சிறிது காலத்துக்கு முன்னர் வரை நம் நாட்டில் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசிகளாகவே வாழ்ந்தனர். குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் கடமை அவர்களது கணவன்மார்களையே சேர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் ஒருவனது வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்து, தங்களது குழந்தைகளையும் ஆளாக்க முடிந்த நிலை நிலவியதேயாகும். பின்னர் உருவான அரசியல் சமுதாய சூழ்நிலைகளினால் விலைவாசி பரமபதப் பாம்பு போல் ஏறிய காரணத்தாலும், ஆடம்பரமாக வாழ வேண்டுமெனும் ஆசையினாலும் ஆண், பெண் இரு சாராரும் பணிக்குச் செல்வதும் திருமணமான பின்னரும் கணவன், மனைவி இருவரும் அலுவல் செய்து குடும்ப நிர்வாகத்துக்கான பொருளீட்டுவதும் வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இக்காலத்திலும் பல பெண்கள் திருமணம் முடிந்த பின்னர் இல்லத்தரசிகளாக வாழ்க்கை நடத்துவதையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர்.
இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக