சனி, 12 டிசம்பர், 2009

ஷெண்பகமே ஷெண்பகமே

பசுவின் பாலைக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருமே தினந்தோறும் அருந்துகிறோம், அது தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவாக விளங்குகிறது. பாலாக அருந்துவதுடன் தயிர், மோர், வெண்ணை, நெய், பாலாடைக் கட்டி (cheese), பனீர் (paneer), பால்கோவா, ரசகுல்லா முதலிய பலவிதமான சுவை மிகுந்த உணவுப் பொருட்களையும் பாலிலிருந்து தயார் செய்து அருந்தி மகிழ்கிறோம். பாலைத் திட நிலைக்கு மாற்றி அதனைப் பால் பவுடராக மாற்றிப் பல காலம் கெடாத வண்ணம் பாதுகாத்து, நீரில் கலந்து அருந்துகிறோம், குழந்தைகளுக்கான பல உணவுப் பொருட்களில் (baby food) பால் பவுடர் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தனை அரிய குணமுள்ள மதிப்பு மிக்க உணவான பாலை நமக்குத் தரும் பசுவை கோமாதா எனக் கொண்டாடுகிறோம். பசுவின் பாலை ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துகிறோம். வருடந்தோறும் பொங்கலன்று பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜித்து வழிபடுகின்றோம். ஆனால் நாம் உண்மையிலேயே பசுவை மதிக்கிறோமா என்று அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது, காரணம் பசுவின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்து, அதன் கன்றை ஏமாற்றி அதன் பாலை நாம் களவாடுகிறோம். ஒவ்வொரு முறையும் அப்பசுவைக் கருத்தரிக்கச் செய்கையில் அதனை நாமெல்லோரும் அனுபவிப்பது போல ஒரு காளைமாட்டுடன் சேர்த்து இயற்கையாக அதற்குக் கிடைக்க வேண்டிய காதலின்பத்தை அளிக்க மறுதது, செயற்கையாக அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம்.

ஒரு கறவை வற்றியதும் தக்க இடைவெளி விடாது மறு கறவைக்கு அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம். இவ்வாறு அது அடுக்கடுக்காகக் கன்றுகள் ஈன்று, தன் ரத்தத்தையெல்லாம் பாலாக்கி நமக்களித்த பின்னர் இறுதியில் இனியும் அப்பசு கருத்தரிக்க லாயக்கற்றது எனும் நிலையை அடைகையில் அப்பசுவை "அடிமாடாக" விற்று விடுகிறோம். இத்தகைய அடி மாடுகள் பசி பட்டினியுடன், லாரிகளிலும் கால்நடையாகவும் கேரளம் போன்ற இடங்களுக்கு இட்டுச் செல்லப் பட்டு அங்கே கொல்லப்படுகின்றன. கொன்று கிடைக்கும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் உள்நாட்டிலும் அதை உணவாக சமைக்கும் உணவு விடுதிகளுக்கு விற்கிறோம்.

பசுவிற்கு நாம் செய்யும் இத்தகைய கெடுதல்களால் மனிதராக இருக்கவே நாமெல்லோரும் லாயக்கற்றவர்களாகிறோம். குறைந்த பட்சம் கறவை வற்றிய பசுக்களைக் கொல்லாது அவற்றை உணவளித்துப் பராமரிக்க வேண்டும். நம்மால் முடியவில்லையெனில் இத்தகைய பணியைச் செய்யும் "கோசாலா" எனும் இடங்களைக் கண்டறிந்து அங்கே அவற்றைச் சேர்க்க வேண்டும். மனிதத்தன்மையை சிறிதேனும் காக்க இது வழிகோலும்.


ஷெண்பகமே ஷெண்பகமே

திரைப்படம்: எங்க ஊருப் பாட்டுக்காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

பட்டுப் பட்டுப் பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும் மல்லிகையும்
தொ்ட்டுத் தொட்டு நான் கறக்க துடிக்குதந்த ஷெண்பகம்

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதியாச்சு என் மனம் தானா பாடி்டலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்னைப் பின்னாலே
எப்போதும் உன்னைத் தொட்டுப் பாடப் போறேன் தன்னாலே

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடி தானோ?
இழுத்தது என்ன பூவிழி தானோ?
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக் காரன் பாட்டு ஒன்னை விட்டுப் போகாது

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக