செவ்வாய், 30 நவம்பர், 2010

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

எல்லா இயற்கை வளங்களும் நிரம்பப் பெற்றது நம் பாரத நாடு. வடக்கே இமய மலையும் மற்ற மூன்று திசைகளிலும் முப்பெரும் கடல்களும் சூழ்ந்து விளங்கும் ஒரு தீபகற்பம் இந்தியா. நமது நாட்டின் இயற்கை வளங்களில் நாடெங்கும் நீண்டு பரவியிருக்கும் மலைப்பகுதிகளும், அவற்றுடன் இணைந்து பரவியிருக்கும் காடுகளும், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான வற்றாத பல ஜீவ நதிகளுமாகும். இத்தகைய இயற்கை வளங்களின் சிறப்பாலேயே விவசாயத்தில் நமது இந்திய தேசம் முன்னிலை வகிக்கிறது. நம் அனைவரது வாழ்வின் ஜீவாதாரமான உணவுப்பொருட்களை விவசாயத்தின் மூலம் பெறப் பெரிதும் உதவும் நம் நாட்டின் இயற்கை வளங்களை மத்திய மாநில அரசுகளும் மக்களும் இணைந்து செயல்பட்டுப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் அவ்வாறு இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறோமா எனக் கேட்டால் கிடைக்கும் பதில் இல்லை என்பதேயாகும்.

மலைப்பகுதியிலுள்ள காடுகளையும் மரங்களையும் அழித்து தேயிலை பயிரிடுவதும், மரங்களை வெட்டியெடுத்துச் சென்று பல விதமான கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதும், இவற்றுள் பல மலைப்பகுதிகளை அவற்றிலிருக்கும் பாறைகளைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த வெடிவைத்துத் ததகர்த்து அழிப்பதும் விரைவில் காடுகளும் மலைகளும் அழிந்து நம் ஜீவாதாரமே குலைந்து போக வழிவகுக்கும் என்பதை நாம் உணராமல் செயல்படுகிறோம். இத்தகைய அபாயகரமான போக்கினை விடுத்து இயற்கை வளங்களைக் காக்கும் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புவது நல்லது.

மலைச் சரிவுகள் வலுவிழப்பதால் மலைப் பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் விபத்துகள் நேர்ந்து உயிர்ச் சேதம் விளையும் ஆபத்தும் உள்ளது. கோடை காலங்களில் நம்மில் பலர் இத்தகைய மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்துடன் மலைகளின் மேல் உள்ள ஊர்கள் பலவற்றில் நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்வு நிலை சிறக்க வேண்டுமெனில் மலைகளும் மலைகளைச் சேர்ந்த வனப்பகுதிகளும் பாதுகாக்கப் பட வேண்டும்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

திரைப்படம்: முள்ளும் மலரும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
_________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக