திங்கள், 4 ஜனவரி, 2016

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

தினம் ஒரு பாடல் - ஆகஸ்ட் 12, 2014
ஒரு ஆசிரியன் அல்லது ஆசிரியை தன் மாணாக்கர்களுக்கு வெறும் பள்ளிப் பாடத்தை மட்டும் போதித்தால் அது அவர்களது வாழ்க்கையை வளமாக்கப் போதாது. உடன் நல்லொழுக்கத்தையும், மனோதைரியத்தையும் போதிக்க வேண்டியது மிகவும் அவசியம். எவ்வளவு கல்வி பயின்று மிகவும் திறமைசாலிகளாக மாணவர்கள் வளர்ந்த போதிலும் தீமைகளை எதிர்த்துப் போராடும் துணிவு இல்லாவிடில் அவர்களது திறமை அனைத்தும் விழலுக்கிரைத்த நீரே போலாகும். தைரியம் பல வகைப்படும். உடல் வலிமையினால் வளரும் தைரியம் பல வீர விளையாட்டுக்கள், இராணுவம், மலையேறுதல், தீய சக்திகளை எதிர்த்து நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்தல் போன்ற செயல்களில் திறமை பெறப் பெரிதும் உதவியாக இருக்கும். 

மனோ பலத்தால் வளரும் தைரியம் எந்த ஒரு இடர் வந்த போதும், நோயினால் தாக்குண்ட போதும் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்ளத் தகுந்த துணிச்சலைத் தரும். நேர்மையினால் வளரும் தைரியம் பிறர் துன்பம் களைய நற்காரியங்களில் ஈடுபட்டு அநீதி இழைப்போரைத் தட்டிக்கேட்கும் பேராற்றலைத் தரும். அறிவினால் வரும் தைரியம் வியாபாரம், நிர்வாகம் உட்படப் பல துறைகளில் திறமை காட்டி வாழ்வில் மேன்மையடையவும், பொருளாதார ரீதியிலும் சமயோசித ரீதியிலும் பிறருக்குதவி செய்வதற்கும் பயன்படும்.

எத்துணை உடல் வலிமை இருப்பினும் மனோ தைரியமும் அறிவுடன் நேர்மையும் இல்லாவிடில் செய்யும் எந்த செயலும் முழுமை பெறாது, நன்மை பயக்காது. எனவே சிறு வயது முதலே ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிக் கல்வியுடன் சேர்த்து தைரியத்தையும், மனோ பலத்தையும், அறிவையும் வளர்க்கும் வாழ்க்கைக் கல்வியையும் அளிப்பதோடு போதிய உடற்பயிற்சி தந்து உடல் வலிமை பெறவும் உதவ வேண்டும். சில ஆண்டுகள் முன்பு (சுமார் 1980) வரை நம் நாட்டில் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்குப் போதிய இடம் இருந்தது. அத்துடன் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சமூக சேவை செய்யும் நோக்கத்துடன் பல தனவந்தர்களால் நடத்தப்பட்டன. 

அத்தகைய தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கம் பொருளுதவி செய்ததுடன் ஆசிரியர்களின் ஊதியத்தையும் வழங்கி வந்தது. ஆசிரியர்கள் திறமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பதைக் கல்வி நிறுவனங்களும் அரசும் உறுதி செய்து வந்தன. 

அதன் பின்னர் அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாமல் கல்வி தனியாருக்கு விற்கப்பட்டு வியாபார ரீதியில் அமையப் பெற்றதனால் முறையான கல்வி வழங்குவதற்கு மாறாக மாணவர்களின் பெற்றோர் தம் வருவாயில் பெரும் பகுதியை அவர்களது கல்விக்கெனச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அது மட்டுமின்றிப் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லாத நிலை ஏற்பட்டது. ஒருசிறு வீட்டிலும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி நடத்த அனுமதி வழங்கப் பட்டது. இதனால் பல விபத்துகள் நேர்ந்து எண்ணிறந்த குழந்தைகள் மாண்டு போன பின்னரும் கல்வி கவனிக்கப்படாமலே இருக்கிறது. இந்நிலை மாறும் வரை ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாது எனும் நிலையிலேயே கல்வி இருக்கும். தீமைகள் நாட்டில் மிகும். 

நல்லோர் துயர்க்குள்ளாவர். இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டும் ஏன் என்று கேட்க யாருக்கும் துணிவில்லாத துர் நிலையே தொடரும்.

இன்றைய பாடலில் ஒரு ஆசிரியை தன் குழந்தைப் பருவ மாணவனுக்கு தைரியமூட்ட ஒரு இனிமையான பாடலைப் பாடி அறிவு புகட்டுகிறாள். அக்குழந்தைச் சிறுவனும் ஆசிரியையின் பாடலை நன்கு மனதில் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க பதிலை புத்திக் கூர்மையுடன் சொல்கிறான்.



திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்
ஆண்டு: 1959

ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் 

ஆஆஆ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா

பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்றப் புகழ் பெறுவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்

கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக