திங்கள், 4 ஜனவரி, 2016

பேசும் யாழே பெண் மானே

தினம் ஒரு பாடல், ஆகஸ்டு 8, 2014

குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்று குழல், யாழ் ஆகிய இன்னிசைக் கருவிகளின் இசை தன் குழந்தையின் மழலைக்கீடாகது என்று ஒரு படி குறைத்துச் சொன்னார் வள்ளுவர்.

மலரும் வான் நிலவும் சிந்தும் 
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும்
ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

என்று குழல், யாழ் ஆகியவற்றின் இசை இறைவனின் குரலின் பிம்பங்களே என உயர்த்திச் சொன்னான் கவி கண்ணதாசன்.

கலைஞர் கருணாநிதி யாழை ஒரு பெண்ணாக வர்ணித்து அவளது காதலன் அகமகிழ்ந்து அவளிடம் பாடுவதாக அமைத்து சிதம்பரம் ஜெயராமன் அவர்களது இசையில் ஏ.எம். ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடும் இப்ப்பாடல்எளிமையாக இருப்பினும் இனிமையாகவே உள்ளது. காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்தும் இப்பாடல்எம்.ஜி.ஆர். அவர்களும் அவரகளது துணைவியார் வி.என்.. ஜானகியும் இணைந்து பாடுவதாக 1953ஆம் ஆண்டு வெளிவந்த "நாம்" எனும் திரைப் படத்தில் இடம் பெறுகிறது.

யாழ் எப்படியிருக்கும்? அழகிய ஒரு மரச்சட்டம், அதில் சில கம்பிகள் மேலிருந்து கீழாக வரிசையில் இழுத்துக் கட்டியிருக்கும். இசைப்பவர் யாழின் ஒரு சட்டத்தை இடக்கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு சட்டத்தைத் தன் மார்பில் அணைத்து, வலக்கையால் கம்பிகளை இசைக்குத் தக்கபடி மீட்டுவர். "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" எனும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். யாழ் மீட்டிப் பாடுவதாக அமைந்துள்ளது. 

பெண்ணை அணைக்கும் ஒரு காதலனுக்கு அவள் யாழைப் போல இனிய குரலையுடைய இசைக்கருவியாகத் தோன்றுவதில் வியப்பில்லை.! 

யாழிசை போல என் தமிழிசையைக் கேட்டு ரசிக்கும் தமிழ் நண்பர்கள் அனைவரது வாழ்வும் இனிமையானதாக அமைவதாக! இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அவரவர் இதயம் கவர்ந்த காதலர் அமைவதாக! இல்லறம் சிறக்க இன்பவாழ்வு வாழ்க என இளைஞர்கள் யாவரையும் என் உளமாற ஆசீர்வதிக்கிறேன்!


திரைப்படம்: நாம்
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: C.S. ஜெயராமன்
பாடியோர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
ஆண்டு: 1953

ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே 
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
வானே தன்னை மறந்து 
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?

எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 
எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 

இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 

பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

யாழே நான் என்றால் நாதம் 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே

காதல் வாழ்வே கனிரசமே
காதல் வாழ்வே கனிரசமே
மாதர் மறவர் உல்லாசமே 
காதல் வாழ்வே கனிரசமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக