வியாழன், 19 ஜனவரி, 2012

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


நம் நாட்டுல் மட்டுமின்றி உலகெங்கிலும் தொழில் துறையிலும், பொருளாதாரத்திலும், சமுதாய நல்லுறவு மற்றும் ஒருமைப்பாட்டிலும் இதுவரையில் இல்லாததொரு மந்தமான சூழ்நிலை உருவாகியுள்ளது. லண்டன் மாநகரில் சமீபத்தில் பொதுமக்களில் ஒரு சாரார் பல வர்த்தக நிறுவனங்களிலும் கொள்ளையடிப்பதும் பல கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைப்பதும் பொது சொத்துக்களை சூறையாடுவதும் என உலகமே பெரும் அதிர்ச்சியுறும் விதமான வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின. எகிப்து நாட்டு மக்கள் யாவரும் தெருக்களில் கூடி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து கீழே இறக்கிய நாடு கடத்திய பின்னர் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கும் எதிராகத் தொடர்ந்து போராடுகின்றனர். அதே சமயம் லிபியா நாட்டில் மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக பன்னாட்டுப் படையினரின் துணையுடன் போராடி கர்னல் கடாஃபியைக் கொன்ற பின்னரும் இன்னும் நாட்டில் ஒழுங்கு நிலை திரும்பாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் பலர் ஒன்றுதிரண்டு அமெரிக்காவின் பங்குச் சந்தையாக விளங்கிவரும் வால் தெருவை ஆக்கிரமிக்கும் இயக்கத்தைத் தொடங்கிப் போராடுகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு மூல காரணம் சமுதாயத்தில் பெரும்பாலானோரின் உழைப்பின் பலனை ஒரு சிலர் சுரண்டி வாழ்வதும் உழைக்கும் வர்க்கம் வறுமையில் வாடுவதும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு அளவு கடந்து வளர்ந்து வருவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும் விலைவாசி விஷம்போல் உயருவதும் ஆகும். தற்போது மக்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்துக்கெதிராக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் போராடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் ஒரு மாபெரும் கிளர்ச்சி உருவாகி வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் பலர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பெரும் ஊழல்கள் பல புரிந்து நாட்டைக் கொள்ளையடிப்பதும் செய்தி நிறுவனங்களின் வாயிலாக வெளிவந்ததை அடுத்து மக்கள் மத்திய அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து வரும் சூழ்நிலையே ஆகும். நம் நாட்டிலுள்ள விவசாயிகள் தாம் மிகவும் பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பதுக்கல், இடைத் தரகர்கள் போதிய குளிர்பதன அறைகள் இல்லாமை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, அரசு வங்கிகளில் கடனுதவி கிடைக்காமை, கந்து வட்டிக் கடன் முதலியவற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில். இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயலாமல் சில்லரை வணிகத்தில் அந்நியா நாடுகள் நேரடியாக முதலீடு செய்ய வழிவகுக்கும் சட்டம் ஒன்றை திடுதிப்பென்று அறிவிக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே நாட்டிலுள்ள பல தொழில் துறைகளையும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது போதாதென்று சில்லரை வணிகத்தையும் விற்றுவிடத் துடிக்கும் பொறுப்பற்ற அரசாங்கம் நம் நாட்டில் இருப்பதாலேயே மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நாட்டின் சுதந்திரத்தை மிகவும் குறுகிய காலத்தில் இன்று நாட்டின் தலைவர்களாக விளங்குபவர்களே அந்நியர்களுக்கு விற்று வருகின்றனர். உழைக்கும் மக்கள் 80 சதவீதத்தினர் தாம் அல்லும் பகலும் உழைத்து ஈட்டிய பணம் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் உதவாத நிலையில் இலவச அரிசிக்காகவும் இதர பொருளாதார உதவிகளைப் பெறுவதற்காகவும் ஆலாய்ப் பறக்கும் கேவலமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கியுள்ளனர் நம் நாட்டின் பெரும் தலைவர்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் இதர வசதிகள் யாவையும் அளிப்பது விவசாயம் உட்பட்ட பல்வேறு துறைகளிலும் உழைக்கும் தொழிலாளர்களே ஆவர். அத்தகைய தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கங்களின் கடமையாகும். பொது மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகள் அனைத்தும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கச் செய்வது்ம், அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இலவசமாக கல்வி வசதி அளிப்பதும் அரசாங்கங்கள் செய்து வந்த நிலையை மாற்றி மருத்துவமும் கல்வியும் தனியாருக்கு விற்கப் பட்டு அரசுகள் சாராயக் கடைகளை நடத்துவதும், அன்றாடம் நடக்கும் நகைக் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, லஞ்ச ஊழல்கள் முதலிய சீர்கேடுகளைக் களைய முயலாமல் விளம்பர அரசியல் நடத்துவதும் மக்கள் யாவரும் மிகவும் வேதனையடையக் காரணிகளாகியுள்ளன. 

உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடைபாதையிலே இறக்கம் காட்டத்தான் நாதியில்லே எனும் நிலை மாறி உழைப்பாளிகளுக்கு உரிய மதிப்பளித்து சமூகநீதி காக்கும் அரசுகள் அமைந்தால் மட்டுமே நம் நாடு தற்போது ஏற்பட்டுள்ள சீர்கேடுகளிலிருந்து மீண்டு வளம் பெறலாகும்.

நம் யாவருக்கும் அன்னமிட்ட கைகளான உழைப்பாளிகளின் கரங்களை வலுப்படுத்த அன்னா ஹசாரேயின் அறப்போராட்டத்துக்குத் துணை நின்று நாட்டில் முறையான சட்டங்கள் இயற்றப்பட்டு சமூக நீதி காக்கப்படத் தொடர்ந்து போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.


திரைப்படம்: அன்னமிட்ட கை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக 
நிலைநிறுத்தி உடல் வருத்தி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி 
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக