று குறிப்பிடுவது வழக்கம்.

நமது கதாநாயகன் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழப் பொறாத பொறாமை குணமுள்ள செல்வந்தனான ஒருவன் தன் செல்வத்தின் பலம் கொண்டு இவர்களது காதலை நிறைவேறாமல் செய்து, அப்பெண்ணை அவளது விருப்பத்துக்கு மாறாகத் தானே மணந்து கொள்ளும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் பின் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடும் நாளில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நமது கதாநாயகனையும் வரவழைக்கிறான். அத்துடன் நில்லாமல் கதாநாயகனை விழாவில் பாடவும் சொல்கிறான்.

தன் காதலியை மனைவியாக அடைய முடியாத வருத்தத்துடன் அவள் தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்கு மாலையிட்டு அதை விடவும் அதிகத் துயரில் ஆழ்ந்ததை எண்ணி, தன் உள்ளக் குமுறலைப் பாடலாக வெளிப்படுத்துகிறான்.

இப்பாடலைக் கேட்டுக்கொண்டே கதாநாயகி யாரும் எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் பட்டாசுகளிடையே சென்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டு அதே நிலையில் விருந்து நடக்கும் மேல்மாடியிலிருந்து கீழே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பைத்தியம் பிடித்துப் பல காலம் துன்புறுகிறான்.

இத்தகையதொரு வித்தியாசமான காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படமான எங்கிருந்தோ வந்தாள் எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1970

ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

மனிதர்கள் வாழ்க்கை நடத்த இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதியும் இடம் பெறுவது மிகவும் அவசியம். ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லப் பேருந்துகளும் ரயில் வண்டிகளும் உதவுவது போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று வர ஆட்டோரிக்ஷாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஆட்டோரிக்ஷாக்களில் செல்வதற்கான கட்டணம் தற்போது மிக அதிகமாக உள்ளது. இக்கட்டண உயர்வுக்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்காரர்களையே பொறுப்பாளியாக்குகின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விலைவாசியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியும் உயர்கையில் ஆட்டோ கட்டணமும் உயர்வது இயற்கையே என்பதையும், ஆட்டோக்காரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம் உண்டு அக்குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.

சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா

ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்