திங்கள், 25 ஜனவரி, 2016

உன்னை நினைக்கையிலே

இவ்வுலக வாழ்விலேயே சொர்க்கம்,நரகம் இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம். யாரும் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பின்னர் சொர்க்கம் போவதைப் பற்றி எண்ணி மயங்கவும் வேண்டாம், நரகம் போவதைப் பற்றி வருந்தவும் வேண்டாம். இறந்த பின் வாழ்வு உண்டு என்போரும் இல்லை என்போரும் தம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவ்வாறு சொல்கின்றரே அல்லாது அறிந்து சொல்வதில்லை. மறு பிறவியிலும், இறந்த பின் எய்தும் சொர்க்க நரகங்களிலும் நம்பிக்கை வைப்போரும் நம்ப மறுப்போறும் இரு சாராருமே அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று உளமார ஒத்துக் கொள்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர். 

யாரோ எவ்வாறோ இருக்கட்டும். அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தே எவரும் இவ்வுலகில் நடைபெரும் எல்லா சம்பவங்களிலிருந்தும் பெறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.  அவ்வனுபவங்களிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மனதார உணர்வோர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

வாழ்வில் எவ்வுயிர்க்கும் காதலைப் போன்ற இன்பம் பயக்கும் சொர்க்கம் வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதன் முதலில் ஒருவருக்குக் காதல் மலரும் பருவம் இளமை குலுங்கும் வாலிபப் பருவமாக இருப்பதாலேயே காதலின்பம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. காதலில் முழ்கிய ஒரு வாலிபன் தனது காதலியைப் பற்றி எண்ணுகையிலே காணும் இன்பம் அவனது கற்பனை வளத்திற்கேற்றவாறு சுவை தருகிறது. காதலைப் பற்றிக் கதைகள், காவியங்கள் பல இருந்த போதும் திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காதல் காட்சிகளைப் பார்த்து ரசிக்கையில் ஏற்படும் மெய்சிலிர்ப்புக்கு ஈடாகா என்பது அனேகர் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். 

அத்தகைய காதல் காட்சிக்குப் பாடல் இனிமையாக அமைந்து விட்டால் கேட்கவே ஆனந்த பரவசமாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் கற்பனை வளத்தில் கவினுற உருவாகி, இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் கைவண்ணத்தில் இசையமைந்து தங்கக் குரலோன் டி.எம். சௌந்தரராஜனின் இன்பக் குரலில் பாடல் அமைந்துள்ளதென்றால் அதில் இனிமை பொங்கி வழியும் என்று சொல்லவும் வேண்டுமோ?


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இயற்றியவர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
பொன்னை உருக்கிய வார்ப்படமே! அன்பு 
பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே!

உன்னை நினைக்கையிலே

வட்டக் கருவிழி மங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ
வட்டக் கருவிழி மங்கையே ஒளி 
கொட்டும் இரவுக்கு தங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் 
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே கண்ணே! 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
உன்னை நினைக்கையிலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நம் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் கூறுகின்றனர். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சற்றே மாறுபாடு எழுமாயின் அங்கே காதலர்கள் இடையே ஊடல் ஏற்படுகிறது. கருத்து வேறுபாடு களையப்பட்டு அல்லது உடன்பாட்டுக்கு வந்து ஊடல் தீர்ந்தால் கூடல் ஏற்படுகிறது. அப்போது ஊடலால் ஏற்பட்ட சிறு துன்பமும் மறைந்து மீண்டும் வலுவான கருத்தொருமித்த இன்பம் பிறக்கிறது. 

காதலர்களாயினும் கணவன் மனைவியாயினும் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் நிலவுவதில்லை. வேறுபாடுகள் எப்பொழுதும் எழக்கூடும். அத்தகைய தருணங்களில் காதலர்களுள் ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது உண்மைக் காதல். அது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை மாறாது நிலைபெற்றிருக்க வல்லது. அவ்வாறன்றி ஒருவர் கருத்து வேறுபாடுகளை மற்றவர் ஏற்றுக்கொள்ள மறுக்கையில் அங்கே உடன்பாடு ஏற்படுவதில்லை. அதனால் பிரிவு ஏற்படுகிறது.

சிலப்பதிகார காவியத்தில் கோவலனும் மாதவியும் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு உடன்பாட்டை எட்டாத சூழ்நிலையில் அவர்களிடையே நிரந்தப் பிரிவு ஏற்பட்டது. ஆயினும் அங்கே கோவலன் கண்ணகியுடன் சேர்ந்து வாழ வழி பிறந்தது. அது காவியம், கதையானதால் அதுகுறித்து சர்ச்சை செய்வது பலன் தராது. 

நிஜ வாழ்வில் காதல் கொண்ட இருவர் கருத்து வேறுபடுகையில் இருவருக்கும் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஊடல் கொண்டு பிரிந்த காதலர் ஒருவரையொருவர் எண்ணி ஒன்றுபட வழியென்று பிறக்கும் என்று ஏங்கி மயங்கி வாடுவதே உண்மைக் காதலர்களின் இயல்பு. 

ஊடலின் காரணமாய் உண்டான காதலியின் பிரிவினால் மனம் துயருற்று வருந்தி ஏங்கும் காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்து வாடுகிறான்.

ஊடலால் தன்னை விட்டுப் பிரிந்த காதலி தன்னை வந்து சேர வேண்டுமென உளமார வேண்டி அவளிடன் இரைஞ்சுகிறான் அக்காதலன்.  அவனது உணர்வை வார்த்தைகளால் கவிஞர் வடிக்க அதனைத் தேனொழுகும் தன் இனிய குரலில் பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி பாட அங்கே உண்மைக் காதல் உயிர் பெறுகிறது. 

சிறு பாலகனாக இருந்த காலத்தில் (1959) அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வர்த்தக சேவை எனும் தமிழ் வானொலியில் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தெள்ளமுதப் பாடல் உங்களுக்காக.


திரைப்படம்: அவள் யார்?
இயற்றியவர்:  வித்வான் வே. லட்சுமணன்
இசை:  ராஜேஸ்வர ராவ்
பாடியோர்:  Pandit Panikkrahi பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி
ஆண்டு: 1959

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?

வாடாத பூவும் மலராத போதே
வாடாத பூவும் மலராத போதே
பாடாது வண்டும் சூடாமலே
பாடாது வண்டும் சூடாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆனந்தமே தரும் வாழ்வில்
ஆனந்தமே தரும் வாழ்வில்
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
நீயாக வாராய் நாணாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே?

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஆனந்த நடமிடும் பாதன்

"நாம் ஒன்று நினக்க்க தெய்வம் ஒன்று நினைக்கிறது" என நாம் பல சந்தர்ப்பங்களில் நாம் எண்ணிய காரியம் நிறைவேறாது போனால் அலுத்துக் கொள்கிறோம். தெய்வம் இல்லை என மேடைகளில் உரத்த குரலில் முழக்கமிடுவோரும் தனிமையில் இத்தகைய சிந்தனையில் ஆழ்வதுண்டு. இத்தகைய சலிப்பு ஏற்படுவது அனவருக்கும் இயல்பான ஒன்றே. இதற்காக நாம் பெரிதாக வருத்தப்பட்டுப் பயனில்லை. பிறந்தவர் எவரும் இறவாமல் வாழ்வது இயலாது எனும் பொது விதி இருந்த போதிலும் மார்க்கண்டேயன் போல் இறவாமல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைபெற்று வாழும் யோகிகளும் உளர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சமீபத்தில் சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் வழியில் தொலைவிலுள்ள ஒரு மரத்தடியில் சித்தர் ஒருவர் அமர்ந்திருக்கக் கண்டு தன் கைப்பேசியில் அவரைப் படம் பிடிக்கையில் திடீரென அச்சித்தர் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றது ஒரு வியக்கத்தக்க சம்பவம். 


ராம் பஹதூர் பம்ஜன் எனும் 15 வயது சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக உணவோ நீரோ உட்கொள்ளாமல் நேபாளத்தில் ஒரு போதி மரத்தடியில் தவம் செய்யும் செய்தி அடுத்த அதிசயம் ஆகும். இச்சிறுவனை மக்கள் புத்தரின் மறு அவதாரம் என நம்புகின்றனர்.


ப்ரஹலாத் ஜானி எனும் 80 வயதுக்கு மேல் ஆன தாத்தா ஒருவர் தன் 12 வயதுக்குப் பின் உணவோ நீரோ அருந்தியதில்லை ஆனால் மருத்துவர் 10 நாட்களாக அவரை பரிசோதித்து அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர். 


ராம்பாவ் ஸ்வாமி என்ற பெயர் கொண்ட 63 வயதான மற்றொரு யோகி உணவும் நீரும் இன்றியே உயிர்வாழும் சக்தி பெற்றவர் நெருப்பில் படுத்துப் புரள்கிறார். தினமும் உலக நலன் வேண்டி அக்னி ஹோமம் செய்கையில் நெருப்புக்குள்ளேயே கையை விட்டு நெய்யில் உருட்டிய அன்னத்தை ஆகுதியாக இடுகிறார்.


அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எனும் திருவள்ளுவர் மொழி அறிவுறுத்துவதாவது தன்னுயிர் போல் மன்னுயிர் கருதி மற்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மையே செய்பவரே அந்தணர். ராமாயண காவியத்தில் ராமனுக்கு குருவாக அமைந்து திருமணம் நடத்தி வைத்த விஸ்வாமித்திரர் பிறப்பால் ஷத்திரியர். பின் மன்னராயிருக்கையில் வசிஷ்ட முனிவரின் சக்தியைக் கண்டு அவர் போல் தானும் பிரம்மரிஷியாக வேண்டும் எனத் தவம் செய்து உயர்வு பெற்று பிராம்மணரானார் என்பது பிரசித்தம். மேலும் தமிழைப் படைத்த அகத்தியர் அந்தணர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் ஒரு அந்தணர். பதினெட்டு சித்தர்களும் அந்தணர்களே. பெரியாரின் உற்ற தோழர் ராஜாஜி ஒரு அந்தணரே. அவர் மஹாத்மா காந்தியைத் தன் சம்பந்தியாக ஏற்றுக் கொண்டார். மஹாகவி பாரதியார் ஒரு அந்தணரே.

இவ்வாறு உலகுக்கும் தமிழுக்கும் உற்ற தொண்டு செய்வோர் பலர் அந்தணராயிருக்கையில் ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக அந்தணர்களை எதிர்த்து துர்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  தீண்டாமை என்பது தீமையே அது எந்த சாதியினருக்கெதிராக இருப்பினும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு சாதி மத வேற்றுமை களைந்து பாரதத் தாயின் புதல்வர்கள் எனும் ஓரே கொள்கையில் நிற்பதே அனைவர்க்கும் நலம் தரும்.

நாம் பொருளாசை, பெண்ணாசை, பதவி ஆசை போன்ற அற்ப ஆசைகளைத் துறந்து தவம் மேற்கொண்டோமாயின் நாமும் மேற்கண்ட யோகியர் போல சக்திபெற்று இறவா வாழ்வு வாழ்தல் சாத்தியமே. 

அத்தகைய ஞான மார்க்கத்தில் செல்ல நம் எல்லோருக்கும் தில்லையில் நடனமாடும் சிதம்பர நாதன் அருள் புரிவானாக.


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
ஆண்டு: 1942
ராகம்: கேதார கௌளளை, தாளம்: ஆதி

ஆனந்த நடமிடும் பாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 
கானம் தனைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன் 

தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 பக்தர்கள் முனிவர்கள் இமையோர்களும் புகழ் 
 பாடவும் குணசேர் சடைமதியாடவும் 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

சனி, 23 ஜனவரி, 2016

கருணை தெய்வமே கற்பகமே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 23, 2014

இவ்வுலகில் பூதவுடல் கொண்டு வந்து விழுந்த நாள் முதல் என்றென்றும் ஓர் நாளும் தவறிடாது இசையிலே மிதந்து என்தன் துயரெலாம் இசையென்னும் துணியினால் துடைத்தே வாழ்ந்து வருகிறேன். இசையில் நான் மேதையில்லை எனினும் பல இசைமேதைகள் வாய்ப்பாட்டும் வாத்தியங்கள் கொண்டும் வாசிக்கும் பாட்டெலாம் என் வாய்ச் சொற்கள் வழியினானும் மனதினுள்ளும் எப்போதும் வாசித்தே மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க, குடந்தை மாநகரில் குடியிருந்தேன் சில காலம் (1980 முதல் 1985 வரை) என் அண்ணனுடன். அப்பொழுதொரு சமயம் அருகிலுள்ள திருவையாறு நகரில் தியாகபிரம்மோற்சவம் நடைபெறக் கேட்டு அங்கே சென்று ஒரு நாள் முழுதும் 
பல பிரபல இசை மேதைகள் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் பொழிந்த இசை மழையில் சுகமாய் நனைந்து திரும்பினேன்.

சில காலம் கழித்து அக்குடந்தை மாநகர் தன்னில் நற்செயல் புரிந்து சேவை செய்வதே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழும் ஊர்ப் பெரியோர் ஒன்று சேர்ந்து தியாகராஜர் நினைவைப் போற்றும் விதமாகக் குடந்தையிலே ஓர் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அவ்விழாவில் டி.கே. பட்டம்மாள் அவர்களது சகோதரர் டி.கே. ஜெயராமன் மற்றும் மஹாராஜபுரம் சந்தானம் முதலான பல இசை மேதைகள் வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் தலைமையில் பங்குபெற்று இசை மழை பொழிந்தனர். இடையில் ஓர் அற்புதமான இசைக் கச்சேரியை அங்கு நான் கண்டும் கேட்டும் மனம் மிக மகிழ்ந்தேன். அது மாண்டொலின் ஸ்ரீநிவாசன் இசைமழை 
பொழிந்த கச்சேரி! என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத அளவு மகிழ்ச்சியை அடைந்த நாள் அன்று தான். 

மாண்டொலின் எனும் மேல் நாட்டு இசைக் கருவியில் நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க விஞ்ஞான ரீதியில் பன்னெடுங்காலமாக மேதைகள் பலர் கூடிப் பயிற்று வைத்த கர்நாடக சங்கீதத்தைக் கரைத்துக் குடித்த பத்துப் பன்னிரண்டு வயதே நிரம்பிய மேதையாம் ஸ்ரீநிவாசன் எனும் அச்சிறுவன் வாசித்த இசையைக் கேட்டு அங்கிருந்த மற்ற இசை மாமேதைகள் உட்பட மக்கள் கூட்டமும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் திளைத்து ஒவ்வொரு பாடல்முடிவிலும் இடையில் முக்கியக் கட்டங்களிலும் எழுப்பிய கரகோஷ ஒலி இன்னமும் என் காதுகளில் 
ரீங்காரமிடுகிறது.

அதன் பின்னர் 1985 முதல் 1995 வரை சென்னை மாம்பலம் மற்றும் அம்பத்தூரில் நான் என் மனைவியுடன் குடி புகுந்து வாழ்ந்து வந்தேன். 

1983 ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து பல்லாண்டுகள் குழந்தைப் பேறின்றியிருந்த நானும் என் மனைவியும் 

"நானொரு குழந்தை நீயொரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி 
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி"

என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி படத்திற்காகக் கவிஞர் வாலி இயற்றி டி,எம். சௌந்தரராஜன் பாடிய பாடலுக்கேற்ப அது குறித்துப் பெரும் கவலையேதும் கொள்ளாமல் வாழ்ந்து வரும் நாளில் என் மனைவி, பிள்ளைப் பேறு வேண்டிப் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வரலாமென அழைத்ததால் சென்றேன். அவ்வாறு செல்கையில் ஓர் நாள் வலசரவாக்கத்தில் உள்ள ஓர் ஆலயத்தில் தன் மனிவியுடன் வந்த ஸ்ரீநிவாசனைக் கண்டோம். அழகிய மனைவி. திருமணமாகி சில தினங்களே ஆகியிருக்கும் எனப் புரிந்து கொண்டேன். 

என்னைக் கண்டதும் புன்முறுவல் பூத்து அடையாளம் கண்டுகொண்டான் ஸ்ரீநிவாசன். வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்திச் சென்றோம். சில நாட்கள் கழித்துக் காஞ்சிபுரம் சென்று காஞ்சிமாமுனிவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி பெற்ற பின்னர் எனக்கொரு மகன் பிறந்தான். அதன் பின்னர் காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களது 100வது ஆண்டு நிறைவன்று அவருக்குத் தங்கக் காசுகளால் கனகாபிஷேகம் செய்வதைத் தொலைக் காட்சியில் ஓர் நாள் கண்ட பின்னர் காலத்தின் கட்டாயத்தால் காஞ்சியில் குடிபுகுந்தேன். காஞ்சியில் இருக்கும் கோவில்களிலும் சங்கர மடத்திலும் ஆண்டாண்டு தோறும் ஸ்ரீநிவாசனின் மாண்டொலின் கச்சேரி தவறாது இடம் பெற்று வருவது வழக்கம். என் மகன் அவனது பரம ரசிகன். கச்சேரி எப்பொழுது நடந்தாலும் தவறாது சென்று முழுவதும் கேட்டுப் பின்னர் ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சில நிமிடங்கள் அளவளாவி விட்டே வீடு திரும்புவது என் மகனின் வழக்கம்.

என் மகனுக்கொப்பான அந்த மாமேதை ஸ்ரீநிவாசனின் மரணச் செய்தி கேட்டு மனம் மிகவும் நொந்தேன். நான் தமிழ் இலக்கணம் படித்திருந்தாலும் ஒரு கவிஞன் என்று சொல்லுமளவு பயிலவில்லை. இருப்பினும் என் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவிதை வடிவிலே ஸ்ரீநிவாசன் நினைவுக்காக அர்ப்பணிக்கிறேன்.

குடந்தையில் வாழ்ந்தகாலை கோபுரத் தரிசனம் பல்
குறையிலாக் கலைகள் கோவில் பூசைகள் தேரோட்டங்கள்
திருவிழாக் கோலம் பூண்ட உலகினில் மகிழ்ந்த நாளில்
திருவையாறு சென்றே தியாகபிரம்மோற்சவம் கண்டேன்.

தியாகோற்சவம் முடிந்து சிலதினம் கழிந்த காலம் 
தியாகராஜர் நினைவில் நடந்ததோர் இசைவிழா அக்
குடந்தைமா நகரிலேயே கொண்டாட்ட மாகவன்றோ!
அவ்விழா தன்னிலேயோர் பாலகன் இசைத்தான் அந்த

மாண்டொலின் என்று சொல்லும் கருவியில் நம் சங்கீதம்
மனதிலே மகிழ்ச்சி பொங்க ரசித்திட்டேன் இசைவிழாவை
மாண்டொலின் ஸ்ரீநிவாசன் மனம்குடி புகுந்தான் பின்னர்,
நீண்டநாள் கழிந்தகாலை காஞ்சிமாநகரில் வாழ்ந்தேன்.

காஞ்சியின் கோவில் மற்றும் காஞ்சிமா முனிவர் வாழும்
கடவுளர் தொழுதென்றேத்தும் மடமதில் அவ்வப்போழ்து
மீண்டுமக் கருவிதன்னை மீட்டியே இசை பொழிந்தான்
மாண்டொலின் கருவி கண்ட மாமேதை ஸ்ரீநிவாசன்!

கலைமகள் ஈந்த மைந்தன் கண்மணி போன்ற பிள்ளை
கைகளில் மந்திரத்தை வைத்தது யார் என்றெண்ணி
மலைத்திட்ட காலமுண்டு முன்பொரு சமயந்தன்னில்
மலைப்புமே நீங்கி மைந்தன் இசையிலே மகிழும் நாளில்

திருமணம் முடிந்த பின்னர் இறவனின் அருளை வேண்டி
இருவரும் வந்த அந்த ஆலயம் தன்னில் என்றன்
மனவியும் நானும் வந்த சமயத்தில் என்னைப் பார்த்தே
மனமகிழ்ச் சிரிப்பு ஒன்றால் அறிந்திட்டான் என்னை மைந்தன்.

வாழ்கவே மனிவியோடும் பன்னெடுங்காலம் என்றே
வாழ்த்தினேன் அன்று பின்னர் ஒரு சில ஆண்டு காலம்
கடந்திற்றே கவலையேதும் இன்றியே வாழ்க்கை செல்ல
காலனின் கழுகுக் கண்கள் கடிதென வீழ்ந்ததாலோ

மைந்தனும் மனிவியோடு வாழ்ந்திட இயலாதென்னும்
மாபெரும் துன்பம் வந்தே மகனுமே துயரிலாழ்ந்தான்
இப்படிச் சிறிது காலம் ஏக்கமே மனதில் கொண்டே
இருந்திருந்தென்றும் வாடி என்ன செய்தானோ மைந்தன்?

திடுமென ஓர்நாள் அந்தச் செய்தியும் வந்ததே அத்
தீமையே தந்த செய்தி திடுக்கிட வைத்ததே என்
சிந்தையும் கலங்கிச் செய்கை மறந்திடும் நிலைவந்தே நான்
சிலையென ஆனேன் என்னுள் செய்வதறியாமையாலே.

"மாண்டொலின்" என்னும் சொல்லே மாண்டது இன்றே யென்று
மாபெரும் கலைஞன் சங்கர் மஹாதேவன் சொல்லக் கேட்டு
மனதிலே துயர வெள்ளம் மடைதிறந்தோடக் கண்டேன்;
மயக்கத்தில் மதியிழந்தேன் மற்றெஃதும் நாடா நின்றேன்.

இசையிலே மூழ்கி என்றும் உலகினை மறந்திருந்தேன் 
இம்சைகள் ஒன்றே சேர்க்கும் அரசியல் மறக்கவென்றே;
இசையில் நான் வந்ததாலே ஏற்பட்ட மாற்றமிஃதோ?
என் விதி இசையுமிங்கே மாண்டதே இனி என் செய்வேன்?

அம்மாமேதை ஸ்ரீநிவாசன் இசைத்த பாடலொன்றை இன்றைய பாடலாகத் தருகிறேன். கருணை தெய்வம் கற்பகவல்லி அம்மேதைக்கு முக்தியளித்து அருள வேண்டுகிறேன்.



ஆல்பம்: நேயர் விருப்பம்
பாடல்: கருணை தெய்வமே
இயற்றியவர்: மதுரை ஸ்ரீநிவாசன்
ராகம்: சிந்து பைரவி - 10 நாடகப்பிரியா ஜன்யம்
தாளம்: ஆதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ நி2 ஸ்

பல்லவி:

கருணை தெய்வமே கற்பகமே!
கருணை தெய்வமே கற்பகமே!
காண வேண்டும் உன்தன் பொற்பதமே என்
கருணை தெய்வமே கற்பகமே!

அநுபல்லவி:

உறுதுணையாகவென் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வெறே யாரோ என் தாய்

சரணம்:

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்;
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்;
நானும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்;
நலமுடன் வாழ அருளல் வேண்டும்.

வியாழன், 21 ஜனவரி, 2016

என் நெஞ்சு உன்னையகலாது

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 17, 2014
மனிதர்களுடன் பழகுவதை விட மரம், செடி, கொடிகளுடனும் விலங்குகளுடனும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாகும். மனிதர்கள் பெரும்பாலும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பழகுவதால் அவர்களது சுயநலம் நமக்குத் தெரிகையில் மனம் துயரப்படுகிறது, ஆனால் மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகிய உயிர்கள் வாய் விட்டுப் பேசுவதில்லையானாலும் மௌன மொழியில் அவை பேசும் செய்திகளை நாம் பழகப் பழக அறிந்து கொள்ளலாம். அத்தகைய அறிவு நாம் ஒவ்வொருவரும் பெறத் தக்கதே. மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளின் பாஷை நமக்குப் புலப்பட்டு நாம் அவர்களுடன் மனம் விட்டுப் பழகப் பழக சொர்க்கமே தெரியும் என்பதை இயற்கை விஞ்ஞானிகளும், மிருகங்கள் நலம் பேணும் ஆர்வலர்களும் அறிவர். 

மரங்கள் வெயிலில் வாடுவோர்க்கு நிழல் தரும். மழையில் நனைவோருக்கு ஒதுங்க இடமளிக்கும். மரங்கள் பகலில் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) இலைகளில் வழியே உட்கிரகித்துப் பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியிடுவதால் காற்றை சுத்தம் செய்து ஆரோக்கியம் பெருக உதவுகின்றன. மேகங்களை ஈர்த்து மழையுண்டாகச் செய்வதுடன் பல்விதமான, காய்கள், கனிகள், மலர்கள் முதலிய அரிய பொருட்களை நமக்குத் தருகின்றன. புளிய மரம், மாமரம், பலா மரம், கொய்யா மரம், ஆப்பிள் மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், வாழை மரம் எனப் பலவகை மரங்கள் காய் கனிகள் தருகின்றன. வாத நாராயண மரம், வன்னி மரம், புன்னை மரம் முதலியவை அழகிய மலர்களைச் சொரிந்து இயற்கையை வளமாக்குகின்றன. தேக்கு, வெண் தேக்கு போன்ற மரங்கள் மேசை, நாற்காலிகள், கதவுகள் போன்ற பொருட்களைச் செய்ய உதவுகின்றன. பல வித மரங்கள் சிற்ப வேலைப்பாடுகள் செய்ய உதவுகின்றன. கருவேல மரம் போன்ற பல மரங்கள் விறகாக எரிக்க உதவுகின்றன. சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு உதவுகின்றன.

மரங்களைப் போலவே செடி கொடிகளும் பல்வேறு வகையான கறி காய்கள், பழங்கள், மலர்கள் முதலியவற்றைத் தருவதுடன் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி மாசின்றிப் பாதுகாக்கின்றன.

மிருகங்கள் நம்முடம் எளிதில் பழகாவிட்டாலும் பழகிய பின்னர் அவை நம் மீது பொழியும் அன்பு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குத் தூய்மையாகவும், இன்பம் தருவதாகவும் அமையும். மிருகங்கள் நிறைந்த வனப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையாகவே அன்பு நிறைந்தவர்களாக இருப்பர். அதிலும் குறிப்பாக மனிதர்களே இல்லாத வனப்பகுதியில் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் மிருகங்களுடன் பழகி வாழ்வதால் அவர்கள் மனதிலும் கள்ளம் கபடு இரா. உண்மை அன்பை அத்தகைய மனிதர்கள் நிச்சயம் தருவர்.

ஆதிகாலத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களுடன் ஒன்றாய் வாழ்ந்த நிலை மாறிக் காடுகளை அழித்து வீடுகள் கட்டி வாழத் தொடங்கிய நாள் முதல் அவர்களுள் போட்டி பொறாமைகளும், பொய் சூது சூழ்ச்சிகளும் பெருகிவிட்டன. மனிதனின் மனதில் கள்ளத்தனம் குடிபுகுந்தது. மற்றவரை ஏய்த்துப் பிழைக்க அவன் தெரிந்து கொண்டான். அதனால் நகரங்களில் வாழும் அனைவரது வாழ்க்கையும் நரகமானது. 

அத்தகைய நகரமொன்றில் வாழும் குடும்பத்திலிருந்து ஒரு இளம் பெண் வனத்தில் மாட்டிக் கொள்கிறாள். எதிர் பாராத விதமாக அவ்வனத்தில் தனியே வாழும் வாலிபன் ஒருவனின் துணை அவளுக்குக் கிடைக்கிறது. அவளை அவன் அன்புடன் பாதுகாக்கிறான். அவள் பேசும் மொழி அவனுக்குத் தெரியவில்லையாயினும் அவளது மனதின் மொழியை அவன் அறிந்து அவளிடம் அளவிடற்கரிய அன்பைச் செலுத்துகிறான். அவள் அவன் மேல் அன்பு கொண்டு தன் மொழியை அவனுக்குக் கற்பிக்கிறாள். அவனை நாளடைவில் மனதாரக் காதலிக்கிறாள். 

அவனுடன் வனமெங்கும் சுற்றித் திரிந்து மகிழ்கிறாள். யானை மேல் அவனுடன் ஒரு ராணிபோல் பவனி வருகிறாள். உள்ளமும் உள்ளமும் ஒன்றொடொன்று இணைந்த காதலின் இன்பம் எல்லையில்லாததல்லவா? 

அத்தகைய காதலை வெளிப் படுத்தும் பாடல் இதோ பி. சுசீலா அவர்களின் இனிய குரலில் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படத்தில்:



திரைப்படம்: நகரத்தில் ஜிம்போ
இயற்றியவர்: குயிலன்
இசை: சித்ரகுப்த்
பாடியவர்: பி. சுசீலா
 
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

அருவியில் ஆடி நாமே ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விழுந்தே நல்ல மணத்தைப் பரப்பும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
ஆரமுதை நீரனையே அள்ளிநிதம் பருகும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ ஆஅ

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 13, 2014
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தன் பலஹீனத்தை முழுதும் உணர்ந்திருந்தான். தான் வாழும் காலம் மிகவும் குறுகியதே என்றும் தான் ஒரு நாளல்லது ஒரு நாள் இவ்வுலகை விட்டுச் செல்வது நிச்சயம் என்றும் தெளிவாக அறிந்திருந்தான். அத்துடன் உலகில் பிறப்பெடுத்த ஜீவராசிகள் படும் அவஸ்தைகளைக் கண்கூடாகக் கண்டான். அதே போன்ற அவஸ்தைகளைத் தானும் தன் சுற்றத்தாரும் படுவதையும் கண்டான். அத்தகைய துன்பங்களைத் தாங்கத் தேவையான மனோவலிமையை அடைய மனிதன் வழிதேடினான்.

அத்தகைய தேடலினால் தோன்றியதே இறை வழிபாடாகும். தன்னையும் பிற உயிர்களையும் படைத்த ஏதோ ஒருசக்தி அனைவரையும் காத்தும் அழித்தும் அருள்புரிவதை மனிதன் உணர்ந்ததாலேயே அச்சக்தியை தெய்வமெனக் கொண்டு பூஜித்தான். அத்தகைய பூஜையில் தன் மனம் அமைதியடைவதையும் துன்பங்களைத் தாங்கும் வலிமை தன் மனதிற்கு அப்பூஜையின் பலனாகக் கிடைப்பதையும் அவன் உணர்ந்தான். அத்தகைய தெய்வ பக்தியைத் தன் சந்ததியினருக்கும் ஊட்டி அவர்களும் தெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்வதை வலியுறுத்தினான். 

நாமும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய பாதையில் சென்று தெய்வ வழிபாட்டை வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகக் கருதி ஆலயங்களிலும், இல்லங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் இறை வழிபாட்டுக்குப் பிரதான இடமளித்து என்றும் எங்கும் அமைதி நிலவி நன்மை விளையப் பிரார்த்தனை செய்கிறோம்.

பண்டைக் காலத்திலிருந்தே புலவர்கள் கவிதைகளையும் காவியங்களையும் இயற்றுகையில் முதற்கண் இறைவன் அருளை வேண்டிச் சில வரிகள் புனைந்த பின்னரே ஏனைய பகுதிகளைப் புனைந்து வருவது மரபாயிற்று. எனது நினைவுக்கெட்டிய வரை இதுவரை நானறிந்த புலவர்கள் யாவரும் இறைவனைத் தம் தலைவனாகவும், குருவாகவும் வழிபட்டு இறையருள் தமக்கு எளிதாகக் கிட்டும் என்று நம்பினர். இறைவன் கேட்ட வரங்களைத் தருபவனாகவே சித்தரித்திருக்கின்றனர். இறைவன் தன் அருளை அடியார்களுக்கு எவ்விதப் பிரதியுபகாரமும் எதிர்பாராமலேயே அருள்கிறான். 

மனிதன் தன் பிரியத்தினால் இறைவனுக்குத் தேங்காய், பழங்கள், பக்ஷணங்கள் என விமரிசையாக ஒரு படையல் செய்து நிவேதனம் செய்கின்றான். அவ்வாறு நிவேதனம் செய்த பண்டங்களைத் தன் சுற்றத்தாரும் பிற மாந்தர்களும் அருந்தக் கொடுத்து ஆண்டவனுக்குக் கொடுத்ததாகவே பாவித்து மகிழ்ச்சியடைகிறான். இதன் ரகசியமாவதுஒருவன் எல்லையில்லாத ஆனந்தத்தை அடைவது பிறருக்கு ஏதேனும் உதவி செய்வதிலும், ஏதோ சில பொருட்களைக் கொடுப்பதிலும் என்பதுவே ஆகும்.

இருப்பினும் உழைத்து வாழும் முறையை நிலைத்து நிற்கச் செய்யவும் உலகம் சோம்பலின்றி இயங்கவும் மனிதன் ஆதிகாலத்தில் பண்ட மாற்று முறையிலும் பின்னர் நாகரிகம் வளர்ந்த பின்னர் பணம் கொடுத்தும் தனக்கு எந்த ஒருதருணத்திலும் தேவைப் படும் பொருளையும் பிறரிடமிருந்து வாங்கிக்கொள்ளும் வியாபாரத்தை அமைத்தான். 

புலவர்கள் பலர் இறைவனைத் தன் தந்தையாகவும், தாயாகவும், பிள்ளையாகவும் மற்றும் பல உறவினர்களாகவுமே எண்ணி அதன்படியே தன் கவிதைகளை உருவாக்கி வந்துள்ளனர்.

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, 
அன்புடைய மாமனும் மாமியும் நீ, 
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ, 
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, 
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப்பொன் நீ, இம்மணி நீ, இம்முத்தும் நீ, 
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன்நீயே!

என்று அப்பர் பாடியுள்ளார். இப்பாடலை தவறாமல் தினம்தோறும் காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் என் தந்தை பூஜை செய்கையில் பாடக் கேட்டுள்ளேன்.

தற்காலப் புலவர் ஒருவர், அற்புதமான பல பாடல்களை அன்று முதல் நேற்று வரை எண்ணிறந்த தமிழ்த் திரைப் படங்களுக்கு எழுதியவர், ஒரு பாடலில் இறைவனை ஒரு வியாபாரியாக வர்ணித்து மனிதர்கள் தமக்கு வேண்டிய பொருளை விற்பனை செய்ததாகக் கற்பித்து எழுதியுள்ளார். இறைவன் எதையும் இலவசமாகத் தருவதில்லை. அவரவற்கேற்ற விலைக்கே தருவதாக உண்மை நிலையை உணர்த்தி மனிதனின் குணாதியத்தை அருமையாக அப்பாடலில் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.



திரைப்படம்: டெல்லி மாப்பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் வேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை ஹஹஹஹஹ
அன்பை வாங்கிட எவருமில்லை!

திங்கள், 18 ஜனவரி, 2016

வாழ்வது என்றும் உண்மையே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 12, 2014
வெற்றி என்பது யாது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறியோம். அதனாலேயே பல சமயங்களில் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் தவிக்கிறோம். நாம் கற்ற கல்வி பெரும்பாலும் பொருளீட்ட வழி வகுக்கும் கல்வியாகவே இருப்பதால் ஏற்பட்ட குறைபாடு இது. வாழ்க்கை என்பது என்ன என்று நாம் அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. இத்தகைய அறியாமையே நம் மனதில் உறுதியற்ற நிலையை உருவாக்கி சந்தேகக் கண் கொண்டே அனைத்தையும் பார்க்கும் மனோபாவம் வளர்கின்றது. மனிதனின் மனதில் வளரும் பாப சிந்தனைகளுள் மிகக் கொடியது சந்தேகம் ஆகும். சந்தேகத்தினால் உறவுகள் முறிகின்றன. நண்பர்கள் பிரிகின்றனர். கணவன் மனைவியிடையே தாம்பத்யம் சுவையாக இல்லாமல் வேண்டா வெறுப்பாகவே வாழும் நிலை ஏற்படுகிறது. பெற்ற பிள்ளைகளைப் பெற்றோர் நம்புவதில்லை. அதனாலேயே தாம் சேர்த்து வைத்த பொருளில் பெரும் பகுதியை ஏமாற்றிப் பிழைக்கும் நிதி நிறுவனங்கள் போன்ற இடங்களில் மூலதனம் செய்து ஏமாறுகின்றனர். பிள்ளைகள் எங்கே தங்களை வயதான காலத்தில் உரிய மருத்துவ உதவிகள் தராது கொன்று விடுவார்களோ என அஞ்சி வீட்டை விட்டு அநாதைகளாய்த் தெருவில் வசிக்கும் பெற்றோர்களைப் பற்றி செய்தித் தாள்களில் வாசித்திருக்கிறேன்.

நாட்டை ஆள நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் நேர்மையானவர்களா, சொன்ன சொல் தவறாதவர்களா, மக்கள் நலனை முக்கியமானதாகக் கருதுபவர்களா என்று ஆராயத் தவறுகிறோம். ஏனெனில் நம் மனதில் உண்மை இல்லாததால் பிறரைப் பற்றிய உண்மையை அறிய நம்மால் இயல்வதில்லை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றிப் பதவியைக் கைப்பற்றும் மனிதர்கள் விரைவில் உண்மை வெளியாகி மக்களால் மதிக்கப்படாத இழிநிலையை அடைவதை நாம் தினமும் கண்ணால் காண்கிறோம், காதால் கேட்கிறோம். இருப்பினும் தொடர்ந்து அத்தகைய பொய்யர்களையே தொடர்ந்து ஆட்சியில் அமர்த்துகிறோம். அவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைப் பார்த்து மகிழ்கிறோம். நம் வீட்டில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்துப் போய் அப்பணத்தில் நாம் வசிக்கும் தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்ய ஒரு திருடன் துணிவானாகில் அக்கடையில் நாம் வியாபாரம் செய்வோமா? 

ஆனால் நாட்டைக் கொள்ளையடித்து சுருட்டிய பணத்தில் தொலைக்காட்சிகள் நடத்துவதை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை? நம் வீட்டில் பணமிருந்தால் போதும், நம் வீட்டிலுள்ளோர் நலமாக இருந்தால் போதும், நாடு எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன எனும் குறுகிய மனப்போக்கே இதற்குக் காரணம்.

உலக சரித்திரத்தையும் ஒவ்வொரு நாட்டின் சரித்திரத்தையும், பல தலைவர்கள் சரித்திரத்தையும் படிக்கையில் நாம்ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது பொய் நிலைக்காது. என்றாவது ஒரு நாள் பொய்யர்களின் சுயரூபம் வெளிப்பட்டே தீரும். ஆனால் உண்மை என்றும் நிலைக்கும். என்றும் உண்மை ஒன்றே பேசும் உத்தம குணமுள்ள தலைவர்களை மக்கள் தெய்வங்களாகப் போற்றித் தம் மனதில் நிலைநிறுத்தித் தொழுகின்றனர். ஊழல் செய்யும் மனிதர்களும் அத்தகைய தலைவர்களைத் தவறாது போற்றி வணங்கி, அவர்களது சிலைகளை அமைத்து அச்சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்து நற்பெயர் தேடி அதன் மூலம் மக்களை ஏய்க்க முயல்கின்றனர். 

ஆனால் இத்தகைய வேஷம் ஒரு நாள் வெளிப்படும். உண்மை ஒரு நாள் வெளியாகும். அன்றே இந்த உலகம் சுபிட்சமடையும். அது வரையில் துன்பங்களே பெருகும். இன்பம் எட்டாக் கனியாகவே இருக்கும்.

உண்மையான வெற்றியாவது பிறரது மனதில் இடம் பிடிப்பதேயாகும். அதற்கு ஓரே வழி உண்மை! உண்மையே பேசும் ஒருவனை அவனது நண்பர்கள் மிகவும் நேசிப்பது உறுதி. உண்மை ஒருவனிடம் இருக்குமெனில் அவனது பிற எத்தகைய குறைபாடுகளும் நீங்கிவிடும். உண்மை என்றும் வெற்றி பெறும். அரிச்சந்திரன் கதையும் மஹாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறும் இதற்கு உதாரணங்கள் ஆகும். உண்மை பேசும் குணமுள்ள உறுதியான மனம் படைத்த யாரும் எக்காலத்தும் எக்காரணம் கொண்டும் பொய்யுரைக்க மாட்டார் என்பதை உண்மை பேசும் குணமுள்ளோர் உணர்வார். உண்மையே பெரிதென மதிப்பவர் உயிரே போனாலும் உண்மையைக் கைவிடார். பொய் பேசித் திரிவோர் ஒரு நாளும் உண்மையை உணரார். உண்மை பேசி, நன்மையையே செய்யும் ஒருவர் விதிவசத்தால் பெருந்துன்பமுற நேரிடுகையில் அவருக்கு தெய்வாதீனமாக, உற்றார், உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி முன் பின் 
தெரியாதவர்களிடமிருந்தும் உதவிகள் தானாக வந்து சேரும். 

நிரந்தரமான புகழுக்குரிய வெற்றி பெற வேண்டுமெனில் உண்மை பேசுவதும், உண்மையாய் நடப்பதும் அவசியம். வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே! தாழ்வது முடிவில் தீமையே! இது சத்தியம்! உண்மைக்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கலாகாது. நாம் உண்மையாளராக இருப்பின் நல்லோர் யாரும் நம்மால் பாதிப்படைய மாட்டார்கள். மாறாக அனைவரும் நன்மையையே அடைவார்கள். அதனால் நம் மீது பிறர் வைக்கும் அன்பு நாளுக்கு நாள் உயரும். நாம் இறந்த 
பின்னரும் நம்மை அன்புடன் நினைவு கூர்ந்து நம் வாழ்க்கை முறையைப் பின்பற்றி யாவர்க்கும் நன்மை உண்டாகப் பாடுபடுவார்கள். 

எல்லோரும் இன்புற்றிருக்க ஒரே வழி உண்மையே!




திரைப்படம்: ராஜா மலையசிம்மன்
இயற்றியவர்: அ. மருதகாசி
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்
ஆண்டு: 1959

ஆஹஹாஹா ஆஹஹாஹா ஆஹஹஹா ஆஹாஹாஹா ஓஹொஹோஹோஹோ

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
வாழ்வது என்றும் உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
வெற்றியின் பாதை தெரியுதடா! வீணர்கள் கோட்டை சரியுதடா!
எட்டுத் திசையும் கொண்டாடவே எகிரிப் பாய்ந்தே முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்றும் உண்மையே!

தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
தீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது
பாதையே நீயும் கூடாது பார்த்திடலாமோ முன்னேறடா!
முன்னேறடா முன்னேறடா! முன்னேறடா முன்னேறடா!

வாழ்வது என்பது உண்மையே! வளர்வது என்றும் நன்மையே!
தாழ்வது முடிவில் தீமையே! தயக்கம் வேண்டாம் முன்னேறடா!

முன்னேறடா முன்னேறடா!