வியாழன், 21 ஜூலை, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இவ்வுலக வாழ்வு அநித்தியம் என்பது அனைவருக்கும் பொதுவான விதி. இதில் நல்லவ்ர்க்கொரு முடிவு தீயவர்க்கு வேறு என்பதில்லை. உடலுடன் உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் மண்ணுக்கிரையாவது உறுதி. நல்லவர்க்கும் தீயவர்க்கும் கிடைக்கும் முக்கிய பலனாவது நல்லவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பின்னரும் பிறரால் அன்புடன் நினைத்துப் போற்றப்படுவர், தீயவர் தூற்றப்படுவர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவும் உலகைப் பற்றிய பொது அறிவும் பெறாதவராக விளங்கியதால் அநேகர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டனர். இதனால் உலகில் உள்ள நாடுகள் பலவற்றில் மக்களை அடிமைகளாக்கி ஆள்வோர் தம் சுயநலத்தையே பேணும் வகையில் ஏற்பட்ட முடியாட்சியும் வேறுவிதமான அடக்குமுறை ஆட்சியும் நிலவி இன்றளவும் தொடர்கிறது.

இந்நிலையில் இதுபோன்ற அடக்குமுறை என்றும் தொடர்ந்து நீடிக்க இயலாதெனும் உண்மையை எகிப்து நாட்டு மக்கள் உலகனைத்தும் அறியும் விதமாக நடத்திய அமைதிப் புரட்சியின் மூலம் உறுதியுடன் நிலை நாட்டியுள்ளனர். இக்கலகத்தின் ஆரம்ப நாட்களில் காவல்துறையினரின் அடக்குமுறைத் தாக்குதலில் பலர் தம் இன்னுயிரை இழந்த போதிலும் எஞ்சிய மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து எங்கும் ஓடிவிடாமல் ஓரே இடத்தில் லட்சக்கணக்கில் ஒன்று கூடி எவ்வித வன்முறையிலும் ஈடுபடாது மிகவும் கட்டுப்பாட்டுடன் கொடுங்கோலன் முபாரக்கிற்கெதிராகக் குரல் கொடுத்தனர்.

உலகனைத்தும் தொலைக்காட்சிகள் வழியாகவும் இணையதளங்கள் வழியாகவும் தொடர்ந்து இப்புரட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது சென்றடைந்ததால் உலகில் பிற நாடுகள் யாவும் ஒரு மனதாக எகிப்து நாட்டு மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்த நிலையில் எகிப்து நாட்டின் காவல் துறையினர் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்ததால் நாட்டில் உள்ள தீயவர்கள் பலரும் பொதுமக்களின் சொத்துக்களையும் பிற பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடவே நாட்டின் இராணுவம் செயலில் இறங்கியது. இராணுவம் புரட்சியாளர்களைத் தாக்காமல் அவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கி அவர்களை இடையில் தாக்கும் செயலில் ஈடுபட்ட முபாரக் ஆதரவுக் கும்பலின் அடாவடிச் செயல்களைக் கட்டுப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.

அன்று மஹாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. அந்த யுத்தத்தில் ஒரு அரச குடும்பத்தினரும் நாட்டு மக்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றது மட்டுமல்லாது இவர்களுடன் நட்பாக இருந்த பல நேச நாடுகளின் படைகளும் கலந்து கொண்டு பேரழிவிற்கு வித்திட்டன. இறுதியில் தருமம் வென்றதாகக் கூறப்பட்டாலும் அங்கே மகிழ்ச்சி நிலவவில்லை.

இன்று எகிப்து மக்கள் புரட்சியும் 18 நாட்கள் நடந்தது. கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சை வழியில் போராடிய மக்கள் இறுதியில் இராணுவத்தின் உதவியுடன் உறுதியான வெற்றிபெற்று கொடுங்கோலன் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க வ்ழிவகுக்கவே, நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய சோகங்கள் யாவும் மறைந்து முதல் முறையாக மகிழ்ச்சி நிலவுகிறது.

எகிப்து நாட்டில் நடந்த புரட்சியின் வெற்றியால் உற்சாகம்டைந்த பல அரேபிய நாடுகளின் மக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முடியாட்சி ஒழிந்து தங்களது நாடுகளிலும் ஜனநாயகம் மலர வேண்டுமென்று குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

நம் நாட்டில் பெயரளவில் ஜனநாயக ஆட்சி நடந்தாலும் இங்கே நீதி நிலைபெற வழியில்லாமல் ஆட்சி அமைப்புகளும் சட்டதிட்டங்களும் மிகவும் பாரபட்சமாக இருப்பதால் மக்களுக்கு நீதி எனும் பெயரில் வெறும் வாக்குறுதிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமையும் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலை விரைவில் மாறும். எகிப்து நாட்டின் இளைஞர் கூட்டம் இன்று செயல்படுத்திய அமைதிப் புரட்சியினை நம் நாட்டு இளைய தலைமுறையினர் நாளை நிச்சயமாக செயல்படுத்துவர். அவர்களை வழி நடத்திச் செல்ல ஏற்ற தலைவர்களும் இப்புரட்சியில் பங்கு கொண்டு தீயவர்களை நீதியின் முன் நிறுத்தி நன்மைகளை மக்கள் அடைய வழிவகுக்க நிச்சயம் வருவார்கள்.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹா

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆஹஹா ஆஹஹா ஓஹோஹோ ஓஹோஹோ
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக