புதன், 9 டிசம்பர், 2009

கண்ணே கலைமானே கன்னி மயிலென

நமது நாடு வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை. ஒரு சாரார் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிற மக்களைச் சுரண்டிப் பண முதலைகளாக மிக ஆடம்பரமாக வாழ்கையில் மற்றொரு சாரார் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு முதலான பாதகங்கள் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணமாகவே தைரியமாக இத்தகையோரால் அனுதினமும் நடைபெறுவது சகஜமாகிவிட்டது.

பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.

இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?

விடை சொல்கிறது மூன்றாம் பிறை.


கண்ணே கலைமானே கன்னி மயிலென


திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக