செவ்வாய், 24 ஜனவரி, 2012

மதுரை அரசாளும் மீனாட்சி


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் ஒவ்வொருவரையும் காக்கும் சக்திகளை வரிசைப் படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, குருவே துணை என்று இவற்றுள் முதல் மூவரைப் பற்றியும் சிறப்பித்த பின்னரே தெய்வத்தைக் குறித்துப் பல துதிகள் வழங்கப் பட்டன. இவற்றில் அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். அவ்வாறு தாயின் வடிவில் அருள் புரிபவள் அன்னை பராசக்தி. அவள் காஞ்சிமாநகரில் காமாட்சியாகவும், மதுரையம்பதியில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் அருள் பாலிக்கிறாள்.

காஞ்சி காமாட்சி ஆலயம் காஞ்சி ஸ்ரீ மடாதிபதிகளால் நிர்வகிக்கப் படுகிறது. இவ்வாலயத்தில் அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. காஞ்சி காமகோடி பீடாதிபதி காமாட்சியின் ஆலயத்துக்குப் பொன்கூரை வேய்ந்து சிறப்பித்துள்ளார். ஸ்ரீ மடத்தின் மூலம் எண்ணற்ற தரும கைங்கர்யங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்பது உண்மையின் தத்துவம். முற்காலத்தில் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் மக்கள் யாவரையும் சமமாக மதித்துப் போற்றினர் எனும் உண்மையை உலகத்தார்க்கு உணர்த்துபவை அம்மன்னர்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய அற்புதமான ஆலயங்கள். ஆனால் இன்றோ கருப்புப் பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சிக்கு வந்து நாட்டை ஆட்டிப் படைக்கும் சுயநலவாதிகள் மக்களைப் பல்வேறு வழிகளிலும் கசக்கிப் பிழிந்து அவர்கள் தங்கள் உயிர் வாழ்வுக்காகப் பாடுபட்டு ஈட்டும் பணத்தைப் பகல் கொள்ளையடிக்கவென்று வகுத்த திட்டங்களுள் ஒன்றே ஆலய தரிசன டிக்கட்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை நான் முதலில் தரிசித்தது என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோருடன் 1964ஆம் ஆண்டாகும். அதன் பின்னர் 1980ஆம் ஆண்டு ஒரு முறை என் தந்தையுடன் சென்று தரிசித்தேன். அப்பொழுது அங்கு திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவை என் தந்தையுடன் அமர்ந்து கேட்டேன். சொற்பொழிவு முடிந்ததும் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தன்னிடம் வரிசையில் வந்து நின்ற அன்பர்கள் அனைவருக்கும் தனது திருக்கரத்தால் திருநீறு அணிவித்து ஆசி வழங்கினார். வரிசையில் நானும் நின்று அவர் கையால் திருநீறு அணியப் பெற்றேன். அதன் பின்னர் என் மனைவியுடன் 1984ஆம் ஆண்டு மீனாட்சியம்மனை தரிசித்தேன். அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் அனைவரும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆலயத்தினுள் சென்று பார்வையிடவும் வழிபடவும் முடிந்தது. ஆனால் தற்போது 2012 ஜனவரி முதல் தேதியன்று என் கல்லூரித் தொழர்களுடன் அமைந்த மதுரை சந்திப்பின் போது நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து தரிசிக்கச் செல்கையில் முன்பிருந்த உற்சாகம் இல்லை, காரணம் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என பக்தர்களைப் பிரித்து தரிசன டிக்கட் மூலம் வசூல் வேட்டை நடத்த ஆலயமெங்கும் அமைக்கப் பட்ட தடைகள். 1995ஆம் வருடம் முதலே இந்த அவலம் நிறைவேறி வருகிறது என அவ்வமயம் அங்கே வந்திருந்த மூத்த அன்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.

கடவுளைக் காட்சிப் பொருளாக்கிக் காசு பண்ணும் சிறுமை கண்டு மனம் கொதிக்கிறதேயன்றி ஆலயத்தில் இறைவழிபாட்டில் ஈடுபாடு வரவில்லை. ஆலயம் தொல்பொருட்காட்சியகமாக மாறியுள்ளதை உணர்ந்து அதிர்ச்சியுற்றேன். ஆலய்த்தின் உள்ளே பல கடைகள் அலங்காரப் பொருட்களும் கடவுளர் படங்களும் பிற பொருட்கள் பலவும் விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் கைகள், கால்கள் மட்டுமன்றிக் கண்களையும் கட்டிப் போட்டது போன்றதோர் உணர்வே மேலோங்கியது.

நாட்டு மக்களைக் காப்பது அரசின் கடமை. அக்கடமையை அரசு முறையாக ஆற்றாமல் பல்வேறு வகையிலும் மக்கள் துன்புறுவதை அனுமதித்துள்ள நிலையில் மன நிம்மதி நாடி ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனிடம் தங்கள் மனக்குறையை முறையிடச் செல்ல வேண்டுமாயின் அதற்கும் காசு கொடுத்தாலே இயலும் எனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டுக்குக் கேடு விளைவிப்பதாகும். இந்நிலைமை மாற வேண்டும். இறைவன் அருள் அனைவர்க்கும் எளிதில் கிட்ட வேண்டும். இறையருள் வியாபாரப் பொருளாக்கப் பட்டது மனித வர்க்கத்தின் சுயநல வெறியாட்டத்தின் உச்சகட்டமாகும். இத்தகைய வெறியாட்டம் அழிவுக்கே வழி வகுக்கும்.

இதனால் எழும் பெரிய சந்தேகம்: மதுரை மீனாட்சி ஆள்கிறாளா அல்லது அடிமையாக ஆளப்படுகிறாளா?

மதுரை அரசாளும் மீனாட்சி

திரைப்படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து
சக வீர்யம் கரவாவகை
தேஜஸ் விநாவதி தமஸ்து
மா வித் விஷாவகை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி?

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திரிபுர சுந்தரி சீர்காழியிலே சீர்காழியிலே
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ....
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி சகல
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி

வியாழன், 19 ஜனவரி, 2012

சின்னச் சின்ன வெத்தலையாம்


வாழ்க்கை வாழ்வதற்கே எனும் எளிய உண்மையை அறியாத மாந்தர் தேடத் தகாததைத் தேடி தேடத்தக்கதை மறந்து எந்நாளும் கவலையில் உழன்று வாழ்க்கையில் திருப்த்தியின்றி வருந்தி மடிகின்றனர். இதை விடவும் மடமை வேறில்லை. இந்த உலகம் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் எனும் பரந்த மனப்பான்மை கொண்டு வாழ்வோருக்கு உலக வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பமயமானதாகவே இருக்கும். அல்லாது இயற்கை வளங்களைக் கூறு போட்டு, எனது உனது என்று பிரித்து ஒருவரும் முழுமையான பயனடையாமல் செய்து எந்நாளும் பிறருடன் கருத்து வேறுபாடு வளர்த்துத் துன்புறுவோர்க்கு இவ்வாழ்வு முற்றிலும் நரகமே ஆகும்.

 "குரங்கு தானும் கெட்டு வனத்தையும் அழித்தது போல்" என்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விட்டு அழிவுப் பாதையில் செல்வோரைக் குறிப்பிடுவதுண்டு. இதற்குக் காரணம் குரங்குகளின் செயல்பாட்டை ஆராய்ந்து பார்க்கத் தெளிவாக விளங்கும். சில குரங்குகள் பழங்களும் காய்களும் நிறைந்த ஒரு மரத்தின் மீது ஏறுகையில் அம்மரத்திலிருக்கும் பழங்களைத் தின்ற பின்னர் உடனே வேறு இடத்துக்குச் செல்லாமல் அந்த மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையுமே பறித்து வீணாக்கி விடுவதைக் காணலாம். அதன் பின்னர் அம்மரம் மீண்டும் பூத்துக் காய்த்துக் கனிகள் தர விடாமல் அவ்வப்பொழுது மீண்டும் வந்து அம்மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையும் அக்குரங்குகள் அழித்து விடும். இதனாலேயே உணவு கிடக்காமல் அவை ஊரெல்லாம் அலையும், மக்கள் வாழும் வீடுகளுக்குள் சென்று கிடைத்ததைத் திருடித் தின்னும்.

குரங்குகளைப் போலவே மனிதர்களில் பலரது செயல்பாடுகளும் விளங்குகின்றன. அத்தகைய மனிதர்கள் துன்பமே அடைகின்றனர். மனிதத் தன்மையுடன் தன்னைப் போலவே பிறரையும் சமமாக பாவித்து அனைவரும் ஒன்றுபட்டு, இருப்பதைப் பகிர்ந்து வாழும் வாழ்க்கையே இன்பமளிக்க வல்லது. 

உணவு உண்கையில் அரை வயிறளவே உண்ண வேண்டும், அத்துடன் தாகம் தணியுமளவு தண்ணீர் குடித்த பின் இன்னும் சிறிதளவு உண்ணலாம் போலிருக்கையிலேயே உணவை முடித்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ட உணவு அப்பொழுது தான் நன்கு செறித்து நம் உடலுக்கு வலுவூட்டி உள்ளத்துக்கு உற்சாகமூட்டும். நம் உணவில் அளவிற்கு அதிகமான உப்பு, புளி, காரம், இனிப்பு முதலிய சுவைகளைச் சேர்க்காமல் உணவு நல்ல சுவையுடையதாக சமைத்து உண்ணுதல் நலம் பயக்கும். மாமிசம் மற்றும் நெய் முதலிய கொழுப்புச் சத்து மிகுந்த உணவு மனிதர்களுக்கேற்றதல்ல. இவற்றிலிருக்கும் கொழுப்பு நேரடியாக ரத்தத்தில் கலந்து நம் ரத்த நாளங்களில் மெல்லியதாய்ப் படிந்து ரத்தநாளங்களின் குறுக்களவைக் குறைத்து விடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இது இருதயத்தை பலவீனமாக்கி இருதய நோயை உண்டாக்கி விடும். 

ஒவ்வொரு வேளையும் நாம் உண்ணும் உணவு முழுமையாக செரிக்க வேண்டியது மிகவும் அவசியம். உணவு ஜீரணமாகாமல் இருப்பின் அது வாயுத் தொல்லை, மலச்சிக்கல் முதலிய உபாதைகளை ஏற்படுத்தி அத்தகைய உபாதைகள் ஆயுள் முழுதும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் உண்ணும் உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக, நார்ப்பொருள் மிகுந்ததாகவும் இருத்தல் அவசியம். அப்பொழுது தான் இத்தகைய உபாதைகள் உண்டாகாமல் தவிர்க்கலாகும். காய்கறிகளிலும் கீரை வகைகளிலும் நார்ப்பொருள் மிகுதியாக உள்ளதால் அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உண்ட உணவு செரிமானமாக உதவும் ஒரு இனிய பொருள் தாம்பூலம். வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு இவை மூன்றையும் தக்க அளவில் ஒன்று சேர்க்கக் கிடைக்கும் தாம்பூலம் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். எனவே தான் இது திருமணம் மற்றும் ஆலய வழிபாடுகளிலும் பல்வேறு விருந்துகளிலும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. வெற்றிலை ஜீரண சக்தியைத் தருகிறது. பாக்கு ஓய்வைத் தந்து உடல் உபாதைகளிலிருந்து நிவாரணமளிக்கிறது. சுண்ணாம்பு நம் உடலுக்குத் தேவையான கால்ஷியம் சத்தினைத் தருகிறது. இவற்றுள் வெற்றிலை முதன்மையானது. வெற்றிலை வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இன்றைய பாடல் எடுத்துரைக்கிறது.


பாடியவர்: அனிதா குப்புசாமி
இயற்றியவர்: கவிஞர் செந்தமிழ் மாறன்
இசை: கண்மணி ராஜா

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

முக்கடலும் சூழ்ந்திருக்கும் முத்து முத்து பாரதம் போல்
முக்கோண வடிவம் கொண்ட மூக்கு செவந்த வெத்தலையாம்
மேற்புறத்தில் தென்னந்தோப்பு கீழ்ப்புறத்தில் வாழத்தோப்பு
வாழத் தோப்பு மத்தியிலே வளர்ந்து வந்த வெத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

போத்தனூருப் பொண்ணுங்கல்லாம் போட்டு வரும் வெத்தலையாம்
அத்தனூருப் பொண்ணுங்கல்லாம் அடக்கி வைக்கும் வெத்தலையாம்
பச்சப் பந்தல் துடிக்குமே பரிசம் போடும் வெத்தலையாம்
எச்சிலுக்கும் வாசம் தரும் பச்சப் பச்ச வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

எங்களூரு சந்தையிலே ஏலம் போற வெத்தலையாம்
பெங்களூரு சந்தையிலே பேரம் பேசும் வெத்தலையாம்
வாய்க்கார மனுஷங்களை வாயடக்கும் வெத்தலையாம்
நோய் நொடிகள் தீர்க்க வல்ல நோக்கமுள்ள வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

சேலத்து மானுக்கு தான் சீரு வந்த வெத்தலையாம்
சீரு வந்த வெத்தலையும் சீமைக்கெல்லாம் பத்தலையாம்
தொட்டாலும் கைமணக்கும் துட்டுக்கொரு வெத்தலையாம்
தின்னாலும் வாய் மணக்கும் சீரங்கத்து வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

வண்ண வண்ண சேலைக்காரி வந்து இலை வெட்டையிலே
மண்ணு பட்டா தோசமுன்னு மடியில் வெச்ச வெத்தலையாம்
ஊரோரம் சின்னக்குளம் ஊத்துலேயும் தண்ணி வரும்
மோதி வரும் தண்ணியிலே ஒசந்து வந்த வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

ஆத்தோரம் கொடிக்காலு அந்தப்புறம் நந்தவனம்
நந்தவனக் கிளி போடும் நான் கொடுத்த வெத்தலையே
வெறும் வாயை மெல்லாதே வெத்தலையத் தள்ளாதே
கருவாய செவக்க வைக்கும் காசுக்கார வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


நம் நாட்டுல் மட்டுமின்றி உலகெங்கிலும் தொழில் துறையிலும், பொருளாதாரத்திலும், சமுதாய நல்லுறவு மற்றும் ஒருமைப்பாட்டிலும் இதுவரையில் இல்லாததொரு மந்தமான சூழ்நிலை உருவாகியுள்ளது. லண்டன் மாநகரில் சமீபத்தில் பொதுமக்களில் ஒரு சாரார் பல வர்த்தக நிறுவனங்களிலும் கொள்ளையடிப்பதும் பல கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைப்பதும் பொது சொத்துக்களை சூறையாடுவதும் என உலகமே பெரும் அதிர்ச்சியுறும் விதமான வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின. எகிப்து நாட்டு மக்கள் யாவரும் தெருக்களில் கூடி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து கீழே இறக்கிய நாடு கடத்திய பின்னர் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கும் எதிராகத் தொடர்ந்து போராடுகின்றனர். அதே சமயம் லிபியா நாட்டில் மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக பன்னாட்டுப் படையினரின் துணையுடன் போராடி கர்னல் கடாஃபியைக் கொன்ற பின்னரும் இன்னும் நாட்டில் ஒழுங்கு நிலை திரும்பாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் பலர் ஒன்றுதிரண்டு அமெரிக்காவின் பங்குச் சந்தையாக விளங்கிவரும் வால் தெருவை ஆக்கிரமிக்கும் இயக்கத்தைத் தொடங்கிப் போராடுகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு மூல காரணம் சமுதாயத்தில் பெரும்பாலானோரின் உழைப்பின் பலனை ஒரு சிலர் சுரண்டி வாழ்வதும் உழைக்கும் வர்க்கம் வறுமையில் வாடுவதும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு அளவு கடந்து வளர்ந்து வருவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும் விலைவாசி விஷம்போல் உயருவதும் ஆகும். தற்போது மக்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்துக்கெதிராக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் போராடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் ஒரு மாபெரும் கிளர்ச்சி உருவாகி வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் பலர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பெரும் ஊழல்கள் பல புரிந்து நாட்டைக் கொள்ளையடிப்பதும் செய்தி நிறுவனங்களின் வாயிலாக வெளிவந்ததை அடுத்து மக்கள் மத்திய அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து வரும் சூழ்நிலையே ஆகும். நம் நாட்டிலுள்ள விவசாயிகள் தாம் மிகவும் பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பதுக்கல், இடைத் தரகர்கள் போதிய குளிர்பதன அறைகள் இல்லாமை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, அரசு வங்கிகளில் கடனுதவி கிடைக்காமை, கந்து வட்டிக் கடன் முதலியவற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில். இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயலாமல் சில்லரை வணிகத்தில் அந்நியா நாடுகள் நேரடியாக முதலீடு செய்ய வழிவகுக்கும் சட்டம் ஒன்றை திடுதிப்பென்று அறிவிக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே நாட்டிலுள்ள பல தொழில் துறைகளையும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது போதாதென்று சில்லரை வணிகத்தையும் விற்றுவிடத் துடிக்கும் பொறுப்பற்ற அரசாங்கம் நம் நாட்டில் இருப்பதாலேயே மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நாட்டின் சுதந்திரத்தை மிகவும் குறுகிய காலத்தில் இன்று நாட்டின் தலைவர்களாக விளங்குபவர்களே அந்நியர்களுக்கு விற்று வருகின்றனர். உழைக்கும் மக்கள் 80 சதவீதத்தினர் தாம் அல்லும் பகலும் உழைத்து ஈட்டிய பணம் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் உதவாத நிலையில் இலவச அரிசிக்காகவும் இதர பொருளாதார உதவிகளைப் பெறுவதற்காகவும் ஆலாய்ப் பறக்கும் கேவலமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கியுள்ளனர் நம் நாட்டின் பெரும் தலைவர்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் இதர வசதிகள் யாவையும் அளிப்பது விவசாயம் உட்பட்ட பல்வேறு துறைகளிலும் உழைக்கும் தொழிலாளர்களே ஆவர். அத்தகைய தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கங்களின் கடமையாகும். பொது மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகள் அனைத்தும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கச் செய்வது்ம், அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இலவசமாக கல்வி வசதி அளிப்பதும் அரசாங்கங்கள் செய்து வந்த நிலையை மாற்றி மருத்துவமும் கல்வியும் தனியாருக்கு விற்கப் பட்டு அரசுகள் சாராயக் கடைகளை நடத்துவதும், அன்றாடம் நடக்கும் நகைக் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, லஞ்ச ஊழல்கள் முதலிய சீர்கேடுகளைக் களைய முயலாமல் விளம்பர அரசியல் நடத்துவதும் மக்கள் யாவரும் மிகவும் வேதனையடையக் காரணிகளாகியுள்ளன. 

உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடைபாதையிலே இறக்கம் காட்டத்தான் நாதியில்லே எனும் நிலை மாறி உழைப்பாளிகளுக்கு உரிய மதிப்பளித்து சமூகநீதி காக்கும் அரசுகள் அமைந்தால் மட்டுமே நம் நாடு தற்போது ஏற்பட்டுள்ள சீர்கேடுகளிலிருந்து மீண்டு வளம் பெறலாகும்.

நம் யாவருக்கும் அன்னமிட்ட கைகளான உழைப்பாளிகளின் கரங்களை வலுப்படுத்த அன்னா ஹசாரேயின் அறப்போராட்டத்துக்குத் துணை நின்று நாட்டில் முறையான சட்டங்கள் இயற்றப்பட்டு சமூக நீதி காக்கப்படத் தொடர்ந்து போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.


திரைப்படம்: அன்னமிட்ட கை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக 
நிலைநிறுத்தி உடல் வருத்தி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி 
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

புதன், 18 ஜனவரி, 2012

யாரோ இவர் யாரோ?


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

ததரன்னா நா நா நா நனன்னோ தானா நானா நானனானானானா

தனனா நானன்னா நா ததரன்னானா நானா நனன்னானானானா
நா... நா... நா.. னானானானா நானானானானா
தனன்னா நோ நானானா ததரன்னோ நானானா நானானா தானானா
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக
சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு காலே
அந்த நாளில் பந்தம் போலே ஏ ஏ ஏ ஏ
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
---------------------------------


பாடியவர்: டி.கே. பட்டம்மாள்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர் யாரோ?
சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

சந்திரபிம்ப முக மலராலே 
சந்திரபிம்ப முக 

மபதநிஸ் நிரிஸ்நித பதம
சந்திரபிம்ப முக
நிநீதபதநிதபமா பதநி ஸ்க்ரிஸ் நிரிஸ்நிதபம
சந்திரபிம்ப முக
பாதபநிநிதபமகரிகமபத மபதநி ஸ்கரிஸ் நிரிஸ்ஸ்நிதபம
சந்திரபிம்ப முக
நிநீதபதநீத பநிதபாதமா பநிதபதபாதமா பதநிஸ்கரிஸ்நிரிஸ் ஸ்நிதபம

சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு தாயாலே
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

மாமுனிவர்கள் பலரும், அருந்தமிழ்ப் புலவோரும், அனேக ஆன்றோர் பெருமக்களும் அறிவினால் அறிந்து அனுபவத்தால் உணர்ந்து பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் விளக்கத்தாலும், கதைகள், கவிதைகள், காவியங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்த வாழ்க்கைத் தத்துவத்தைப் பாமர மக்கள் படித்தறிய இயலாதெனக் கண்டு

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா."

என எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான்கே வரிகளில் கவிஞர் கண்ணதாசன் எடுத்துரைத்த பின்னரும் வாழ்வின் நிலையாமையை அறிவால் அறிந்த பின்னரும் உள்ளத்தால் உணராமல் மடமையில் மூழ்கிப் பொய்யான இவ்வுடலை வளர்ப்பதும் நிலையில்லாத சிற்றின்ப சுகம் பெறுவதும் மட்டுமே வாழ்வின் பெரும் குறிக்கோள்கள் எனக் கொண்டு தமிழர்கள் பலரும் தம் சுய அறிவை இழந்து சுயநல மயக்கத்தில் மூழ்கி, பிறர் நலன் பேணாது பெரும் பாபக் குழியில் விழுந்து கிடக்கின்றனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின் விளைவாக அந்தணர்கள் சிலரும் உயர்ந்த ஜாதி என்று தங்களை சொல்லிக்கொள்வோர் சிலரும் சேர்ந்து ஆலயங்களில் பூஜை செய்வதும் நாட்டுமக்களின் நலன் வேண்டுவதுமான தம் ஸ்வதர்மத்தை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வளர்த்து விட்ட தீண்டாமை எனும் தீமையை அழிக்க வேண்டி, "க்டவுளை மற மனிதனை நினை" எனத் தமிழ் மக்களுக்கு அன்று தந்தை பெரியார் வழங்கிய சீரிய அறிவுரையில் முதல் பாதியை மட்டும் தம் சுயநலம் பேண உபயோகித்து மனித இனத்தையே அழிவுப் படுகுழியில் த்ள்ளவும் தயங்காது குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருடர்கள் இறுதியில் தாங்கள் அடித்த கொள்ளை அம்பலமான பின்னர் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆண்டவனுக்கே லஞ்சத்தைக் கொடுத்துத் தம் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம் என மனப்பால் குடித்து வரும் கேவலமும் அம்பலமாகி விட்டது.

இறைவன் இருக்கின்றானா? எனும் கேள்விக்கு உண்மையான பதிலை உளமாரத் தேடினால் கிடைக்கும் விடையாவது இறை என்பது எங்கும் நிறை பரம்பொருள் என்பதுவே. ஆனால் அந்தத் தேடலுக்கு முதற்கண் ஒருவர் பொருளின் மீதுள்ள பற்றுதலையும் சிற்றினப நாட்டத்தையும் விடல் வேண்டும். தனக்கு தனக்கு என அளவிடற்கரிய பொருளை அடுத்தவரை ஏமாற்றிச் சேர்த்தவர்கள் அவ்வாறு சேர்த்த பொருளில் சிறிதளவும் அனுபவியாது மடிவதைக் கண்ணாரக் கண்டபின்னரும் ஏனையோர் தாமும் அதே போன்ற தீய மார்க்கத்தில் தொடர்ந்து செல்வது வேடிக்கை. தனது என்பது நீங்கினாலே தெய்வ சிந்தனையுண்டாகும். யாவும் தங்க்கென நினைப்போர் எந்நாளும் இறைவனை அறிய முடியாது. நிலையான பேரின்பம் பெற ஓரே வழி பற்றுதலை விடுத்துப் பரம்பொருளை நாடுதலேயாகும்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

திரைப்படம்: வளர்பிறை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

வீச்சறுவா தூக்கிகிட்டு

ஆதி மனிதர்கள் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். அவர்களுள் வலிமை மிக்கவன் அனைவருக்கும் தலைவனாக விளங்கி அடக்கி ஆண்டு வந்தான். அப்போது மனிதர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டதுடன் தங்கள் தலைவனையும் தலைவியையும் தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். நாளடைவில் மனிதனின் பகுத்தறிவு வளரவே அவன் இயற்கையின் சக்திகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினான். காடுகளை அழித்து வீடுகள் கட்டிக்கொண்டு வாழத் தலைப்பட்டான். அது முதற்கொண்டு ஒரு வரைமுறைக்குள் செயல்படும் மனித சமுதாயம் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக்கப்பட்டு அவனுக்கு விசேஷமான ஆடை அணிகலன்கள் தயாரிக்கப்பட்டு, பிறரிலும் மேம்பட்டவனாக அரசன் விளங்குவது மரபாக அமைந்தது.

அரசன் தன் நாட்டையும் குடிமக்களையும் வன விலங்குகளிடமிருந்து காப்பதும், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை வசதிகள் கிடைக்க வழி செய்வதும், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து நாட்டில் மக்கள் என்றும் இன்பமாய் வாழ வழிவகுப்பதும் தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரவே அரசனை மக்கள் மிகவும் மதித்து நடந்தனர். நாளடைவில் மதங்கள் தோன்றி ஆலயங்கள் அமைக்கப் பட்டு வழிபடும் வழக்கம் பரவுகையில் ஆலயங்களில் கடவுளர்க்கு சிலைவடிவம் கொடுக்கப்பட்டு எல்லா மக்களும் விசேஷமான முறையில் பூஜைகள் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சிறப்புடன் இறை வழிபாடு நடைபெறுவது வழக்கமானது.

இத்தகைய ஆலயங்களுள் தொன்மை வாய்ந்தவை ஐயனார் எனவும் எல்லைச் சாமி எனவும் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் தெய்வத்தின் திருக்க்கோவில்களாகும். ஐயனார் உருவத்தை ஒரு அரசனைப் போல அமைத்து ஆசனத்தில் வீற்றிருப்பது போலவும், குதிரை மேல் சவாரி செய்வது போலவும் உருவாக்கி மக்கள் வழிபட்டனர், இன்றும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். ஐயனார் தங்கள் கிராமத்து மக்கள் அனைவரையும் ஒரு அரசன் குடிமக்களைக் காப்பது போலவே காக்கின்றார் எனும் அசையாத நம்பிக்கையுடன் மக்கள் இன்றும் இறைவழிபாட்டை நடத்துகின்றனர்.

வீச்சறுவா தூக்கிகிட்டு

வீச்சறுவா தூக்கிகிட்டு Veecharuva thookikittu
பாடியவர்: சின்னப் பொண்ணு Chinna Ponnu
இசை: எல்.வி. கணேசன் L.V. Ganesan
இயற்றியவர்: முத்து விஜயன் Muthu Vijayan
ஆல்பம்: தன்னானே தன்னானே thannaanae thananana
ஆண்டு: 2009

ஏ வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம் ஐயா
உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே ஏ ஏ ஏ ஏ ஏ
நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேன்டும்.

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

திரைப்படம்: பதிபக்தி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1958

ஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ
ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஓ

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஹேஹேஹேஹேஹே

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

ஹேய் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அம்மா

திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹஹா

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓ

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேஹே

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா

அஜக் அம்மா ஐயோ கொல்லுறயே அப்பா

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேய்

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹே
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா